சம்பள பதிவு இணையதளத்தில் கோளாறு தகவல்களை பதிவு செய்வதில் சிக்கல் - Minnal Kalvi Seithi

Breaking

Wednesday, January 27, 2021

சம்பள பதிவு இணையதளத்தில் கோளாறு தகவல்களை பதிவு செய்வதில் சிக்கல்

 சம்பள பதிவு இணையதளத்தில் கோளாறு தகவல்களை பதிவு செய்வதில் சிக்கல்


சம்பள பதிவு இணையதளத்தில் உள்ள கோளாறு, பல மாதங்களாக நீடிப்பதால், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.


தமிழக அரசு துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள், பள்ளிகள், கல்லுாரிகளின் ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும், கருவூலங்கள், சார் கருவூலங்கள் வாயிலாக, சம்பளம் வழங்கப் படுகிறது.இந்த பணிகளில் முறைகேடுகளை தடுக்கும் வகையில், தமிழக நிதித்துறையின் சார்பில், 'ஐ.எப்.ஹெச்.ஆர்.எம். எஸ்.,' என்ற, இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது


இந்த இணையதளம், விப்ரோ சாப்ட்வேர் நிறுவன பராமரிப்பில் உள்ளது. இந்த இணைய தளத்தில் மாதந்தோறும், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் சம்பள கணக்குகள் பதிவு செய்யப்பட்ட பின், சம்பளம் வழங்க, கணக்கு அதிகாரிகள் அனுமதி வழங்குவர்.ஆனால், இந்த இணையதளம் சரியான வேகமும், திறனும் இல்லாமல் உள்ளதால், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நிதித்துறை இணையதளத்தை பயன்படுத்த முடியாமல் அவதிப்படுகின்றனர்.


மாதம் தோறும் சம்பள கணக்கை பதிவு செய்து, சம்பளம் பெறுவதற்குள், ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் கடும் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இணையதளத்தின் சர்வர் வேகத்தை அதிகரிக்கவும், அனைத்து வகை தகவல்களையும், ஒரே நேரத்தில் பதிவு செய்யும் வசதியை மேம்படுத்தவும், தொடர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


ஆனாலும், இணையதளம் அடிக்கடி மக்கராவது, பல மாதங்களாக தடுக்கப்படவில்லை. சாப்ட்வேரின் புதிய வசதிகள் மற்றும் மாற்றங்கள் குறித்து, உரிய முறையில் அறிவிப்புகள் செய்யாமல், திடீரென இணையதள பக்கத்தை மாற்றுவதால், விபரங்களை பதிவு செய்வதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


பல மாதங்களாக நீடிக்கும் இந்த பிரச்னையை, நிதித்துறை அதிகாரிகள் சரி செய்யாமல் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதை சம்பந்தப்பட்ட அமைச்சகமும், செயலகமும் உடனே கவனிக்காவிட்டால், கணக்கு தணிக்கை வரை பிரச்னை நீடிக்கும் அபாயம் உள்ளதாக, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment