ஒரே சமயத்தில் பல பயிற்சிகள்: பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லாததால் கடும் அவதி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, January 25, 2020

ஒரே சமயத்தில் பல பயிற்சிகள்: பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லாததால் கடும் அவதி

சேலம் மாவட்டத்தில், ஒரே சமயத்தில் பெரும்பாலான ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்படுவதால், அரசு பள்ளிகளில் ஆட்கள் இல்லாத நிலை காணப்படுகிறது.



சேலம் மாவட்ட அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆறு கட்டங்களாக மாணவர்களின் பாதுகாப்பு குறித்த ஒரு நாள் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இதில், ஒவ்வொரு பள்ளியிலிருந்தும், 20 சதவீத ஆசிரியர்கள் பங்கேற்கின்றனர். இதே போல், நேற்று ஹோலிகிராஸ் பள்ளியில், சாரண, சாரணியர் ஒருங்கிணைப்பாளர்களுக்கான பயிற்சி நடந்தது.


இதில், பள்ளியிலிருந்து ஒருவர் பங்கேற்றனர். இதே போல், சாலை பாதுகாப்பு குறித்த பயிற்சி, பள்ளி மேலாண்மைக்குழு பயிற்சி உள்ளிட்டவைகளுக்கு, அனைத்து பள்ளிகளிலிருந்தும் பங்கேற்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது


இதுமட்டுமின்றி, டயட் மையத்தில் மொழிபெயர்ப்பு பணிக்கு, 20க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், குடியரசு தின விழா ஏற்பாடுகளுக்கு, 20க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். இதனால், அரசு பள்ளிகளில் ஆசிரியர்களே இல்லாத நிலை உள்ளது. இதனால், மாணவ, மாணவியர் அவதிக்கு உள்ளாகின்றனர்.



இதுகுறித்து, அரசு பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது: ஏற்கனவே தேர்தல் பணி காரணமாக, ஜன., 2ல் திறக்க வேண்டிய பள்ளிகள், ஜன., 6ல் தான் திறக்கப்பட்டன. இந்நிலையில், ஒவ்வொரு பள்ளியிலிருந்தும், ஆசிரியர்கள் பல்வேறு பயிற்சி மற்றும் பணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளனர்.

பள்ளி பரிமாற்ற திட்டத்தில், ஒரு ஆசிரியர் வேறு பள்ளிக்கு மாணவர்களை அழைத்து செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


 இதனால், அரசு பள்ளிகளில், மிகக்குறைந்த அளவே ஆசிரியர்கள் உள்ளனர். இந்நிலையில், 9, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு சோதனை தேர்வு, 10ம் வகுப்புக்கு திருப்பத்தேர்வு உள்ளிட்டவையும் மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதனால், பள்ளிகளில் கற்பித்தல் பணி முடங்கியுள்ளது.



 கல்வியாண்டின் துவக்கத்தில் பயிற்சிகளை நடத்தாமல், தேர்வு நெருங்கும் சமயத்தில் ஒட்டுமொத்தமாக அனைத்து பயிற்சிகளையும் வழங்குவதால், மாணவர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகின்றனர். இதன் விளைவுகள், பொதுத்தேர்வு முடிவுகளில் எதிரொலிக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment