அமைச்சர்கள், நீதிபதிகள், எம்எல்ஏக்கள் அரசுப் பள்ளிகளைத் தத்தெடுக்க வேண்டும்: மாநில முதல்வர் வலியுறுத்தல் - Minnal Kalvi Seithi

Breaking

Tuesday, January 26, 2021

அமைச்சர்கள், நீதிபதிகள், எம்எல்ஏக்கள் அரசுப் பள்ளிகளைத் தத்தெடுக்க வேண்டும்: மாநில முதல்வர் வலியுறுத்தல்

 அமைச்சர்கள், நீதிபதிகள், எம்எல்ஏக்கள் அரசுப் பள்ளிகளைத் தத்தெடுக்க வேண்டும்: மாநில முதல்வர் வலியுறுத்தல்


ஒடிசாவைச் சேர்ந்த அமைச்சர்கள், நீதிபதிகள், எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் உள்ளிட்டோர் அரசுப் பள்ளிகளைத் தத்தெடுக்க வேண்டும் என்று அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் வலியுறுத்தியுள்ளார்.


இது தொடர்பாக முதல்வர் நவீன் பட்நாயக், ஒடிசாவைச் சேர்ந்த எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள், மத்திய, மாநில அமைச்சர்கள் உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் பிரதிநிதிகள் அனைவருக்கும், உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.


அக்கடிதத்தில், ''நம் எல்லோருக்குமே நாம் படித்த பள்ளியுடன் உணர்வுபூர்வமான இணைப்பு இருக்கும். அதனால் அந்தப் பள்ளியை மேம்படுத்தத் தேவையான ஆதரவை அளிப்பது நம்முடைய தார்மீகப் பொறுப்பு என்பதை உணர வேண்டும். அனைவரும் தாங்கள் படித்த பள்ளி அல்லது தங்களின் விருப்பத்துக்கேற்ப குறிப்பிட்ட பள்ளிகளைத் தத்தெடுத்துத் தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும்.


ஒரு நபர் அதிகபட்சம் 3 பள்ளிகள் வரை தத்தெடுக்கலாம். 'மோ பள்ளிகள்' திட்டத்தின் கீழ் இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்படுகிறது'' என்று நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்


மோ பள்ளிகள்' திட்டத்தை ஒடிசா முதல்வர் பட்நாயக், கடந்த 2017-ம் ஆண்டு குழந்தைகள் தினத்தன்று தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முன்னாள் மாணவர்கள் மற்றும் பொதுமக்களை இணைத்து உதவிகள் பெறப்படும். மாநிலத்தில் இதுவரை சுமார் 25 ஆயிரம் அரசுப் பள்ளிகள் இத்திட்டத்தின் மூலம் பலன் அடைந்துள்ளன.


மாநிலத் தலைமைச் செயலாளர், முதல்வரின் தலைமை ஆலோசகர், பள்ளிக் கல்வித்துறைச் செயலர் உள்ளிட்டோரும் இத்திட்டத்தின் கீழ் பள்ளிகளைத் தத்தெடுக்க உள்ளது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment