மெட்ரோவில் பெண்களுக்கு இலவச பயணம் திட்டம்: மாநில அரசின் அறிவிப்புக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, July 10, 2019

மெட்ரோவில் பெண்களுக்கு இலவச பயணம் திட்டம்: மாநில அரசின் அறிவிப்புக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

டெல்லி மெட்ரோவில் பெண்களுக்கு இலவச பயணம் என்ற மாநில அரசு அறிவிப்புக்கு தடைவிதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.


 டெல்லியில், இனி அனைத்து மாநகர பேருந்துகள், கிளஸ்டர் பேருந்துகள், மெட்ரோ ரயில்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர் என்று அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சமீபத்தில் அறிவித்திருந்தார்.


 இதற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்த நிலையில், டெல்லி மெட்ரோ ரயில் கழகத்தின் முதன்மை ஆலோசகர் ஸ்ரீதரன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.


இதுகுறித்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் எழுதிய கடிதத்தில், தற்போது டெல்லி மெட்ரோ ரயில் கழகம் ரூ.1,000 கோடி இழப்புடன் தான் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், பெண்களுக்கு மெட்ரோ ரயிலில் இலவசம் என்ற இந்த திட்டத்தை அமல்படுத்தினால், அரசுக்கு மேலும் வருவாய் இழப்பு ஏற்படும்.


ஏற்கனவே ஏற்பட்ட இழப்பை டெல்லி அரசு தான் மெட்ரோ ரயில் கழகத்திற்கு செலுத்தி வருகிறது. இந்நிலையில், இந்த புதிய திட்டம், டெல்லி அரசுக்கு மேலும் கூடுதல் சுமையை ஏற்படுத்தும்.


 எனவே, இந்த திட்டத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது, என்று குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில், இத்திட்டத்தை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.


 அதில், பெண்களுக்கு மட்டும் டெல்லி மெட்ரோவில் இலவச அனுமதி வழங்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், மெட்ரோ ரயில் கட்டணங்களை குறைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கானது இன்று நீதிபதிகள், டி.என்.படேல் மற்றும் சி.ஹரிசங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.


அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த திட்டத்தின் மீது தற்போது ஆலோசனை மட்டுமே நடத்தப்பட்டு வருவதாகவும், இதனை ரத்து செய்தால் மிகவும் ஆரம்ப கட்டத்திலேயே ரத்து செய்யப்பட்டதாகிவிடும் எனவும் கூறினார். இதனை ஏற்ற நீதிபதிகள், மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்து, அவருக்கு ரூ.10,000 அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.


மேலும், கட்டணத்தை குறைக்க வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கை குறித்து பேசிய நீதிபதிகள், மெட்ரோ ரயில் கட்டணங்களை நிர்ணயிப்பது என்பது சட்டரீதியான செயலாகும். இதனை ஒரு பொதுநல மனுவின் காரணமாக மாற்றியமைக்க முடியாது என்று கூறி மனுதாரரின் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டனர்.

No comments:

Post a Comment