இலவச மடிக்கணினிகளை பாதுகாப்பதில் தலைமையாசிரியர்களுக்கு சிக்கல் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, July 27, 2019

இலவச மடிக்கணினிகளை பாதுகாப்பதில் தலைமையாசிரியர்களுக்கு சிக்கல்

கடந்த 2017-18 மற்றும் 2018-19-ஆம் கல்வியாண்டில் பிளஸ் 2 படித்து முடித்த மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவதை நிறுத்தி வைக்க பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளதால் அந்த மடிக்கணினிகளை பாதுகாக்க முடியாமல் தலைமையாசிரியர்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.



மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் வகையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு இலவசமாக மடிக்கணினி வழங்கும் திட்டத்தை தொடக்கி வைத்தார். இந்நிலையில் கடந்த 2017-18 மற்றும் 2018-19 ஆம் கல்வியாண்டில் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு மக்களவைத் தேர்தல் காரணமாக மடிக்கணினி வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது


இந்நிலையில் தேர்தல் முடிந்ததைத் தொடர்ந்து தற்போது 2019-20 ஆம் கல்வியாண்டில் பிளஸ் 2 படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு மட்டும் கடந்த 1 மாதங்களாக அனைத்து பள்ளிகளிலும் மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது.



அதேவேளையில் கடந்த 2017-18 மற்றும் 2018-19 ஆம் கல்வியாண்டில் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு தற்போது மடிக்கணினி வழங்க வேண்டாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் கூறுகின்றனர். இதனால் இரவு நேர காவலர் இல்லாத அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு இலவசமாக வழங்க வேண்டிய மடிக்கணினியை பாதுகாத்து வைப்பது பெரும் சவாலாக உள்ளது.


மேலும் கடந்த காலங்களில் பல்வேறு அரசுப் பள்ளிகளில் திருடுபோன மடிக்கணினிக்கு அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்களே பொறுப்பு என்பதால் ஒவ்வொரு பள்ளி தலைமையாசிரியர்களும் அச்சத்துடன் உள்ளனர். கடந்த காலங்களில் மடிக்கணினி வழங்கும்போது மடிக்கணினி பெற்ற மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ்களில் வழங்கியதற்கான முத்திரையிடப்பட்டு வந்தது.



தற்போது வழங்கும் மடிக்கணினிக்கு சான்றிதழ்களில் முத்திரையிட தேவையில்லை என்ற அறிவிப்பும் வந்துள்ளதால், இதில் முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளது. மேலும் மடிக்கணினி இதுவரை கிடைக்கப்பெறாத பெற்றோர்களும் மாணவர்களும் தாங்கள் படித்த பள்ளிக்குச் சென்று மடிக்கணினி எப்போது வழங்கப்படும் எனக் கேட்டு வருகின்றனர். இதற்கு பதில் சொல்ல முடியாமல் அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள் தவித்து வருகின்றனர்.



மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் திட்டம் முழுமையாக மாணவர்களின் வளர்ச்சிக்கு சென்றடையவும், மாணவர்களின் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தாத வகையில் அனைவருக்கும் முறையாக மடிக்கணினி கிடைக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்களும், பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment