2, 3-ம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடக்கம்: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு - Minnal Kalvi Seithi

Breaking

Friday, January 22, 2021

2, 3-ம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடக்கம்: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

 2, 3-ம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடக்கம்: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு


தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரி 2, 3-ம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் பிப்ரவரி 18-ம் தேதி முதல் ஆன்லைனில் தொடங்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.


தமிழகத்தில் கரோனா பரவலைத் தடுக்கும் விதமாகக் கடந்த மார்ச் மாதம் முதல் கல்லூரிகள் மூடப்பட்டன. மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகளை நடத்த அறிவுறுத்தப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டு நடத்தப்பட்டன. செமஸ்டர் தேர்வுகளும் ஆன்லைன் முறையிலேயே கடும் கட்டுப்பாட்டுகளுடன் நடத்தப்பட்டன.


ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து, இறுதியாண்டு மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் டிசம்பர் 6-ம் தேதி தொடங்கப்பட்டன. 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்காகப் பள்ளிகளும் கடந்த 19-ம் தேதி அன்று திறக்கப்பட்டன. எனினும் பொறியியல் கல்லூரி 2 மற்றும் 3-ம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் பிப்ரவரி 18-ம் தேதி முதல் ஆன்லைனில் தொடங்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழக அறிவிப்பின்படி, மே 21-ம் தேதி வரை வகுப்புகள் நடக்கவுள்ளன. பொறியியல் இரண்டாம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் மே 24-ம் தேதி முதல் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் ஜூன் 2-ம் தேதி முதல் செமஸ்டர் தேர்வுகள் நடக்கவுள்ளதாகவும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இதேபோல இறுதியாண்டு மாணவர்களுக்கு பிப்ரவரி 14 முதல் ஏப்ரல் 12-ம் தேதி வரை வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. இறுதியாண்டு மாணவர்களுக்கு ஏப்ரல் 15-ம் தேதி முதல் செய்முறைத் தேர்கள் தொடங்குகின்றன, ஏப்ரல் 26-ம் தேதி அன்று எழுத்துத் தேர்வுகள் தொடங்க உள்ளன.


மேற்குறிப்பிட்ட தேதி அட்டவணை, எம்பிஏ, எம்சிஏ, எம்எஸ்சி மாணவர்களுக்கும் பொருந்தும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment