கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும்; தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அறிவிப்பு - Minnal Kalvi Seithi

Breaking

Tuesday, February 2, 2021

கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும்; தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அறிவிப்பு

 கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும்; தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அறிவிப்பு


எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும் என்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.


தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்.2-ம் தேதி முதல் தொடர் மறியல் மற்றும் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.


இதன்படி, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்கத்தின் மாவட்டத் தலைவர் என்.பி.விவேகானந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், "பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்


அகவிலைப்படி, சரண்டர் உள்ளிட்ட பறிக்கப்பட்ட உரிமைகளை மீண்டும் வழங்க வேண்டும். தொகுப்பூதியத்தில் பணிபுரியும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்ப்புற நூலகங்கள், செவிலியர்கள் ஆகியோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


சாலைப் பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக் காலமாக அறிவித்து அதற்கான ஊதியத்தை வழங்க வேண்டும். கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த ஊழியர்களுக்கு ரூ.50 லட்சமும், கரோனாவால் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு ரூ.2 லட்சமும் வழங்க வேண்டும்.


மருத்துவம் மற்றும் சுகாதார துறை ஊழியர்களுக்கு ஒரு மாத சிறப்பு ஊதியம் வழங்க அறிவித்த அரசாணையை உடனடியாக அமல்படுத்த வேண்டும். கரோனா பரவல் தடுப்புப் பணியில் ஈடுபட்ட அனைத்து துறை ஊழியர்களுக்கும் சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும். அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். அரசு ஊழியர்களுக்கான காப்பீட்டுத் திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும்" என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.


ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க நிர்வாகி ஜாகிர் உசேன், கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.


தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் அமர்ந்து அரசு ஊழியர் சங்கத்தினர் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, சாலை மறியலில் ஈடுபட்ட 118 பெண்கள் உட்பட அரசு ஊழியர் சங்கத்தினர் 150 பேரை போலீஸார் கைது செய்தனர்.


முன்னதாக, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் பி.பழனிச்சாமி கூறும்போது, 'அரசு ஊழியர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும். இதையொட்டி, சங்கத்தின் மாநில நிர்வாகிகளை அரசு அழைத்து, பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும். கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும்" என்றார்.

No comments:

Post a Comment