குரூப் - 1 தேர்வில் 49 சதவீதம் பேர் ஆப்சென்ட் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, January 3, 2021

குரூப் - 1 தேர்வில் 49 சதவீதம் பேர் ஆப்சென்ட்

 குரூப் - 1 தேர்வில் 49 சதவீதம் பேர் ஆப்சென்ட்


தமிழகத்தில் நேற்று நடந்த, 'குரூப் - 1' தேர்வில், 49 சதவீதம் பேர் பங்கேற்கவில்லை. டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளில், அதிகம் பேர் பங்கேற்காமல், 'ஆப்சென்ட்' ஆனது இதுவே முதல் முறை.


தமிழக அரசு துறைகளில், காலியாக உள்ள துணை கலெக்டர், டி.எஸ்.பி., உள்ளிட்ட, 66 பணியிடங்களை நிரப்ப, டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 1 தேர்வு, கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது.


 கொரோனா பரவலால் தள்ளி வைக்கப்பட்டு, இந்த தேர்வு நேற்று நடந்தது.தேர்வுக்கு மொத்தம், 2.57 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். அவர்களில், 1.28 லட்சம் பேர் பெண்கள்; 11 பேர் மூன்றாம் பாலினத்தவர்.தமிழகம் முழுதும், 856 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன.


சென்னையில், 153 மையங்களில், 47 ஆயிரம் பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.'சானிடைசர்' பயன்பாடுதேர்வர்கள் காலை, 9:15 மணிக்கு மையத்துக்குள் அனுப்பப்பட்டனர்; 


10:00க்கு தேர்வு துவங்கி, 1:00 மணி வரை நடந்தது.தேர்வர்கள், 'ஹால் டிக்கெட்'டுடன் கருப்பு நிற பால் பாய்ன்ட் பேனா மட்டும், தேர்வு அறைக்குள் எடுத்து செல்ல அனுமதிக்கப்பட்டனர்.'மாஸ்க்' அணிந்தவர்கள்மட்டுமே, தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.


 மையத்திற்குள் செல்லும் போதும், தேர்வு அறையில் அமர்ந்த பிறகும்,சானிடைசர் வழங்கப்பட்டு, கைகளை சுத்தம்செய்ய தேர்வர்கள் அறிவுறுத்தப்பட்டனர்.


மொபைல் போன், வாட்ச் மற்றும் புத்தகங்கள் போன்றவற்றை, தேர்வு அறைக்குள் எடுத்து செல்ல அனுமதிக்கப்படவில்லை.


தேர்வர்கள் உரிய இடைவெளியுடன் அமர வைக்கப்பட்டனர். பல தேர்வு மையங்களில், தேர்வு நடைமுறைகள் வீடியோவில் பதிவு செய்யப்பட்டன.நேற்றைய தேர்வில், விண்ணப்பித்த, 2.57 லட்சம்பேரில், 49 சதவீதம்பேர், அதாவது, 1.26 லட்சம் பேர் தேர்வில் பங்கேற்கவில்லை; 1.31 லட்சம் பேர் மட்டுமே தேர்வெழுதினர்.


பொதுவாக, டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் தேர்வுகளில், 75 முதல் 85 சதவீதம் பேர் பங்கேற்பது வழக்கம். கொரோனா பாதிப்புக்கு பின், முதல் முறையாக நடந்த இந்த தேர்வில், 49 சதவீதம் பேர் பங்கேற்கவில்லை. இதற்கான காரணம் குறித்து, டி.என்.பி.எஸ்.சி., அதிகாரிகள் விசாரணையை துவங்கியுள்ளனர்.


விடைத்தாளில் கைரேகை பதிவு டி.என்.பி.எஸ்.சி.,யின் புதிய தேர்வு நடைமுறைகள் நேற்றைய தேர்வில் இருந்து துவங்கிஉள்ளன. அதாவது, எத்தனை கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட்டது; 


எத்தனை கேள்விகள் விடுபட்டுள்ளன என்பதை, தேர்வர்கள், தங்கள் விடைத்தாளில், தனியாக குறிப்பிட வேண்டும். விடை தெரியாத கேள்விகளை குறிப்பிடுவதற்கு, தனியாக ஐந்தாவது, 'சாய்ஸ்' வழங்கப்பட்டது தேர்வர்கள், தங்களின் அடையாளத்தை உறுதி செய்யும் வகையில், விடைத்தாளில் இடது கை பெருவிரல் ரேகை பதிவை, இரண்டு இடங்களில் பதிய வைக்கும் நடைமுறையும், நேற்று முதல் அமலுக்கு வந்தது.


வினாத்தாள் எளிது 'குரூப் - 1' தேர்வு வினாத்தாளில், நேற்று ஓரளவுக்கு பரிச்சயமான பதில்கள் உள்ள கேள்விகள் அதிகம் இடம் பெற்றதாக, தேர்வர்கள் தெரிவித்தனர் 


மார்க்சிஸ்ட் கம்யூ., எம்.பி., வெங்கடேசன், 'சாகித்ய அகாடமி' விருது பெற காரணமான புத்தகம் தொடர்பான கேள்வி இடம் பெற்றது. ஜாதி பிரச்னையை மையமாக வைத்து தயாரிக்கப்பட்ட, பரியேறும் பெருமாள் என்ற, தமிழ் திரைப்படம் தொடர்பாகவும் கேள்வி இருந்தது.

No comments:

Post a Comment