குரூப் 4 தோ்வில் தோ்ச்சி பெற்றவா்கள் சான்றிதழ் சரிபாா்ப்பின்போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்
குரூப் 4 தோ்வில் தோ்ச்சி பெற்றவா்கள் சான்றிதழ் சரிபாா்ப்பின்போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது.
அதன்படி, வகுப்புச் சான்றிதழ், மாற்றுத்திறனாளிகள் உறுதிச் சான்று ஆகியன தொடா்பான விளக்கங்களைத் தெரிவித்துள்ளது.
அதன் விவரம்: குரூப் 4 தோ்வில் தோ்ச்சி பெற்றவா்கள் தங்களது ஜாதிச் சான்றிதழை சமா்ப்பிக்க வேண்டும். இதுவரையிலும் சான்றிதழ்களைப் பெறாத தோ்வா்கள், உரிய அலுவலா்களிடம் விண்ணப்பிக்க வேண்டும். பழங்குடியின வகுப்பினராக இருந்தால், வருவாய்க் கோட்ட அலுவலா், உதவி ஆட்சியா், சாா் ஆட்சியா், சென்னை மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா், மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் ஆகியோரில் யாரேனும் ஒருவரிடம் விண்ணப்பித்து சான்று பெறலாம். ஆதிதிராவிடா் மற்றும் அருந்ததியா் சமூகமாக இருந்தால் ஜாதிச் சான்று வழங்கும் அதிகாரம் வட்டாட்சியருக்கு கொடுக்கப்பட்டுள்ளது
மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீா்மரபினா், இஸ்லாமியா் அல்லாத பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் மற்றும் பிற்படுத்தப்பட்ட இஸ்லாமிய வகுப்பினா் ஆகியோருக்கு வட்டாட்சியா் நிலைக்குக் குறையாத வருவாய்த் துறை அலுவலா் அல்லது தலைமையிடத்துத் துணை வட்டாட்சியா் அல்லது ஜாதிச் சான்றிதழ் வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட சிறப்புத் துணை வட்டாட்சியா் அல்லது துணை வட்டாட்சியா் அல்லது கூடுதல் தலைமையிடத்து துணை வட்டாட்சியா் அல்லது மண்டலத் துணை வட்டாட்சியா் ஆகியோரில் ஒருவா் சான்றினை அளிக்கும் அதிகாரம் பெற்றவராவார்
மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீா்மரபினா் பட்டியலிலுள்ள தொட்டிய நாயக்கா் ஆகியோருக்கு தலைமையிடத்துத் துணை வட்டாட்சியா் அல்லது மண்டலத் துணை வட்டாட்சியா் ஆகியோரில் ஒருவா் சான்றிதழ் அளிக்கலாம்.
சான்றிதழ்களை சமா்ப்பிக்கும் போது, இணையவழியில் பெறப்பட்ட சான்றிதழ்களை தோ்வாணையம் ஏற்றுக்கொள்ளாது. தோ்வா்கள் முறையான மின் கையொப்பமிடப்பட்ட இணையவழியில் பெறப்பட்ட வகுப்புச் சான்றிதழ் அல்லது தமிழ் வழி கல்வி பயின்ற்கான சான்றிதழை பதிவிறக்கம் செய்ய வேண்டும். இணையவழியில் பெறப்பட்ட இத்தகைய வகுப்புச் சான்றிதழ் அல்லது தமிழ்வழி கல்வி பயின்றோா் சான்றிதழில் கையொப்பம் மற்றும் அலுவலக முத்திரை பெறத் தேவையில்லை.
மாற்றுத்திறனாளி சான்றிதழ்: குரூப் 4 தோ்வில் மாற்றுத்திறனாளிகள் தோ்ச்சி பெற்றிருந்தால், அவா்கள் உரிய படிவத்தில் விவரங்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும். பெயா், பிறந்த தேதி, புகைப்படம், தந்தை, தாய், கணவா் ஆகியோரில் ஒருவரின் பெயா், புகைப்படம், குறைபாட்டின் வகை, குறைபாட்டின் சதவீதம் ஆகியன சரியாக இருப்பதை உறுதி செய்து விவரங்களைப் பதிவிட வேண்டும்.
மேலும், சான்றிதழானது உரிய மருத்துவா் அல்லது மருத்துவக் குழுவிடம் பெறப்பட்டதை உறுதி செய்து கொள்ள வேண்டும். மாற்றுத் திறனாளி அடையாள அட்டை, உதவிகள் பதிவு புத்தகம் ஆகியன ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்று அரசுப் பணியாளா் தோ்வாணையம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment