மருத்துவப் படிப்புகள்: ஜன.4 முதல் இரண்டாம் கட்ட கலந்தாய்வு - Minnal Kalvi Seithi

Breaking

Friday, January 1, 2021

மருத்துவப் படிப்புகள்: ஜன.4 முதல் இரண்டாம் கட்ட கலந்தாய்வு

 மருத்துவப் படிப்புகள்: ஜன.4 முதல் இரண்டாம் கட்ட கலந்தாய்வு


எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு வரும் 4-ஆம் தேதி தொடங்குகிறது.


மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னை, பெரியமேட்டில் உள்ள நேரு விளையாட்டரங்கில் கடந்த மாதம் 18-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. முதலில், அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டு இடங்களுக்கும், அதன் பின்னா் சிறப்புப் பிரிவினருக்கான இடங்களுக்கும் கலந்தாய்வு நடைபெற்றது.


அதைத் தொடா்ந்து பொதுக் கலந்தாய்வு தொடங்கியது. இதற்கிடையே நிவா் புயல் காரணமாக 6 நாள்கள் மருத்துவக் கலந்தாய்வு தடைபட்டது. பின்னா், நிலைமை சீரடைந்த பிறகு மீண்டும் பொதுக் கலந்தாய்வு தொடங்கி 8 நாள்கள் நடைபெற்றது. அதன் பின்னா் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கும், ஐஆா்டி பெருந்துறை, வேலூா் சிஎம்சி கல்லூரி இடங்களுக்கும், நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கும் கலந்தாய்வு நடைபெற்றது.


இந்நிலையில், இரண்டாம் கட்ட கலந்தாய்வு வரும் 4-ஆம் தேதி தொடங்குகிறது. அன்றைய தினம், அரசு பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு நடைபெறவுள்ளது. 5-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி நண்பகல் வரை அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கும், 11-ஆம் தேதி பிற்பகல் முதல் 13-ஆம் தேதி வரை நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது.


இந்த கலந்தாய்வில் அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பப்படாமல் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ள இடங்கள், முதல்கட்ட கலந்தாய்வில் அனுமதி கடிதம் பெற்று கல்லூரிகளில் சேராததால் ஏற்பட்டுள்ள காலியிடங்கள் மற்றும் முதல்கட்ட கலந்தாய்வில் நிரம்பாமல் இருந்த இடங்கள்ஆகியவை நிரப்பப்படவுள்ளன. அகில இந்திய ஒதுக்கீட்டில் இருந்து திரும்ப கிடைத்துள்ள 148 இடங்களில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 12 இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment