ஆசிரியர்-அரசு ஊழியர்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் - Minnal Kalvi Seithi

Breaking

Saturday, January 2, 2021

ஆசிரியர்-அரசு ஊழியர்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும்

 ஆசிரியர்-அரசு ஊழியர்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும்


ஆசிரியர்-அரசு ஊழியர்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கையை தமிழக அரசு கைவிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். 


இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழகத்தில் ஆசிரியர் - அரசு ஊழியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ, 2019 ஜனவரி மாதத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரியும், வேறு சில நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தியும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்


இந்நிலையில் தமிழக முதல்வர் பொதுமக்கள், மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டுமென்று விடுத்த வேண்டுகோளின் பின்னணியில், மாணவர், பொதுமக்களின் நலன் கருதி 30.1.2019 அன்று போராட்டத்தை முடித்துக் கொண்டு அன்றே பணிக்கு திரும்பினர்


இந்த போராட்டம் முடிவுக்கு வந்து ஏறத்தாழ 23 மாதங்கள் கடந்த நிலையிலும், 5868 - ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பணியாளர்களின் மீது போராட்ட காலத்தில் போடப்பட்ட குற்றக் குறிப்பாணைகள் (17பி) 1500க்கும் மேற்பட்டவர்களுக்கு பணிமாற்றல் உத்தரவு போன்றவை இன்றும் நிலுவையில் உள்ளன.


இந்த குற்றக் குறிப்பாணை (17பி) நிலுவையில் உள்ளதால் ஊழியர்கள் பதவி உயர்வு, வருடாந்திர ஊதிய உயர்வு, பணி ஓய்வுக்கு பின்னர் கிடைக்க வேண்டிய ஓய்வூதிய பயன்கள் கிடைக்காமல் பெரும் இன்னல்களுக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாக்கப்பட்டுள்ளனர். காவல்துறையினரால் கைது செய்யப்பட்டவர்கள் பலர் மீது நீதிமன்ற நடவடிக்கைகளும் தொடர்ந்த வண்ணம் உள்ளது.


நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடிய ஆசிரியர் - அரசு ஊழியர்கள், முதல்வரின் வேண்டுகோளை ஏற்று தங்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பிய பிறகும் தமிழக அரசு அவர்களை பழிவாங்குவது வன்மையான கண்டனத்திற்குரியதாகும்.


எனவே, ஆசிரியர் - அரசு ஊழியர்கள், பணியாளர்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கைகளை உடனே கைவிட்டு, அவர்கள் மீது புனையப்பட்ட குற்றக் குறிப்பாணைகளை உடனடியாக ரத்து செய்வதுடன், அவர்களது நியாயமான கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment