நாளை ஓட்டு எண்ணிக்கை நடைபெறப் போவது இப்படி தான்! - Minnal Kalvi Seithi

Breaking

Friday, April 30, 2021

நாளை ஓட்டு எண்ணிக்கை நடைபெறப் போவது இப்படி தான்!

 நாளை ஓட்டு எண்ணிக்கை நடைபெறப் போவது இப்படி தான்!


தமிழக சட்டசபை தேர்தல் மற்றும் கன்னியாகுமரி லோக்சபா இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கை, நாளை (மே 2) நடக்க உள்ள நிலையில், இப்படித்தான் ஓட்டு எண்ணிக்கை நடக்க வேண்டும் என, தேர்தல் கமிஷன் விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. ஓட்டு எண்ணிக்கையை நாளை நள்ளிரவு, 12:00 மணிக்குள் முடிக்கவும், தேர்தல் கமிஷன் முழு முயற்சி மேற்கொண்டுள்ளது. மாநிலம் முழுதும், ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.


தமிழகத்தில் உள்ள, 234 சட்டசபை தொகுதிகளுக்கும், கன்னியாகுமரி லோக்சபா தொகுதிக்கும், இம்மாதம், 6ம் தேதி தேர்தல் நடந்தது. தேர்தலில், 72.81 சதவீதம் ஓட்டுகள் பதிவாகின. 


ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும், ஓட்டு எண்ணும் மையங்களில், பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அந்த அறைகள் பூட்டப்பட்டு, 'சீல்' வைக்கப்பட்டுள்ளன. அறைகளுக்கு உள்ளேயும், வெளியேயும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மூன்று அடுக்கு பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.


‌ 14 முதல் 28 வரை மேஜைகள் ‌


தமிழகம் முழுதும் பதிவான ஓட்டுகள், நாளை காலை, 8:00 மணிக்கு, 75 மையங்களில் எண்ணப்பட உள்ளன. ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் பதிவான ஓட்டுகளை, தனித்தனி அறைகளில் எண்ண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ஒரு தொகுதிக்கு, குறைந்தபட்சம் 14 மேஜை என்ற கணக்கில், 3276 மேஜைகளும், அதிக ஓட்டுச் சாவடி கொண்டிருக்கும் தொகுதிகளுக்காக, ஓட்டு எண்ணும் மையங்களில் கூடுதல் மேஜைகளும் போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வகையில், 3372 மேஜைகளில், நாளை ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது.


சோழிங்கநல்லுார் தொகுதி, அதிகபட்சமாக, 991 ஓட்டுச்சாவடிகளைக் கொண்டிருந்தது; குறைந்தபட்சமாக, கீழ்வேளூர் தொகுதி, 251 ஓட்டுச்சாவடிகளைக் கொண்டிருந்தது. 


இப்படி ஓட்டுச் சாவடிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, மேஜைகளின் எண்ணிக்கை மாறும்.


இது தவிர, தபால் ஓட்டுக்கள், 739 மேஜைகளில் எண்ணப்பட உள்ளன.


‌ தடுப்புகள் ‌


ஓட்டுகள் எண்ணும் அறையில், சவுக்கு கட்டைகளால் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன


ஓட்டுகளை எண்ணும் பணியாளர்கள், தடுப்புகளுக்கு உள்ளே இருப்பர். வேட்பாளர்களின் முகவர்கள், தடுப்புகளுக்கு வெளியில் இருப்பர். ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் இருந்து, அவற்றை ஓட்டு எண்ணும் அறைகளுக்கு எடுத்து வரவும், மீண்டும் ஓட்டுப்பதிவு இயந்திரங்களை கொண்டு செல்லவும், தனித்தனி வழிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தபால் ஓட்டுகளை எண்ண, தனி வசதி செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தும் அலுவலர், பொதுத்தேர்தல் பார்வையாளர் ஆகியோர் முன்னிலையில், ஓட்டு எண்ணிக்கை நடக்கும்.


‌ மருத்துவ சான்று ‌

வேட்பாளர்கள், அவர்களின் தலைமை முகவர், ஓட்டு எண்ணிக்கை முகவர்கள், பத்திரிகையாளர்கள், ஓட்டு எண்ணிக்கை அலுவல் தொடர்பாக அடையாள அட்டை வைத்திருப்போர் மட்டுமே, ஓட்டு எண்ணும் மையங்களின் உள்ளே அனுமதிக்கப்படுவர்.


அவர்கள், அரசு மருத்துவமனை அல்லது அனுமதி பெற்ற மருத்துவமனைகளில், 72 மணி நேரத்திற்கு முன், கொரோனா பரிசோதனை செய்து, 'நெகட்டிவ்' சான்றிதழ் பெற்று இருக்க வேண்டும் அல்லது இருமுறை கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்.


உடலின் வெப்பநிலை, 98.6 பாரன்ஹீட்டுக்கு மேல் உள்ளவர்கள், உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள்.தேர்தல் கமிஷன் அறிவுரைப்படி, காகிதம், நோட் பேட், ஓட்டுச்சாவடி தலைமை அலுவலரால் தரப்பட்ட, '17 சி' இரண்டாவது நகலை மட்டுமே மையத்திற்குள் எடுத்து செல்லலாம். தேர்தல் கமிஷனால், அதிகாரம் அளிக்கப்பட்ட அதிகாரியின் அனுமதியின்படி, கைப்பிடி கேமரா எடுத்து வருவோர் அனுமதிக்கப்படுவர். 


மொபைல் போன், கேமரா, பேனா, பாட்டில்கள், தகர டப்பாக்கள், டிபன் பாக்ஸ், குடை, தீப்பெட்டி, தின்பண்டங்கள், வேதிப்பொருட்கள் எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது. மையத்தை விட்டு வெளியே செல்வோர், மீண்டும் உள்ளே வர அனுமதி கிடையாது.


‌ காலை 8:00 மணி ‌


காலை, 7:30 மணிக்கு முன் அனைவரும் வந்து விட வேண்டும். ஓட்டுப் பெட்டியில் போடப்பட்ட, தபால் ஓட்டுகள் மற்றும் தபாலில் வந்த ஓட்டுகள், காலை, 8:00 மணிக்கு, பிரிக்கப்படும். 


ஒரு மேஜையில், 500 தபால் ஓட்டுகள் எண்ணப்படும். அதிகபட்சம் நான்கு மேஜைகளில், தபால் ஓட்டுகளை எண்ண, தேர்தல் கமிஷன் அனுமதி வழங்கி உள்ளது.


தபால் ஓட்டுகள் எண்ணிக்கை, இடவசதி ஆகியவற்றை பொறுத்து, எத்தனை மேஜை என்பதை, தேர்தல் நடத்தும் அலுவலர் முடிவு செய்வார். தபால் ஓட்டுகள் எண்ணிக்கை துவங்கியதும், உடனுக்குடன், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் பதிவான ஓட்டுகளின் எண்ணிக்கை துவங்கும். ஓட்டு எண்ணும் மேஜை ஒவ்வொன்றிலும், கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. 


ஒரு மேஜையில், ஓட்டு எண்ணும் பணியாளர்கள் இருவர், ஒரு மைக்ரோ பார்வையாளர் இருப்பர். அவர்கள் ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் உள்ள சீலை அகற்றிவிட்டு, இயந்திரத்தை, 'ஆன்' செய்வர். அதில், பதிவாகி உள்ள மொத்த ஓட்டுகள் எண்ணிக்கை முதலில் வரும். 


‌ 'ரவுண்டு' கணக்கு ‌


அதன்பின், ஒவ்வொரு வேட்பாளருக்கும் பதிவான ஓட்டுகள் விபரம் வரும். ஓட்டு எண்ணும் அலுவலர், அந்த எண்ணிக்கையை சத்தமாக தெரிவிப்பதுடன், பதிவான ஓட்டுகளை, வேட்பாளர்களின் முகவர்களிடம் காண்பிப்பார். ஒவ்வொரு மேஜையிலும், ஒவ்வொரு வேட்பாளருக்கும் பதிவான ஓட்டுகள் கணக்கிடப்படும். அவை ஒன்றாக சேர்க்கப்பட்டு, ஒரு ரவுண்டு என்று கணக்கிடப்படும். எத்தனை மேஜைகள் போட்டிருந்தாலும், அவை ஒரு ரவுண்டாக கருதப்படும். 

ஒரு ரவுண்டு ஓட்டு எண்ணிக்கை முடிந்ததும், ஒவ்வொரு வேட்பாளரும் பெற்ற ஓட்டுகள் விபரத்தை, தேர்தல் நடத்தும் அலுவலர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார். ஓட்டு எண்ணும் அறைக்கு வெளியில் வைக்கப்பட்டிருக்கும், எல்.இ.டி., திரையில், ஓட்டு எண்ணிக்கைக் கூட்டு விபரம் வெளியிடப்படும். அதன்பின், அடுத்த ரவுண்டு ஓட்டு எண்ணிக்கை துவக்கப்படும். 


ஓட்டுச்சாவடிகள் எண்ணிக்கை, மேஜைகள் எண்ணிக்கைக்கு ஏற்ப, ஓட்டு எண்ணிக்கை ரவுண்டுகள் கூடும்.


‌ நள்ளிரவு வரை ‌


கடந்த சட்டசபை தேர்தலை விட, இந்த தேர்தலில், 22 ஆயிரம் ஓட்டுச்சாவடிகள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளன. எனவே, இம்முறை ஓட்டு எண்ணிக்கை இரவிலும் நீடிக்கும்.

நள்ளிரவு, 12:00 மணிக்குள், ஓட்டு எண்ணிக்கையை முடிக்க, முழு முயற்சி மேற்கொள்ளப்படும் என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.


தேர்தல் முடிவுகளை, உடனுக்குடன் தேர்தல் கமிஷன் இணையதளத்தில் வெளியிடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.


‌ மற்ற மாநிலங்கள் ‌

தமிழகத்தை போல, புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணிக்கையும், நாளை காலை, 8:00 மணிக்கு துவங்குகிறது. ஐந்து மாநிலங்களிலும், காலை, 8:30 மணியிலிருந்து, முன்னணி விபரங்கள் வெளிவர துவங்கும்.மக்களுக்கு தடை


தமிழகம் மற்றும் புதுச்சேரியில், நாளை முழு ஊரடங்கு என்பதால், ஓட்டு எண்ணும் மையங்களுக்கு, பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக, அரசியல் கட்சிகளின் வெற்றி கொண்டாட்டத்திற்கும், தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ளது. ஓட்டு எண்ணிக்கை நடப்பதால், மாநிலம் முழுவதும், ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 

‌ சரிபார்க்க உதவும் வி.வி. ~ பி.ஏ.டி., இயந்திரங்கள் ‌


மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பதிவான ஓட்டுக்கள் எண்ணப்பட்ட பின், அவற்றில் முறைகேடு நடக்காமல் இருந்ததா என்பதைச் சரி பார்க்க, ஒரு சட்டசபை தொகுதிக்கு, தலா, ஐந்து ஓட்டுச் சாவடிகள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு, வி.வி. ~ பி.ஏ.டி., இயந்திரத்தில் அச்சான ஓட்டுக்கள் எண்ணப்படும். அவை, மின்னணு இயந்திரத்தில் பதிவான ஓட்டுக்களுடன் சரி பார்க்கப்படும்.

அதேபோல, கன்னியாகுமரி லோக்சபா தொகுதியில், சட்டசபை தொகுதி வாரியாக, தலா ஐந்து, வி.வி.பி.ஏ.டி., இயந்திரத்தில் அச்சான ஓட்டுக்கள் எண்ணி சரிபார்க்கப்படும்

இதுதவிர, ஓட்டுப் பதிவு இயந்திரத்தில் பழுது ஏற்பட்டு, அதில் பதிவான விபரத்தை அறிய முடியாவிட்டால், அந்த ஓட்டுப்பதிவு இயந்திரம் தனியாக வைக்கப்படும். 


ஓட்டு எண்ணிக்கை முடிவில், முதல் இரண்டு வேட்பாளர்களுக்கு இடையிலான வித்தியாசம் மிக குறைவாக இருந்தால், பழுதடைந்த ஓட்டுப்பதிவு இயந்திரத்தின், வி.வி. ~ பி.ஏ.டி., இயந்திரத்தில் உள்ள ஓட்டுக்கள் எண்ணப்படும்.

No comments:

Post a Comment