12ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் நெல் ஜெயராமன் குறித்த விஷயங்கள் இடம்பெற்றுள்ளன: தமிழ்நாடு பாடநூல் கழகம் தகவல் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, May 29, 2019

12ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் நெல் ஜெயராமன் குறித்த விஷயங்கள் இடம்பெற்றுள்ளன: தமிழ்நாடு பாடநூல் கழகம் தகவல்

பாரம்பரிய நெல் ரகங்களை காக்கும் முயற்சியில் செயல்பட்டு வந்த நெல் ஜெயராமன் குறித்த விஷயங்களை 12-ம் வகுப்பு தாவரவியல் புத்தகத்தில் பாடமாக தமிழக அரசு சேர்த்துள்ளது.


 2019-20 கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் 10,12-ம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டத்தின் கீழ் அச்சடிக்கப்பட்ட பாடப்புத்தகங்களின் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. பழைய பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டு புதிய பாடத்திட்டத்தின் கீழ் புத்தகங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.


 1, 6, 9, 11 ஆகிய வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டங்கள் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், 10,12 வகுப்புகளுக்கும் புதிய பாடதிட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. தனியார் பள்ளிகள், தேவையான புத்தகங்களை பதிவு செய்து பெறலாம் என பாடநூல் கழகம் அறிவித்துள்ளது.


மேலும் 12-ம் வகுப்பில் தாவரவியல், விலங்கியலுக்கு ஒரே புத்தகம் தான் எனவும் பாடநூல் கழகம் தகவல் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நெல் ஜெயராமன் குறித்த விஷயங்கள் 12ம் வகுப்பு பாட புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.  திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கட்டுமேடு கிராமத்தை சேர்ந்தவர்  விவசாயி நெல் ஜெயராமன்.


 இவர் அழிவின் விளிம்பில் இருந்த பாரம்பரிய நெல் வகைகளை மீட்டெடுத்தவர். இயற்கை வேளாண் விஞ்ஞானியான நம்மாழ்வாரின் சீடரான இவர் சுமார் 174 அறிய நெல் வகைகளை பாதுகாத்தவர்.


கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழகத்தின் பாரம்பரிய நெல் ரகங்களை தேடித் தேடி சேகரித்து பாதுகாத்தார். பாரம்பரிய நெல் வகைகளை காப்பாற்றியதற்காக மாநில மற்றும் தேசிய விருதுகளை இவர் பெற்றிருக்கிறார்.

 ஆண்டுதோறும் நெல் திருவிழா நடத்தி பாரம்பரிய நெல் விதைகள் குறித்து மக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக ஜெயராமன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 6ம் தேதி அதிகாலை 5 மணியளவில் நெல் ஜெயராமன் உயிர் பிரிந்தது.


இந்த நிலையில் பாரம்பரிய நெல் வகைகளை மீட்டெடுத்த நெல் ஜெயராமனை நினைவு கூறும் வகையில் அவரை பற்றிய குறிப்புக்கள் 12ம் வகுப்பு தாவரவியல் பாட புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. நெல் ஜெயராமனின் குறிப்புக்கள் விவசாயிகள் மற்றும் மாணவர்களிடம் நல்ல வரவேற்பை பெறும் என்று தமிழ்நாடு பாடநூல் கழகம் தெரிவித்துள்ளது.


 மேலும் ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டவுடன் பாடப்புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment