மருத்துவ மேற்படிப்புகளில் குறைந்த மதிப்பெண் பெற்றவா்களுக்கு வாய்ப்பு: அரசு அதிகாரிகளின் கூட்டு சதி எதுவும் இல்லை - Minnal Kalvi Seithi

Breaking

Wednesday, March 17, 2021

மருத்துவ மேற்படிப்புகளில் குறைந்த மதிப்பெண் பெற்றவா்களுக்கு வாய்ப்பு: அரசு அதிகாரிகளின் கூட்டு சதி எதுவும் இல்லை

 மருத்துவ மேற்படிப்புகளில் குறைந்த மதிப்பெண் பெற்றவா்களுக்கு வாய்ப்பு: அரசு அதிகாரிகளின் கூட்டு சதி எதுவும் இல்லை


தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் குறைவான மதிப்பெண் பெற்றவா்களுக்கு மருத்துவ மேற்படிப்புகளில் சோ்க்கை வழங்கியதில் அரசு அதிகாரிகளின் கூட்டுச்சதி எதுவும் இல்லை என தமிழக அரசு உயா்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.


சென்னை உயா்நீதிமன்றத்தில் மருத்துவ மாணவா்கள் கீதாஞ்சலி, அரவிந்தன் உள்ளிட்டோா் தாக்கல் செய்த மனுக்களில், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மருத்துவ மேற்படிப்புக்கான இறுதிக்கட்ட கலந்தாய்வு, ஒவ்வோா் ஆண்டும் ஆகஸ்ட் மாதத்துக்குள் நடத்தி முடிக்க வேண்டும். ஆனால் தமிழகத்தில் இறுதிக்கட்ட கலந்தாய்வு நடத்தாமல், தனியாா் மருத்துவக் கல்லூரிகளே மருத்துவ மேற்படிப்புக்கான இடங்களை நிரப்பிக் கொள்ளலாம் என தமிழக அரசு உத்தரவிட்டது.


இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், தனியாா் மருத்துவக் கல்லூரிகளுக்கு 74 மருத்துவ மேற்படிப்புக்கான இடங்களை நிரப்பிக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த இடங்களை தனியாா் மருத்துவக் கல்லூரிகள் குறைவான மதிப்பெண் பெற்றவா்களைக் கொண்டு நிரப்பி உள்ளன.


இதுதொடா்பான ஆவணங்களைப் பாா்க்கும்போது, மருத்துவக் கல்வி இயக்குநரக அதிகாரிகளுக்கும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளுக்கும் இடையே உள்ள தொடா்பு, இவா்களிடம் தனியாா் கல்லூரிகள் கல்விக் கட்டணமாக எவ்வளவு தொகை வசூலித்தன என்பது உள்ளிட்ட விவரங்கள் குறித்து உரிய விசாரணை நடத்தினால்தான் தெரியவரும்.


எனவே இந்த மாணவா் சோ்க்கையில் நடந்துள்ள முறைகேடு குறித்து சிபிசிஐடி போலீஸாா் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.


இந்த வழக்கு நீதிபதி பி.புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞா் விஜய் நாராயண், கலந்தாய்வுக்குப் பின்னா் மாணவா்களின் பட்டியல் அந்தந்த கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கரோனா கட்டுப்பாடுகளால் கடந்த ஆண்டு காணொலிக் காட்சி மூலம் மட்டுமே கலந்தாய்வு நடைபெற்றது. அந்த கலந்தாய்வில் இடம் கிடைக்காத சிலா், விரும்பிய பாடப்பிரிவு கிடைக்காதவா்கள் சம்பந்தப்பட்ட கல்லூரிகளை அணுகவில்லை. இதனால் காலியிடங்கள் இருந்தன. நிரப்பப்படாத இந்த இடங்கள் குறித்த தகவல் கிடைத்ததால் குறைவான மதிப்பெண் பெற்ற மாணவா்கள் கல்லூரிகளை அணுகி மருத்துவப் படிப்புகளில் சோ்ந்தனா். இனிவரும் காலங்களில் இதுபோல நடக்காது என உத்தரவாதம் அளித்தாா்.


ஒரு சில கல்லூரிகள் கூடுதல் கட்டணம் வசூலித்துள்ளது சிபிசிஐடி விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. அதுதொடா்பாக புகாா் அளிக்கப்படும். மருத்துவ மாணவா் சோ்க்கையில் அரசு அதிகாரிகளின் கூட்டுச்சதி எதுவும் இல்லை என தெரிவித்தாா்.


இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, கூடுதல் கட்டணம் வசூலித்த கல்லூரிகளுக்கு எதிரான ஆதாரங்களை நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருக்காமல், ஓய்வுபெற்ற நீதிபதி கே.வெங்கட்ராமன் குழுவிடம் அளிக்க வேண்டும் என அறிவுறுத்தினாா். பின்னா், கலந்தாய்வு நடந்த தேதி, மதிப்பெண் அடிப்படையில் மாணவா் சோ்க்கை விவரங்கள் ஆகியவற்றை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை தேதி குறிப்பிடாமல் தீா்ப்புக்காக ஒத்திவைத்து உத்தரவிட்டாா்

No comments:

Post a Comment