பள்ளிகளை சீரமைக்க சுற்றறிக்கை அனுப்புவதில் தீர்வு இல்லை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, December 29, 2019

பள்ளிகளை சீரமைக்க சுற்றறிக்கை அனுப்புவதில் தீர்வு இல்லை

பள்ளிகளை சீரமைக்க வெறுமனே சுற்றறிக்கை அனுப்புவதில் தீர்வு இல்லை என்று சி.பி.எஸ்.இக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக  அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:


மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சி.பி.எஸ்.இ) ஆளுகைக்குள் இயங்கும் அனைத்து பள்ளிகளின் வளாகங்களும் கோபம் இல்லாத, மகிழ்ச்சி நிறைந்த பகுதிகளாக மாற்றப்பட வேண்டும் என்று சிபிஎஸ்சி அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.


பள்ளி நிர்வாகங்களுக்கு இது தொடர்பாக சி.பி.எஸ்.இ செயலாளர் அனுராக் திரிபாதி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், பள்ளிகளில் ஆசிரியர்கள், பணியாளர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட அனைவரும் தங்களின் கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும்; மாணவர்களிடம் கோபத்தை வெளிப்படுத்தக்கூடாது; பள்ளிகளில் செல்பேசிகளை பயன்படுத்தக்கூடாது; அனைவரும் மூச்சுப்பயிற்சிகளை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.



பள்ளிக்குழந்தைகள் அனுபவிக்கும் அச்சம், மனவேதனை, எதிர்கொள்ளும் அவமானம், அவமரியாதை ஆகிய அனைத்துக்கும் பள்ளி வளாகங்களில் பல திசைகளில் இருந்தும் அவர்கள் மீது ஏவப்படும் கோபம் தான் காரணம் எனும் நிலையில், பள்ளி வளாகங்களை கோபமற்ற, மகிழ்ச்சியான பகுதிகளாக மாற்ற வேண்டும் என்ற சி.பி.எஸ்.இ&யின் முடிவு பாராட்டப்பட வேண்டியதாகும்.


பள்ளி வளாகங்கள் கோபமற்ற, மகிழ்ச்சியான பகுதிகளாக திகழ வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடும் ஆகும். ஆனால், பள்ளி வளாகங்களில் கோபம் ஏற்படுவதற்காக காரணிகளை அகற்றுவது தான் இதற்கு சிறந்த தீர்வாக இருக்குமே தவிர, கோபத்தை கட்டுப்படுத்துவது முழுமையாக பயனளிக்காது. அது ஓட்டை பாத்திரத்தில் தண்ணீர் பிடிக்கும் செயலாகவே அமையும்.

பள்ளிகள் கோபமற்ற, மகிழ்ச்சியாக பகுதிகளாக மாற்றப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.


ஆனால், அதற்கான தீர்வு கல்வி முறையை மாற்றியமைப்பதில் தான் இருக்கிறதே தவிர, வெறுமனே சுற்றறிக்கை அனுப்புவதில் இல்லை. உலகில் தரமான, சிறப்பான கல்வி பின்லாந்தில் தான் வழங்கப்படுகிறது. அந்நாட்டில் உள்ள பள்ளி வளாகங்கள் தான் கோபம் இல்லாத, மகிழ்ச்சி நிறைந்த பகுதிகளாக திகழ்கின்றன.


 இதற்குக் காரணம் அங்கு மழலையர் கல்வி இல்லை, ஆங்கில வழிக் கல்வி இல்லை, அதிக மதிப்பெண் எடுக்க வேண்டிய கட்டாயமோ, தரவரிசையோ இல்லை, வீட்டுப் பாடம் இல்லை, நுழைவுத்தேர்வுகள் இல்லை என்பது தான்.


இவ்வளவுக்குப் பிறகும் அங்கு படிப்பவர்கள் புத்திசாலிகளாகவும், சிந்திக்கும் திறன் கொண்டவர்களாகவும் உள்ளனர். ஆனால், இவ்வளவு இருந்தும் இந்தியக் கல்வி முறையில் பயில்பவர்கள் ஏட்டு சுரைக்காய்களாக மட்டும் தான் விளங்குகின்றனர்.

சுருக்கமாக கூற வேண்டுமானால், மலர்களாக கையாளப்பட வேண்டிய மாணவர்களை, மனிதர்களாகக் கூட கையாளாமல், மதிப்பெண் எந்திரங்களாக கையாளுவது தான் அனைத்துக்கும் காரணம் ஆகும். இந்த நிலையை மாற்ற வேண்டும்; அனைத்து நுழைவுத் தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும்;


 கல்வியை சுகமானதாகவும், சுமையற்றதாகவும் மாற்ற வேண்டும். அதன்மூலமாகத் தான் பள்ளிகளை கோபம் இல்லாத, மகிழ்ச்சி நிறைந்த பகுதிகளாக மாற்ற முடியும் என்பதை அரசுகள் உணர வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment