ரூ .1000 கூட ஊதியம் இல்லாமல் அரசு தொடக்கப் பள்ளிகளில் பணிபுரியும் துப்புரவுப் பணியாளர்கள் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, January 27, 2021

ரூ .1000 கூட ஊதியம் இல்லாமல் அரசு தொடக்கப் பள்ளிகளில் பணிபுரியும் துப்புரவுப் பணியாளர்கள்

 ரூ .1000 கூட ஊதியம் இல்லாமல் அரசு தொடக்கப் பள்ளிகளில் பணிபுரியும் துப்புரவுப் பணியாளர்கள்


தமிழகத்தில் தொடக்கக் கல்வித் துறையில் உள்ள 30,798 பள்ளிகளில் துப்புரவுப் பணியாளர்கள் ரூ.1000 கூட ஊதியம் இல்லாமல் ஓராண்டாக பணிபுரிந்து வருகிறார்கள். தமிழக அரசு இப் பணியாளர்களின் நிலைமையைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு முறையான காலமுறை ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது


தமிழகத்தில் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் 23,939 ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளும், 6,859  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளும் உள்ளன. இப் பள்ளிகளில் துப்புரவுப் பணிகள், கழிப்பறைகள் சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொள்ளுவதற்காக 2016 ஜனவரி மாதம் முதல் பள்ளி மேலாண்மைக் குழுவின் ஒப்புதலுடன் ஒரு பணியாளரை நியமித்துக்கொள்ளக் கல்வித் துறை உத்தரவிட்டது. 


தொடக்கப் பள்ளியில் துப்புரவுப் பணியை மேற்கொள்ளுவோருக்கு மாதம் ரூ.1000மும், நடுநிலைப் பள்ளிகளில் துப்புரவுப் பணிகளை மேற்கொள்ளுவோருக்கு மாதம் ரூ.1500ம் ஊதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இவர்களுக்கான ஊதியத்தை 4 மாதத்திற்கு ஒருமுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் மூலம் பள்ளி மேலாண்மைக் குழு கணக்கில் வரவு வைக்கப்பட்டு, துப்புரவுப் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டு வந்தது.


இந்நிலையில் 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குப் பின்னர் இவர்களுக்கு இந்த சொற்ப ஊதியமும் வழங்கப்படவில்லை. இப்பணியாளர்கள் இந்த கரோனா காலத்திலும் தினமும் பள்ளிக்கு வந்து வகுப்பறைகள், கழிப்பறைகள், பள்ளி வளாகத்தைத் துப்புரவு செய்யும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டுவருகின்றனர்.


இது குறித்து பண்ணை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் துப்புரவுப் பணியில் ஈடுபட்டுள்ள வீரலட்சுமி புதன்கிழமை கூறியதாவது:


பள்ளியில் இப்பணியை மேற்கொள்ளுவதால் வேறு கூலி வேலைக்குக் கூட செல்ல இயலவில்லை. காலையில் கழிப்பறைகள், வகுப்பறைகள், பள்ளி வளாகம், பள்ளியின் முன்புறம் உள்ளிட்ட பகுதிகளைத் துப்புரவு செய்ய வேண்டும். மதியம் மாணவர்கள் சத்துணவு சாப்பிட்ட பின்னர் சாப்பிட்ட இடத்தை துப்புரவு செய்ய வேண்டும். இவ்வளவு பணிகளைச் செய்தாலும் ஒரு நாளைக்குக் கூலி ரூ.33 மட்டும். இதனை வைத்து குடும்பத்தை நடத்துவது என்பது கனவில் கூட நினைத்துப் பார்க்க இயலாது.


கடந்த 11 மாதமாக இந்த ஊதியமும் வரவில்லை. இந்த வேலை அரசு வேலையாக மாறிவிடும். குறைந்தது ஊதியம் மாதம் ரூ.12 ஆயிரமாக தருவார்கள் என்ற ஒரு தைரியத்தில் தான் இப்பணியைத் தொடர்ந்து செய்து வருகிறேன். வேலைக்கேற்ற ஊதியம் என்று சொல்லும் இக்காலத்தில் என்னைப் போன்று தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 31 ஆயிரம் துப்புரவுப் பணியாளர்களின் நிலையை யாரும் அறியவில்லை. தமிழக அரசு உடனே தனிக் கவனம் செலுத்தித் தொடக்கக் கல்வித் துறையில் கீழ் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் துப்புரவுப் பணியாளர்களுக்கு கெளரமான ஊதியம் மற்றும் நிரந்தரப் பணி வழங்க வேண்டும் என்றார்

No comments:

Post a Comment