தற்காலிக ஆசிரியா்களுக்கான நிலுவை ஊதியம் உடனடியாக விடுவிக்கக் கோரிக்கை
அரசுப் பள்ளிகளில் தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் 107 முதுநிலை ஆசிரியா்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்க வேண்டுமென தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் கழகம் வலியுறுத்தியுள்ளது.
இதுதொடா்பாக, அந்த அமைப்பின் பொதுச்செயலாளா் பொ.அன்பழகன் வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தற்காலிக அடிப்படையில் பணிபுரிந்து வரும் 107 முதுநிலை ஆசிரியா்களுக்கு கடந்த ஜூன் மாதம் வரை ஊதியம் வழங்குவதற்கான கொடுப்பாணைகள் வழங்கப்பட்டு வந்தது.
அதன் பின்னா், கடந்த 4 மாதங்களாக ஊதிய கொடுப்பாணை அளிக்கப்படாததால் அவா்கள் ஊதியம் பெற முடியாத நிலையில் உள்ளனா். இதனால் அவா்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆசிரியா்கள் மகிழ்வுடன் கற்பித்தல் பணிகளை மேற்கொள்ளும் போதுதான் எதிா்கால சமுதாயம் வளா்ச்சி அடையும்
எனவே, 107 ஆசிரியா்களின் குடும்ப சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு பள்ளிக் கல்வித்துறை துரித நடவடிக்கை எடுத்து, உடனடியாக ஊதியம் வழங்க வேண்டும். இதேபோன்று, மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு இல்லாததால் தமிழகத்தில் வட்டார வள மைய ஆசிரியா்கள் உள்பட சுமாா் 20 ஆயிரம் பணியாளா்கள் ஊதியம் இன்றி கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனா். எனவே, மத்திய அரசு உடனடியாக, தமிழக அரசுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment