ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவதில் சிக்கல் - Minnal Kalvi Seithi

Breaking

Wednesday, April 15, 2020

ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவதில் சிக்கல்

தூத்துக்குடி- பாளையங்கோட்டை சாலையில் அமைந்துள்ளது அந்தோணியார்புரம் கிராமம். இங்குள்ள மக்கள் பனைத் தொழிலை பிரதானமாக செய்து வருகின்றனர்.

ஆண்டுதோறும் பதனீர் சீசனின் போது ஊர் கமிட்டி சார்பில் ஊரில் கிடைக்கும் பதநீரை மொத்தமாக வாங்கி விற்பனை செய்கின்றனர். சாலையோரம் பதநீர் விற்பனை நிலையம் அமைத்து பிப்ரவரி முதல் ஜூன் வரை 5 மாதங்கள் பதநீர் விற்பனை செய்வார்கள்.

இதில் கிடைக்கும் வருவாயை கொண்டு தான் ஊரில் உள்ள ஆர்.சி. நடுநிலைப்பள்ளியில் 6, 7 மற்றும் 8-ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு கடந்த 15 ஆண்டுகளாக ஊதியம் வழங்கி வருகின்றனர்.

இந்த மூன்று வகுப்புகளுக்கும் அரசு அங்கீகாரம் கிடைக்காததால் ஊர் மக்களே ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கி வருகின்றனர்.

இந்த ஆண்டும் வழக்கம் போல் பிப்ரவரி 15-ம் தேதிக்கு பிறகு பதநீர் சீசன் தொடங்கியது. தூத்துக்குடி- பாளையங்கோட்டை சாலையில் பதநீர் விற்பனை நிலையம் அமைத்து பதநீர் விற்பனையை தொடங்கினர்.

ஆனால், கரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து சாலையோரம் வைத்து பதநீர் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது. இதனால் ஊர் கமிட்டி சார்பில் பதநீர் விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து அந்தோணியார்புரம் ஊர் கமிட்டி செயலாளர் ஏ.ஏ.தஸ்நேவிஸ் கூறியதாவது: சாலையோரம் பதநீர் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதால், வழக்கமான வாடிக்கையாளர்களுக்கு மட்டும் பதநீர் இறக்கும் பகுதியிலேயே காலை 11 மணி வரை பதநீரை விற்பனை செய்கிறோம்.

அதன் பிறகு பதநீரை காய்ச்சி கருப்பட்டி தயாரிக்கிறோம். தற்போது தினமும் 120 முதல் 150 லிட்டர் பதநீர் கிடைக்கிறது. வரும் நாட்களில் இது 200 முதல் 250 லிட்டர் வரை உயரும்.


பதநீராக விற்பனை செய்தால் தான் லாபம் கிடைக்கும். கருப்பட்டி தயாரிக்கும் போது செலவு அதிகமாகி லாபம் ஏதும் கிடைக்காது.

 பதநீர் விற்பனை மூலம் ஆண்டுக்கு ரூ.2 லட்சம் முதல் ரூ.2.5 லட்சம் வரை வருமானம் கிடைக்கும். இதைக் கொண்டு தான் எங்கள் ஊர் பள்ளியில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பாடம் நடத்தும் 3 ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.7 ஆயிரம் ஊதியம் கொடுக்கிறோம்.

மேலும் வாரம் 2 நாட்கள் வந்து விளையாட்டு சொல்லி கொடுக்கும் உடற்கல்வி ஆசிரியருக்கு மாதம் ரூ.2 ஆயிரம் கொடுக்கிறோம். இதற்காக மாதம் ரூ.23 ஆயிரம் செலவிடுகிறோம்.

 இந்த ஆண்டு ஆசிரியர்களுக்கு ஊதியம் கொடுப்பதில் பிரச்சினை வரும். வேறு வழியில் தான் அதனை சமாளிக்க வேண்டும் என்றார் அவர்.

No comments:

Post a Comment