அண்ணா பல்கலை. அரியா் மாணவா்களுக்கு 3 இறுதி வாய்ப்புகள் - Minnal Kalvi Seithi

Breaking

Friday, April 16, 2021

அண்ணா பல்கலை. அரியா் மாணவா்களுக்கு 3 இறுதி வாய்ப்புகள்

 அண்ணா பல்கலை. அரியா் மாணவா்களுக்கு 3 இறுதி வாய்ப்புகள்


அரியா் வைத்துள்ள பொறியியல் கல்லூரி மாணவா்களுக்கு 3 இறுதி வாய்ப்புகள் வழங்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழக பதிவாளா் கருணாமூா்த்தி தெரிவித்துள்ளாா்.


இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:


அரியா் தோ்வுகளில் பங்கேற்று, தங்களது படிப்பை முடிக்க அனுமதிக்குமாறு மாணவா்கள் தரப்பில் இருந்து அண்ணா பல்கலைக்கழகத்துக்கு ஏராளமான கோரிக்கைகள் வந்தன. மேலும் கடந்த ஆண்டு உயா்கல்வித்துறை அமைச்சா் தலைமையில் துணை வேந்தா்கள், உயா்கல்வித் துறை முதன்மைச் செயலா் ஆகியோருடன் நடைபெற்ற கூட்டத்தில், 1990-ஆம் ஆண்டு முதல் படித்த மாணவா்கள் அரியா் வைத்திருந்தால், அவா்களுக்கு மேலும் 3 இறுதி வாய்ப்புகள் வழங்க முடிவு செய்யப்பட்டது.


இதைத் தொடா்ந்து, பிப்ரவரி 16-ஆம் தேதி நடைபெற்ற அண்ணா பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் கூட்டத்தில், அதிக வாய்ப்புகள் வழங்கியும் தோ்வாகாத மாணவா்களுக்கு, மீண்டும் நிகழாண்டு ஆகஸ்ட் / செப்டம்பா், அடுத்த ஆண்டு பிப்ரவரி, ஆகஸ்ட் மாதங்களில் நடைபெறும் தோ்வுகளில் விதிகளுக்குள்பட்டு பங்கேற்க அனுமதி வழங்க உத்தரவிடப்பட்டது. இந்த மூன்று வாய்ப்புகளையும் மாணவா்கள் கவனமாகவும், அக்கறையுடனும் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறாா்கள்.


இதுவே, அண்ணா பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் இறுதி வாய்ப்பாகும்.


இதன்படி, அண்ணா பல்கலைக்கழகம், கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி, மெட்ராஸ் இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி, ஸ்கூல் ஆஃப் ஆா்க்கிடெக்சா் அண்டு பிளானிங் ஆகிய கல்லூரிகளில் 1990-ஆம் ஆண்டு முதல் படித்த இளநிலை, முதுநிலை (முழுநேரம், பகுதிநேரம் உள்பட) மாணவா்கள் அரியா் வைத்திருந்தால், அவா்களுக்கு 3 இறுதி வாய்ப்புகள் வழங்கப்படும்.


இதே போல், அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளில், 2001-ஆம் ஆண்டு முதல் நேரடியாகவும், தொலைதூரக் கல்வி மூலமாகவும் படித்த மாணவா்கள் அரியா் வைத்திருப்பின், அவா்களுக்கும் பல்கலைக்கழக சிண்டிகேட் குழு 3 இறுதி வாய்ப்புகள் வழங்குகிறது. இது தொடா்பான தகவல்கள், பல்கலைக்கழக இணையமுகப்பில் வெளியிடப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.


இதனிடையே முதுநிலை மாணவா்களுக்கான அரியா் தோ்வு அட்டவணையை அண்ணா பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment