கலங்கி நின்ற மாற்றுத்திறனாளி மாணவி, கைகொடுத்த கலெக்டர்!' - ஈரோட்டில் நெகிழ்ச்சி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, June 4, 2019

கலங்கி நின்ற மாற்றுத்திறனாளி மாணவி, கைகொடுத்த கலெக்டர்!' - ஈரோட்டில் நெகிழ்ச்சி

ஏம்மா இன்னைக்குத்தான் ஸ்கூல் ஓப்பனிங் ஆச்சே, ஸ்கூலுக்குப் போகாம ஏன் கலெக்டர் ஆஃபீஸுக்கு வந்திருக்க!'

'இல்லைணா, நான் ஸ்கூல் முடிச்சிட்டு காலேஜ்ல சேர்ந்திருக்கேன். அம்மா ஹார்ட் ஆப்பரேஷன் செஞ்சு வீட்ல இருக்காங்க. கூலி வேலைக்குப் போனாலும் அப்பா கஷ்டப்பட்டு பணத்தைக் கட்டி என்னை காலேஜ்ல சேர்த்துட்டாரு. ஆனா, முழுசா காலேஜ் படிப்பை முடிப்பேனான்னு எனக்குத் தெரியலை' எனச் சொல்லும்போதே சந்திரிகாவின் கண்கள் கலங்க ஆரம்பித்தன.

ஈரோடு மாவட்டம், நம்பியூர் வட்டம் தீத்தாம்பாளையத்தைச் சேர்ந்த ஆறுமுகம் - பொங்கியம்மாள் தம்பதியரின் மூத்த மகள் சந்திரிகா. சிறுவயதிலேயே மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட சந்திரிகாவால், இயல்பாக நடக்க முடியாது.

ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு மேல் நடக்கவோ பயணம் மேற்கொள்ளவோ யாருடைய உதவியாவது தேவை என்கிற சூழல். இதய அறுவைசிகிச்சை செய்து வீட்டில் இருக்கும் தாய் ஒருபக்கம். இந்த சூழ்நிலைகளுக்கு இடையே, நம்பியூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்து, நடந்து முடிந்த 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 461 மதிப்பெண்கள் எடுத்திருக்கிறார். நன்கு படித்து வேலைக்குச் சென்று குடும்பத்தின் வலிகளைத் துடைக்க நினைத்த சந்திரிகாவுக்கு, கூலிவேலைக்குச் செல்லும் தகப்பன் ஆறுமுகம் ஆதரவாக இருந்திருக்கிறார். சிறுகச் சிறுக சேர்த்துவைத்த பணத்தோடு, கொஞ்சம் கடனையும் வாங்கி மகளை, கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.காம் பிரிவில் சேர்த்திருக்கிறார்.

கல்லூரியில் இருந்து இரண்டு கி.மீ தூரம் நடந்துவந்து, பேருந்தில் ஏறி அரைமணி நேரம் பயணித்தால்தான் சந்திரிகாவால் வீட்டுக்குச் செல்ல முடியும். சந்திரிகாவின் உடல்நிலை இதற்கு ஒத்துவராது. எனவே, கல்லூரி ஹாஸ்டலில் தங்கிப் படிப்பதுதான் ஒரே வழி என்றாகியிருக்கிறது. அட்மிஷன் ஃபீஸ், ஹாஸ்டல் ஃபீஸ்களைக் கட்டிய சந்திரிகாவிடம், 'மாதா மாதம் மெஸ் ஃபீஸ் 2,500-லிருந்து 3 ஆயிரம் வரை கட்ட வேண்டியிருக்கும்' எனக் கல்லூரி தரப்பில் சொல்லியிருக்கின்றனர்.

வீட்டில் ஹார்ட் ஆப்பரேஷன் செய்து படுத்துக்கிடக்கும் அம்மாவுக்கே மாதா மாதம் ஆயிரக்கணக்கில் மருந்துக்கு மட்டுமே செலவாக, எப்படி மாசம் 3 ஆயிரம் மெஸ் ஃபீஸ் கட்டுவது என கலங்கிப்போன சந்திரிகா, கடைசியாக உதவி கேட்டு வந்த இடம்தான் ஈரோடு கலெக்டர் அலுவலகம்.

'என்னால நடக்க முடிஞ்சா நான் தினமும் வீட்டுக்குப் போயிட்டு வந்துடுவேன். அது முடியாததாலதான், ஹாஸ்டல்ல தங்கிப் படிக்க வேண்டிய சூழல் உண்டாச்சு. ஆனா, மாதம் 3 ஆயிரம் ரூபா வரைக்கும் மெஸ் ஃபீஸ் ஆகும்னு சொல்றாங்க.

 என்னையை எங்கப்பா காலேஜ்ல சேர்த்துவிட்டதே பெரிய விஷயம். இதுல எங்கண்ணா மெஸ் ஃபீஸ் கட்டுறது. எனக்கு கலெக்டர் ஆகணும்னு ஆசை. ஆனா, மெஸ் ஃபீஸ் கட்டவே முடியலை. நான் முழுசா காலேஜ் படிப்பை முடிப்பனான்னு தெரியலை. அதான் கலெக்டரைப் பார்த்து ஏதாவது உதவி கேட்கலாம்னு வந்துருக்கேன்' என கலங்கிய சந்திரிகாவை, உடனே கலெக்டரிடம் அழைத்துச்சென்றோம்


சந்திரிகாவின் உடல்நிலை, குடும்பச் சூழல் மற்றும் மெஸ் ஃபீஸ் கட்ட முடியாமல் படும் சிரமங்கள் பற்றிய விவரங்களை கலெக்டர் கதிரவனிடம் எடுத்துச்சொன்னோம். சந்திரிகாவிடம் இருந்து கோரிக்கை மனுவைப் பெற்றுக்கொண்ட கலெக்டர் கதிரவன், 'கல்லூரி நிர்வாகத்திடம் பேசி, ஏதாவது ஏற்பாடுசெய்கிறேன்' என நம்பிக்கையளித்துச் சென்றார்.

மதியம் புதிய எண்ணிலிருந்து ஒரு அழைப்பு வந்தது. எதிர் முனையில் உற்சாகத்தோடு கூடிய சந்திரிகாவின் குரல், 'அண்ணா, கலெக்டர் சார், காலேஜ்ல பேசியிருக்காங்க. காலேஜ் தரப்புல இருந்து நான் படிச்சு முடிக்கிற 3 வருஷம் வரைக்கும் எனக்கு மெஸ் ஃபீஸ் கட்டத் தேவையில்லைனு உறுதியளிச்சிருக்காங்க. ரொம்ப நன்றிங்கண்ணா. நிச்சயமா நான் நல்லா படிச்சு நல்ல நிலைமைக்கு என் குடும்பத்தைக் கொண்டுட்டு போவேன்' என உற்சாகமடைந்தார்.

உடலில் பிரச்னை, அம்மாவின் இருதய ஆப்பரேஷன், குடும்பப் பொருளாதார சூழ்நிலை போன்றவற்றையும் மீறிப் படிக்க நினைக்கும் சந்திரிகா போன்ற குழந்தைகளுக்கு, இப்படியான உதவிகள்தான் பெரும் வாழ்வியல் நம்பிக்கையைத் தரும். அப்படி நம்பிக்கையளித்து உதவிய ஈரோடு கலெக்டர் கதிரவனுக்கும், கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கும் ஒரு பெரிய சல்யூட்...

No comments:

Post a Comment