கரோனா ஊரடங்கு உத்தரவு: வறுமையில் வாடிய குடும்பங்களுக்கு உதவிக்கரம் நீட்டிய அரசு பள்ளி தலைமையாசிரியர் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, April 3, 2020

கரோனா ஊரடங்கு உத்தரவு: வறுமையில் வாடிய குடும்பங்களுக்கு உதவிக்கரம் நீட்டிய அரசு பள்ளி தலைமையாசிரியர்

கரோனா வைரஸ் தொற்று ஊரடங்கு உத்தரவினால் எட்டயபுரம் அருகேயுள்ள ராமனூத்து கிராமத்தில் பாதிக்கப்பட்டுள்ள ஏழை எளிய 25 குடும்பங்களுக்கு உணவு தேவைக்கான மளிகை பொருள்களை வழங்கிய பள்ளி தலைமையாசிரியருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

எட்டயபுரத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது ராமனூத்து கிராமம். இங்கு 250க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. பெரும்பாலானோர் விவசாய கூலிகள். சிலர் அருகில் உள்ள எட்டயபுரத்துக்கு சென்று கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர்.


 தற்போது கரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக அமலில் உள்ள ஊரங்கு உத்தரவினால் கிராமங்களில் யாரும் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலையில் உள்ளனர்.

இதில் இராமனூத்து கிராமத்தில் 25 குடும்பங்கள் மிகவும் வறுமையில் எந்தவித வருமானமும் இன்றி சாப்பாட்டுக்கு பெரும் கஷ்டத்தை அனுபவித்து வந்துள்ளனர்.

இதனை ராமனூத்து அரசு ஆரம்ப பள்ளியில் தலைமையாசிரியராக பணிபுரிந்து வரும் மு.க. இப்ராஹிம் தனது பள்ளி மாணவர்கள் மூலம் தெரிந்து கொண்டுள்ளார்.

உடனடியாக ராமனூத்து கிராமத்தில் உள்ள 25 ஏழை குடும்பங்களுக்கும் தலா 600 ரூபாய் மதிப்பிலான சமையலுக்கு தேவையான மளிகை பொருள்களை தனது சொந்த செலவில் வாங்கி வீடு வீடாக நேரில் சென்று வழங்கியுள்ளார்.

ஆசிரியர் மு.க.இப்ராஹிமின் இந்த உதவியால் 25 ஏழை குடும்பங்களும் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். இத்தகவல் இராமனூத்து மற்றும் அருகாமை கிராமங்களுக்கு பரவவே ஆசிரியர் மு.க. இப்ராஹிமுக்கு ஏராளமான பாராட்டுகளும், வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன.


இதுகுறித்து ஆசிரியர் மு.க. இப்ராஹிம் கூறுகையில், ஆசிரியர் பணி என்பது மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பது மட்டுமல்ல இதுபோன்ற இன்னல்களில் சமூகப் பங்களிப்பு செய்வதும் சுற்றத்தாருக்கு உதவிக்கரம் நீட்டுவதும் முக்கியமான கடமை தான்.


இதுபோன்ற சின்ன சின்ன உதவிகளில் தான் மிகப்பெரிய மனநிறைவு இருக்கும். இயன்ற அளவுக்கு உதவி செய்யும் மனப்பான்மை, மனித நேயமிக்க செயல்கள் அனைவரிடத்திலும் ஏற்பட வேண்டும் என்றார்.

தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம் என்றார் பாரதி. பாரதி பிறந்த எட்டயபுரம் மண்ணில் ஒரு ஆரம்ப பள்ளியின் தலைமையாசிரியர் தன்னிடம் பயிலும் குழந்தைகளும், அவர்களது குடும்பங்களும் வறுமையில் வாடியதை கேட்டு தாமதமின்றி உதவிக்கரம் நீட்டிய செயல் பாரதிக்கு செலுத்தும் உண்மையான புகழஞ்சலியாகவே பார்க்க முடிகிறது.

No comments:

Post a Comment