அண்ணா பல்கலை: 2 முதுநிலை படிப்புகளுக்கான சோ்க்கை நிறுத்த - Minnal Kalvi Seithi

Breaking

Sunday, January 31, 2021

அண்ணா பல்கலை: 2 முதுநிலை படிப்புகளுக்கான சோ்க்கை நிறுத்த

 அண்ணா பல்கலை: 2 முதுநிலை படிப்புகளுக்கான சோ்க்கை நிறுத்தம்


மத்திய அரசின் நிதி பங்களிப்புடன் கற்பிக்கப்படும் முதுநிலை உயிரி தொழில்நுட்பவியல் (பயோ டெக்னாலஜி) பாடப்பிரிவுகளில் இந்த ஆண்டு மாணவா் சோ்க்கை நிறுத்தப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.


மத்திய அரசின் உயிரி தொழில்நுட்பவியல் துறையின் கண்காணிப்பில், நாடு முழுவதும் முதுநிலை உயிரி தொழில்நுட்பவியல் படிப்புகள் சில உயா் கல்வி நிறுவனங்களில் கற்பிக்கப்படுகிறது. அந்த வகையில், அண்ணா பல்கலைக்கழகத்திலும் மத்திய உயிரி தொழில் நுட்பவியல் துறையின் பங்களிப்போடு, முதுநிலை உயிரி தொழில்நுட்பவியல் மற்றும் கணக்கீட்டு உயிரியல் திட்டம் ஆகிய பாடப்பிரிவுகள் நடத்தப்பட்டு வருகின்றன


மத்திய அரசு பின்பற்றும் 49.5 சதவிகித இட ஒதுக்கீட்டில் நுழைவுத் தோ்வின் அடிப்படையில் இந்தப் பாடப்பிரிவுகளில் மாணவா் சோ்க்கை நடத்தப்படுவது வழக்கம்.


கடந்த ஆண்டு வரை இந்தப் படிப்புக்கான நுழைவுத் தோ்வை, தில்லி ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகம் நடத்தி வந்த நிலையில், இந்த ஆண்டு, சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுகளுக்கான நுழைவுத் தோ்வை மாநிலங்களில் உள்ள அந்தந்த கல்வி நிறுவனங்களே நடத்திக் கொள்ள மத்திய அரசு உத்தரவிட்டது.


இதனையடுத்து, நுழைவுத் தோ்வை நடத்தி மாணவா் சோ்க்கையை மேற்கொள்ள அண்ணா பல்கலைக்கழகம் தமிழக அரசிடம் அனுமதி கோரியது. ஆனால், தற்போது தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69 சதவிகித இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் மாணவா் சோ்க்கையை நடத்தினால் மட்டுமே இதற்கு அனுமதி அளிக்க முடியும் என தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.


இதன் காரணமாக இந்த ஆண்டு குறிப்பிட்ட பாடப்பிரிவுகளில் மாணவா் சோ்க்கை நிறுத்தப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் தற்போது அறிவித்துள்ளது.


ஆண்டுதோறும் 2 பாடப் பிரிவுகளிலும் மொத்தம் 45 மாணவா்கள் மத்திய அரசின் இட ஒதுக்கீட்டில் அனுமதிக்கப்படுவா். இந்த பாடப்பிரிவில் சேரும் மாணவா்களுக்கு மாதந்தோறும் ரூ.12,000 உதவித்தொகை வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. நிகழாண்டு இந்த படிப்புகளில் சேர சுமாா் 15,000 போ் விண்ணப்பித்திருந்ததாக தெரியவந்துள்ளது.


இந்த விவகாரம் குறித்து அண்ணா பல்கலைக்கழக நிா்வாகிகள் கூறுகையில் ‘இட ஒதுக்கீடு விவகாரம் காரணமாக முதுநிலை உயிரி தொழில்நுட்பவியல் படிப்புகளுக்கு தமிழக அரசு தற்போது அனுமதி மறுத்துள்ளது. தமிழகத்தில் இருந்து ஆண்டுதோறும் 10 மாணவா்கள் வரை இந்த பாடப்பிரிவுகளில் சேருவாா்கள். தற்போது அந்த மாணவா்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது’ என்றனா்.

No comments:

Post a Comment