வீடு வீடாக களப்பணியில் தனி ஒருவர்! அரசுப்பள்ளி ஆசிரியர் அசத்தல் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, May 29, 2021

வீடு வீடாக களப்பணியில் தனி ஒருவர்! அரசுப்பள்ளி ஆசிரியர் அசத்தல்

 வீடு வீடாக களப்பணியில் தனி ஒருவர்! அரசுப்பள்ளி ஆசிரியர் அசத்தல்


திருப்பூர்:'ஆசிரியர் பணியே அறப்பணி... அதற்கே தன்னை அர்ப்பணி' என்பார்கள்; அறப்பணி மட்டுமல்ல... களப்பணியிலும் தனியொருவராய் அசத்தி வருகிறார், கணபதிபாளையம் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் சுப்ரமணியன். 


திருப்பூர் மாவட்டத்தில், இவர் ஒருவர் மட்டுமே விருப்பத்தில் பேரில், வீடு வீடாக சென்று, கொரோனா அறிகுறிகள் குறித்த கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்.


கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவர, 500 பேருக்கு ஒரு ஆசிரியர் வீதம், 150 பேருக்கு வீடு வீடாக சென்று தொற்றுக்கான அறிகுறிகள் குறித்து கண்டறிய மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது.


 இதற்கிடையில், 'களப்பணியில் பள்ளி ஆசிரியர்கள் ஈடுபடுவது கட்டாயமில்லை.விருப்பம் உள்ளவர்கள் தன்னார்வலராக பணியாற்றலாம்' என, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அறிவித்தார்


இதையடுத்து, கலெக்டரின் அறிவுறுத்தலின் கீழ், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களிடம் களப்பணியாற்ற விருப்பம் உள்ளவர்களின் பட்டியல் நேற்று கேட்கப்பட்டது.


இதில், கணபதிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் சுப்ரமணியன் தவிர, எந்த ஆசிரியரும் களப்பணியாற்ற விருப்பம் தெரிவிக்கவில்லை. விருப்பம் தெரிவித்த கையோடு, நேற்று வீடு வீடாக சென்று களப்பணியை துவங்கினார்.


ஆசிரியர் சுப்ரமணியன் கூறியதாவது:சமீபத்தில் கல்வித்துறையிலும் சரி... நண்பர்கள், உறவினர் வட்டாரங்களில் சரி... பலர் தொற்று பாதிப்பால் இறந்துவிட்டனர். 


அரசு பல தரப்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும், பலரும் ஆரம்பகட்ட அறிகுறிகளின்போது அலட்சியமாக இருந்து விடுகின்றனர்.இவர்களுக்கு போதிய விழிப்புணர்வு அவசியம் என்பதை உணர்ந்தேன். இது ஒரு வாய்ப்பாக இருந்தது.


கணபதிபாளையம் கிராமத்தில், கதிர் நகர், ஓம்சக்தி நகர் பகுதிகள் எனக்கு கொடுக்கப்பட்டன. சானிடைசர், கையுறை, முக கவசம் என உரிய பாதுகாப்பு உபகரணங்களோடு களப்பணியில் ஈடுபட்டு வருகிறேன். முதல் நாளில், 216 பேரிடம் விசாரித்துவிட்டேன். நான் குறிப்பெடுத்தவர்களில்,ஆறு பேர் மட்டுமே முதல் தவணை தடுப்பூசி போட்டுள்ளனர்.மீதியுள்ளோர் போட தயாராக இருந்தாலும், தடுப்பூசி பற்றாக்குறையால் இன்னும் போடவில்லை என்கின்றனர். மேலும், சிலருக்கு காய்ச்சல், சளி உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்கனவே இருந்து சரியானதாக தெரிவித்தனர்.முன்னெச்சரிக்கையோடு இருந்தால், ஆரம்பகாலத்திலே சரிசெய்துவிடலாம். 


இதுகுறித்து அனைவரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன். நமது பாதுகாப்பு மட்டும் போதாது. நம்மை சார்ந்தவர்களும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Source

https://m.dinamalar.com/detail.php?id=27752961 comment:

  1. இவருக்கு மட்டும்தான் ஊதியம் தக்கும்

    ReplyDelete