காரே வைத்திருக்காத நிலையில் சீட்பெல்ட் அணியவில்லை என அபராதம்: பள்ளி ஆசிரியர் அதிர்ச்சி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, January 28, 2020

காரே வைத்திருக்காத நிலையில் சீட்பெல்ட் அணியவில்லை என அபராதம்: பள்ளி ஆசிரியர் அதிர்ச்சி

சென்னை கொருக்குப்பேட்டை தட்டான்குளம் தெருவை சேர்ந்தவர் சிவா (25). தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர், கடந்த 2018ம் ஆண்டு வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் ஷோரூமில், தவணை முறையில் பைக் ஒன்றை வாங்கியுள்ளார்.



இதற்கான மாத தவணை கட்டி முடிந்ததும், தடையில்லா சான்று (என்ஓசி) வாங்குவதற்காக தண்டையார்பேட்டையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு சிவா சென்றார். அப்போது, கடந்த 17ம் தேதி, கொடுங்கையூர் எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் காரில் சீட்பெல்ட் அணியாமல் சென்றதாக சிவாவுக்கு ரூ.100 அபராதம் விதித்து, பணத்தை கட்டும்படி அதிகாரிகள் கூறியுள்ளனர்.


அதற்கு அவர், “என்னிடம் கார் இல்லை. மேலும், நீங்கள் குறிப்பிடும் தேதியில் நான் சென்னையில் இல்லை. சொந்த ஊரான கடலூருக்கு சென்று இருந்தேன். அப்படி இருக்கையில், நான் எப்படி அபராதம் செலுத்த முடியும்” என சிவா கூறியுள்ளார்.

அதற்கு அதிகாரிகள், “அபராத தொகை கட்டினால்தான் என்ஓசி தரமுடியும்” என கூறியுள்ளனர். இதையடுத்து அபராத தொகையை கட்டிவிட்டு சென்றுள்ளார். இது, போக்குவரத்து அதிகாரிகளின் கவனக்குறைவால், இதுபோல் பல வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.



இதுகுறித்து கொடுங்கையூர் போக்குவரத்து உதவி ஆய்வாளர் பாலாமணியிடம் கேட்டபோது, “எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் கடந்த 17ம் தேதி பணியில் இருந்த போக்குவரத்து காவலர், சீட் பெல்ட் அணியாமல் காரில் சென்ற ஒரு நபரின் நம்பரை குறித்து கொடுத்தார். அதில் ஒரு நம்பர் தவறுதலாக பதிவிடப்பட்டது


. இதனால் கொருக்குப்பேட்டை தட்டான்குளத்தை சேர்ந்த சிவா என்பவரின் நம்பருக்கு கணினியில் அபராதம் பதிவேற்றம் செய்யப்பட்டது. தற்போது அந்த நம்பர் தவறு என்று தெரிந்தவுடன் அந்த நம்பரை சோதனை செய்ததில் உண்மையாக காரில் சீட் பெல்ட் அணியாமல் சென்ற நபரை கண்டுபிடித்து விட்டோம். அவருக்கு அபராதம் விதித்துள்ளோம்.



 இது தவறுதலாக நடந்த ஒரு செயல்” என்று கூறினார். இதுகுறித்து சிவாவிடம் கேட்டபோது, “கடந்த 17ம் தேதி நான் பொங்கல் விடுமுறைக்கு சொந்த ஊரான கடலூருக்கு சென்றுவிட்டேன். அந்த நேரத்தில் அங்கு நான் இல்லை. இதுபோன்ற நேரங்களில் காவல்துறையினர் கவனமுடன் செயல்படவேண்டும்” என்றார்.

No comments:

Post a Comment