போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம் தொடரும்: மக்களவையில் கல்வி அமைச்சர் தகவல்- நிதி ஒதுக்கீட்டை குறைத்துள்ளதாக தமிழக எம்.பி. குற்றச்சாட்டு - Minnal Kalvi Seithi

Breaking

Monday, February 8, 2021

போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம் தொடரும்: மக்களவையில் கல்வி அமைச்சர் தகவல்- நிதி ஒதுக்கீட்டை குறைத்துள்ளதாக தமிழக எம்.பி. குற்றச்சாட்டு

 போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம் தொடரும்: மக்களவையில் கல்வி அமைச்சர் தகவல்- நிதி ஒதுக்கீட்டை குறைத்துள்ளதாக தமிழக எம்.பி.  குற்றச்சாட்டு


மேல்நிலை, உயர்கல்விக்கான உதவித்தொகை அளிக்கும் திட்டம் தொடரும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் நிஷாங் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.


இந்தத் தகவலை விழுப்புரம் திமுக எம்.பியான டி.ரவிகுமார் கேள்விக்கு அளித்த பதிலில் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.


முன்னதாக எம்.பி டி,ரவிகுமார் எழுப்பிய கேள்வியில், 'போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் திட்டத்தை ரத்துசெய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளதா? அவ்வாறெனில் அதற்குக் காரணம் என்ன?


கடந்த மூன்று ஆண்டுகளில் மத்திய அரசு போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் திட்டத்தின்கீழ் மாநில அரசுகளுக்கு வழங்கிய நிதி எவ்வளவு? மாநில வாரியான விவரங்களைத் தருக.' எனக் கேட்டிருந்தார்


இதற்கு பதில் அளித்த மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் நிஷாங் பொக்ரியால் கடந்த மூன்று கல்வி ஆண்டுகளுக்கான விவரம் அளித்துள்ளார்.


இதன்படி, தாழ்த்தப்பட்ட சமூக மாணவர்களுக்கு 2017-18 இல் ரூ.3414.09 கோடி என்பது 2018-19 இல் ரூ.5928.15 கோடியாக உயர்ந்துள்ளது.


இந்தத் தொகை, 2019-20 இல் ரூ.2711.30 கோடியாக குறைக்கப்பட்டு, 2020-21 இல் ரூ.2987.33 கோடியாக சற்றே உயர்த்தி அளிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டிற்கான இந்த பட்ஜெட்டில் ரூ.3415. 62 கோடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.


தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட மொத்த தொகையில் தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட்டிருக்கும் தொகை குறித்த விவரத்தையும் மத்திய கல்வி அமைச்சர் பொக்ரியால் மக்களவையில் சமர்ப்பித்தார்.


இதன்படி, தமிழகத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட சமூக மாணவர்களுக்கு 2017-18 இல் ரூ.434.48 கோடி; 2018-19 இல் ரூ.1407.38 கோடி, 2019-20 இல் ரூ.925.84 கோடியும் ஒதுக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.


இதே உதவித்தொகை தமிழகத்தின் பழங்குடியின மாணவர்களுக்கு 2017-18 இல் ரூ.24.40 கோடி, 2018-19 இல் ரூ.39.33 கோடி, 2019-20 இல் ரூ.50.25 கோடி என ஒதுக்கப்பட்டுள்ளது.


தலித் விரோதப்போக்கு


இது குறித்து 'இந்து தமிழ் திசை' இணையத்திடம் திமுக எம்.பியான டி.ரவிகுமார் கூறும்போது, 'பட்ஜெட் உரையில் நிதி அமைச்சர் தாழ்த்தப்பட்ட மாணவர்களின் போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப்புக்காக 2025-26 வரையிலான 6 ஆண்டுகளுக்கு ரூ.35,219 கோடி ஒதுக்கப்படும் என அறிவித்தார்.


இதன்படி, மத்திய அரசு ஆண்டுக்கு சுமார் 5900 கோடி ரூபாய் ஒதுக்கியிருக்க வேண்டும். ஆனால் இந்த பட்ஜெட்டில் வெறும் ரூ.3415.62 கோடி ஒதுக்கியிருப்பது பாஜக அரசின் தலித் விரோத சான்றாக உள்ளது.' எனத் தெரிவித்தார்.

No comments:

Post a Comment