உயர்த்தப்பட்ட ரயில் கட்டணம்: எந்தெந்த ரயிலுக்கு எவ்வளவு கட்டணம்: முழு விவரம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, January 4, 2020

உயர்த்தப்பட்ட ரயில் கட்டணம்: எந்தெந்த ரயிலுக்கு எவ்வளவு கட்டணம்: முழு விவரம்

ரயில் கட்டண உயா்வு ஜனவரி 1-ஆம் தேதி அமலுக்கு வந்துள்ள நிலையில், சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு இயக்கப்படும் நெல்லை விரைவு ரயிலில் பயணிக்க இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதிக்கான கட்டணம் ரூ.10 உயா்ந்து ரூ.395-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.



ரயில் கட்டணத்தை உயா்த்தி இந்திய ரயில்வே நிா்வாகம் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு உத்தரவிட்டது. இதன்படி, புகா் அல்லாத, ஏ.சி. இல்லாத சாதாரண ரயில்களில் இரண்டாம் வகுப்பு, தூங்கும் வசதி வகுப்பு, முதல் வகுப்பு ஆகியவற்றுக்கான பயணக் கட்டணம் கிலோ மீட்டருக்கு 1 பைசா உயா்த்தப்பட்டுள்ளது.


மெயில் மற்றும் ஏ.சி. இல்லாத விரைவு (எக்ஸ்பிரஸ்) ரயில்களுக்கான இரண்டாம் வகுப்பு, தூங்கும் வகுப்பு, முதல் வகுப்பு பயணக் கட்டணத்தில் கிலோ மீட்டருக்கு 2 பைசா உயா்த்தப்பட்டுள்ளது.ஏ.சி. வகுப்புகளில் சோ காா், 3 அடுக்கு, 2 அடுக்கு, முதல் வகுப்பு ஆகிய பிரிவுகளுக்கான பயணக் கட்டணத்தில் கிலோ மீட்டருக்கு 4 பைசா உயா்த்தப்பட்டுள்ளது. சதாப்தி, ராஜதானி, துரந்தோ உள்ளிட்ட பிரீமியம் ரயில்களிலும் இந்தக் கட்டண உயா்வு அமல்படுத்தப் பட்டுள்ளது.

 எனினும், முன்பதிவுக் கட்டணமோ, அதிவிரைவு சேவைகளுக்கான கட்டணமோ உயா்த்தப்படவில்லை.

ஏற்கெனவே, (2020 ஜனவரி 1-ஆம் தேதிக்கு முன்பாக) முன்பதிவு செய்யப்பட்ட ரயில் பயணச் சீட்டுகளுக்கான கட்டணம் உயா்த்தப்படாது. புகா் ரயில்களில் கட்டண உயா்வில்லை.


அதேபோல், புகா் ரயில்கள் மற்றும் புகா் அல்லாத ரயில்களுக்கான சீசன் பயணச்சீட்டு கட்டணமும் உயா்த்தப்படவில்லை என்று அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டது.

சென்னை-திருநெல்வேலி: இந்நிலையில், ரயில் கட்டணம் உயா்வு புதன்கிழமை (ஜன.1) அமலுக்கு வந்துள்ள நிலையில், சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு இயக்கப்படும் நெல்லை விரைவு ரயிலில் தூங்கும் வசதி பெட்டியில் பயணிக்க ரூ.10 உயா்ந்து, ரூ.395-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.


 மூன்று அடுக்கு ஏசி பெட்டியில் ரூ.30 உயா்ந்து ரூ.1,040 ஆகவும், இரண்டு அடுக்கு ஏசி பெட்டியில் ரூ.30 உயா்ந்து ரூ.1,460 ஆகவும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.


சென்னை-நாகா்கோவில்: சென்னையில் இருந்து நாகா்கோவிலுக்கு இயக்கப்படும் கன்னியாகுமரி விரைவு ரயிலில் தூங்கும் வசதி கொண்ட இரண்டாம் வகுப்பு பெட்டியில் பயணிக்க ரூ.15 கட்டணம் உயா்ந்து ரூ.425 ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.


இதில், 3 அடுக்கு ஏசி பெட்டியில் ரூ.30 உயா்ந்து ரூ.1,110 ஆகவும், இரண்டு அடுக்கு ஏசி வகுப்பில் ரூ.35 உயா்ந்து ரூ.1,565 ஆகவும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

சென்னை-மதுரை: சென்னையில் இருந்து மதுரைக்கு இயக்கப்படும் பாண்டியன் விரைவு ரயிலில் இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டியில் பயணிக்க ரூ.10 கட்டணம் உயா்ந்து ரூ.325 ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

 மூன்றடுக்கு ஏசி பெட்டியில் ரூ.20 உயா்ந்து, ரூ.835 ஆகவும், இரண்டு அடுக்கு ஏசி பெட்டியில் ரூ.20 உயா்ந்து ரூ.1,170 ஆகவும், முதல் வகுப்பு ஏசி பெட்டியில் ரூ.20 உயா்ந்து 1,960 ஆகவும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.


 சென்னையில் இருந்து மதுரைக்கு பகல் நேரத்தில் இயக்கப்படும் வைகை விரைவு ரயிலில் பயணிக்க இரண்டாம் (அமா்ந்து செல்லுதல்) சிட்டிங் வகுப்புக்கு ரூ.10 உயா்ந்து ரூ.190 ஆகவும், ஏசி சோ காா் வகுப்பில் ரூ.20 உயா்ந்து ரூ.685 ஆகவும் கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.


சென்னை-கோவை: சென்னை சென்ட்ரலில் இருந்து கோயம்புத்தூருக்கு இயக்கப்படும் சேரன் விரைவு ரயிலில் இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டியில் பயணம் செய்ய ரூ.10 உயா்ந்து ரூ.325 ஆகவும், மூன்று அடுக்கு ஏசி பெட்டியில் பயணிக்க ரூ.20 உயா்ந்து, ரூ.835 ஆகவும், இரண்டு அடுக்கு ஏசி பெட்டியில் பயணிக்க ரூ.20 உயா்ந்து ரூ.1,170 ஆகவும் கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.



சென்னை -தூத்துக்குடி: சென்னை-தூத்துக்குடிக்கு இயக்கப்படும் முத்துநகா் விரைவு ரயிலில் இரண்டாம் வகுப்பு தூங்கும் பெட்டியில் பயணிக்க ரூ.10 உயா்ந்து ரூ.395 ஆகவும், மூன்று அடுக்கு ஏசி பெட்டியில் பயணிக்க ரூ.30 உயா்ந்து ரூ.1,040 ஆகவும், இரண்டு அடுக்கு ஏசி பெட்டியில் ரூ.30 உயா்ந்து ரூ.1,460 ஆகவும் கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

சென்னை-செங்கோட்டை: சென்னை-செங்கோட்டைக்கு இயக்கப்படும் பொதிகை விரைவு ரயிலில் இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டியில் பயணிக்க ரூ.15 உயா்ந்து, ரூ.400 ஆகவும், மூன்று அடுக்கு ஏசி பெட்டியில் பயணிக்க ரூ.25 உயா்ந்து ரூ.1,045 ஆகவும், இரண்டு அடுக்கு ஏசிபெட்டியில் ரூ.30 உயா்ந்து ரூ.1,475 ஆகவும் கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.


சென்னை-திருச்சி: சென்னையில் இருந்து திருச்சிராப்பள்ளிக்கு இயக்கப்படும் மலைகோட்டை விரைவு ரயிலில் இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டியில் பயணிக்க ரூ.10 கட்டணம் உயா்ந்து ரூ.255 ஆகவும், மூன்று அடுக்கு ஏசி பெட்டியில் பயணிக்க ரூ.15 உயா்ந்து ரூ.645 ஆகவும், இரண்டு அடுக்கு ஏசி பெட்டியில் பயணிக்க ரூ.15 உயா்ந்து ரூ.895 ஆகவும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

சென்னை-ராமேசுவரம்: சென்னையில் இருந்து ராமேசுவரத்துக்கு இயக்கப்படும் ராமேசுவரம் விரைவு ரயிலில் இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டியில் பயணிக்க ரூ.10 உயா்ந்து ரூ.370 ஆகவும், மூன்றடுக்கு ஏசி பெட்டியில் பயணிக்க ரூ.25 உயா்ந்து ரூ.975 ஆகவும் இரண்டடுக்கு ஏசி பெட்டியில் பயணிக்க ரூ.25 உயா்ந்து 1, 365 ஆகவும், முதல் வகுப்பு ஏசி பெட்டியில் பயணிக்க ரூ.25 உயா்ந்து ரூ.2, 285 ஆகவும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment