பள்ளி கல்வி தலைமை மாற்றத்தில் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் முரண்பாடு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, May 18, 2021

பள்ளி கல்வி தலைமை மாற்றத்தில் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் முரண்பாடு

 பள்ளி கல்வி தலைமை மாற்றத்தில் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் முரண்பாடு


சென்னை:பள்ளி கல்வி இயக்குனர் பணியிடத்தில், ஐ.ஏ.எஸ்., அதிகாரி நியமிக்கப்பட்டதற்கு, ஆசிரியர் சங்க நிர்வாகிகள் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.


பள்ளி கல்வி இயக்குனர் பொறுப்பில், முதன் முதலாக ஐ.ஏ.எஸ்., அதிகாரி நந்தகுமாரை நியமித்து, அரசு அதிரடி மாற்றம் செய்துள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநில தலைவர் இளமாறன் வெளியிட்ட அறிக்கை:புதிய ஆட்சி பொறுப்பேற்றதும், திறமையான அதிகாரிகளை நியமித்து, சீர்திருத்தம் துவங்கியுள்ளது. பள்ளி கல்வி துறையில் இயக்குனர் பணியிடத்தில் ஐ.ஏ.எஸ்., அதிகாரியை நியமித்தது வரவேற்புக்குரியது.


கடந்த, 15 ஆண்டுகளாக இந்த துறையில் பொறுப்பேற்ற பலர், ஜாதி, அரசியல் பின்னணியில், சில சங்க தலைவர்களின் பிடியில் சிக்கி செயல்பட்டது வருத்தத்துக்குரியது. இதன் காரணமாக, கற்றல், கற்பித்தல் பணிகள் தேங்கி, நீதிமன்றங்களில் வழக்குகள் தேங்கி உள்ளன.இந்த நிலையை மாற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரிக்கு இயக்குனர் பதவி அளித்திருப்பது, பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திஉள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தமிழக உடற்கல்வி மற்றும் ஆசிரியர் சங்க மாநில தலைவர் சங்கரபெருமாள் வெளியிட்ட அறிக்கையில், 'பள்ளி கல்வி இயக்குனர் பதவியில், ஐ.ஏ.எஸ்., அதிகாரியை நியமித்து இருப்பதையும், பள்ளிக் கல்வியில் மாற்றம் கொண்டு வரும் நடவடிக்கைகளையும் வரவேற்கிறோம்' என, கூறியுள்ளார். 


பொதுப்பள்ளிக்கான மாநில மேடை பொது செயலர் பிரின்ஸ் கஜேந்திர பாபு வெளியிட்ட அறிக்கை:சில ஆண்டுகளாக கல்வி துறையில், பல குழப்பமான முடிவுகள் எடுக்கப்பட்டன. இந்த நிலையை சீர்படுத்த, மிகவும் பொருத்தமான அலுவலராக, நந்தகுமார் ஐ.ஏ.எஸ்., நியமிக்கப்பட்டு உள்ளார். இந்த மாற்றம் விவாதமாகி விட வேண்டாம். கல்வியை மாநில பட்டியலுக்கு திரும்ப கொண்டு வரவேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


பள்ளி கல்வி இயக்குனர் பணியிடத்தில், ஐ.ஏ.எஸ்., அதிகாரி நியமிக்கப்பட்டதற்கு, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு, தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் ஆகிய சங்க நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. 


இந்த மாற்றம் குறித்து, பெயர் வெளியிட விரும்பாத, பள்ளி கல்வி அதிகாரிகள் சிலர் கூறியதாவது: ஏற்கனவே பள்ளி கல்வி இயக்குனரகத்தில், ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தில் இருவர்; பாடநுால் கழகம் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியத்தில், தலா ஒருவர் என, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பணியாற்றுகின்றனர். அரசின் செயலரும் ஐ.ஏ.எஸ்., அதிகாரி என்பதால், புதிய ஐ.ஏ.எஸ்., பணியிடம் பிரச்னையாக தெரியவில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment