நிழல் இல்லா நாள்: வீட்டிலிருந்தே எளிதாக இம்மாதம் பார்க்கலாம் - Minnal Kalvi Seithi

Breaking

Thursday, April 16, 2020

நிழல் இல்லா நாள்: வீட்டிலிருந்தே எளிதாக இம்மாதம் பார்க்கலாம்

நிழல் இல்லா நாள் நிகழ்வை வீட்டிலிருந்தே கரோனா தொற்று காலத்திலும் ஒவ்வொருவரும் வீட்டு மாடி, தரைப்பகுதிகளில் அறிவியல் சாதனங்களின்றி எளிய முறைகளில் கண்டு களிக்கலாம். ஆண்டுக்கு இரண்டு முறை மட்டுமே நிகழும் இந்த அரிய நிகழ்வு என்பது கூடுதல் சிறப்பு.

நிழல் இல்லா நாளா? நிழலே விழாத நாள் எப்படி சாத்தியம் என்று பார்க்கிறீர்களா? அப்படியில்லை. அந்தக் குறிப்பிட்ட நாளில் நண்பகலில் மிகச்சரியாக சூரியன் நமது தலைக்கு மேல் இருக்கும்.அப்போது நிழலானது எந்தப் பக்கமும் சாயாமல் நேராக நமது காலடியிலேயே இருக்கும். அதாவது, செங்குத்தாக நிற்கும் பொருட்களின் நிழல் அதன் அடியிலேயே விழுந்துவிடுவதால் நம் கண்களுக்குத் தெரியாது.

அந்த நாளைத்தான் 'நிழலில்லா நாள்'. பூஜ்ஜிய நிழல் நாள் என்கிறோம்.

தினமும் தானே சூரியன் நம் தலைக்கு மேலே வரும், இதில் என்ன அதிசயம் என்கிறீர்களா? அதுதான் இல்லை. வருடத்தில் இரண்டு நாட்களில் மட்டுமே சூரியன் மிகச்சரியாக நம் தலைக்கு மேலே வரும். அந்த இரண்டு நாட்களில் மட்டுமே நிழல் முழுவதுமாக மறையும்


. மற்ற நாட்களில் நண்பகலில் கூட வடக்கு திசையிலோ அல்லது தெற்கு திசையிலோ சிறிய நிழல் விழும். இந்த இரண்டு நிழலில்லா நாட்கள் கூட கடக ரேகைக்கும் மகர ரேகைக்கும் இடைப்பட்ட பகுதியில்தான் வரும். அதற்கு அப்பால், துருவப்பகுதி வரை சூரியன் தலைக்கு மேலே வரவே வராது.

இதுபற்றி புதுச்சேரி ஹர்கோபிந்த் குரானா அறிவியல் மன்ற செயலர் முனைவர் அருண் ராமலிங்கத்திடம் கேட்டதற்கு, "பூஜ்ஜிய நிழல் நாள் -Zero Shadow Day (ZSD) என்ற செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். நிழல் இல்லா நாள் குறித்த ஏராளமான தகவல்கள் இதில் உள்ளன. அது மட்டுமல்ல, அதில் உள்ள ZSD Finder மூலம் இந்திய வரைபடத்தில் உங்கள் ஊர் அமைந்துள்ள இடத்தைத் தொட்டால் அங்கு நிழல் இல்லா நாள் எந்த தேதிகளில் ஏற்படும் என்று காட்டும். புதுச்சேரியில் நிழல் இல்லா நாளாக 20.04.2020 (திங்கட்கிழமை) இருக்கும்.


நிழல் மறைவதைப் பார்ப்பது மிகவும் எளிது. உங்கள் வீட்டில் உருளை வடிவில் இருக்கும் எந்த பொருளையாவது செங்குத்தாக ஒரு சமதளத்தில் நிறுத்துங்கள். பவுடர் டப்பா, டார்ச் லைட், கோந்து பாட்டில், ஸ்பிரே பாட்டில் எதுவாக இருந்தாலும் சரி. நீங்கள் நிறுத்துவது சமதளமாக இருக்கிறதா என்று அறிய, ரசமட்டக் கருவி (ஸ்பிரிட் லெவல் Spirit level) பயன்படுத்தலாம். அல்லது உங்கள் ஸ்மார்ட்போனில் குமிழ்மட்ட செயலியை (spirit level / bubble level Mobile App) நீங்கள் தரவிறக்கம் (Download) செய்து கொள்ளலாம்.தளத்தின் மீது ரசமட்டக் கருவி (அ) குமிழ்மட்ட செயலியுடன் கூடிய அலைபேசியை வைக்கும்போது குமிழானது கருவியின் மையத்தில் இருந்தால், அது சமதளமாக இருக்கிறது என்று அறிந்துகொள்ளலாம். இந்த சமதளத்தின் மீது நாம் தயாராக வைத்துள்ள உருளை வடிவ பொருட்களை செங்குத்தாக நிறுத்தவும்.

நண்பகல் ஆரம்பிக்கும் முன்பே உங்கள் சோதனையைத் தொடங்கிவிடுங்கள். இப்போது அந்தப் பொருளின் நிழல் மேற்கு திசையில் விழும்.


நேரம் செல்லச் செல்ல நிழலின் நீளம் குறைந்து உங்கள் பகுதியில் சரியாக நண்பகலில் நிழல் முற்றிலுமாக மறைந்துவிடுவதைக் காணலாம். ஆண்டுக்கு இரண்டு முறை மட்டுமே நிகழும் இந்த அரிய நிகழ்வை நண்பர்களுடன் தனித்தனியாக பாதுகாப்புடன் கண்டுகளியுங்கள்.

சிறிது நேரத்தில், சூரியன் மேற்கு நோக்கி சரியச் சரிய, நிழலானது கிழக்கு திசையில் நீண்டுகொண்டே போகும். இந்த நிழலின் நீளத்தை அளந்து தான் முற்காலத்தில் நேரத்தை கணக்கிட்டனர்.

சூரிய நண்பகல்

இன்னும் ஒரு உண்மை தெரியுமா? பொதுவாக நாம் பகல் 12 மணியைத்தான் நண்பகல் என்று கூறுகிறோம். ஆனால் எல்லா இடங்களிலும் 12 மணிக்கு சூரியன் செங்குத்தாக இருப்பதில்லை. நமது இந்திய திட்ட நேரம் (Indian standard time) கிரீன்விச் நேரத்தை (Greenwich mean time) விட 5.30 மணிநேரம் கூடுதலாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் 82.5° கிழக்கு தீர்க்க ரேகையில் சூரியன் செங்குத்தாக அமையும்

எனவே, இந்த தீர்க்கரேகையில் அமைந்துள்ள அலகாபாத் நகரத்தில் மட்டுமே பகல் 12 மணிக்கு சூரியன் செங்குத்தாக அமையும். இந்த 82.5° கிழக்கு தீர்க்க ரேகைக்கு கிழக்கில் உள்ள அந்தமான், வங்காளம் போன்ற இடங்களில் பகல் 12 மணிக்கு முன்னரே சூரியன் செங்குத்தாக அமையும்.

அதேபோல, இந்த ரேகைக்கு மேற்கில் அமைந்துள்ள தமிழகம், கேரளம், புதுச்சேரி போன்ற இடங்களில் 12 மணிக்கு பிறகு தான் சூரிய நண்பகல் (Solar Noon) வரும். எனவே, உங்கள் பகுதியில் எத்தனை மணிக்கு சூரிய நண்பகல் வருகிறது என்பதை இந்த நிழல் மறையும் நேரத்தைக் கொண்டு நாம் கண்டுபிடிக்க முடியும்.

சுவாரஸ்யமாக இருக்கிறதா? செய்து பாருங்கள். நிழல் மறையும் நாளில் மட்டுமல்ல, மற்ற நாட்களிலும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் விடுமுறை தினங்களும் இந்த சோதனையைச் செய்து பாருங்கள்.


உங்கள் பகுதியில் சூரிய நண்பகல் நேரமும் மீச்சிறு நிழலின் நீளமும் திசையும் படிப்படியாக மாறுவதைக் காண்பீர்கள். அதனை வரைபடமாக தயாரித்தால் இன்னும் பல ஆச்சரியமான உண்மைகளைக் காணலாம்" என்று தெரிவித்தார்.

ஏப்ரல் மாதத்தில் உங்கள் ஊரில் எப்போது நிழலில்லா நாள் ஏற்படும் என்பதை அட்டவணையைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் ஊரின் பெயர் அட்டவணையில் இல்லையா? கவலைப்படாதீர்கள். வரைபடத்தில் உங்கள் ஊருக்கு கிடைமட்ட நேர்க்கோட்டில் அமைந்துள்ள ஊரில் ஏற்படும் நாளில் தான் உங்கள் ஊரிலும் நிழலில்லா நாள் ஏற்படும்.


நிழல் இல்லா நாட்கள் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் எப்போது ஏற்படுகின்றன என்று இந்த அட்டவணையைப் பாருங்கள்.


2020-ல் தமிழ்நாட்டில் நிழல் இல்லா நாள் ஏற்படும் நாட்கள்

ஏப்.9 & ஆக.31

கன்னியாகுமாரி, நாகர்கோவில், கூடங்குளம்

ஏப்.10 & ஆக.30

கோவளம், திருவனந்தபுரம், திருச்செந்தூர்

ஏப்.11 & ஆக.29

தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி

ஏப்.12 & ஆக.28

சங்கரன்கோயில், கோவில்பட்டி, ராமேஸ்வரம், ராமநாதபுரம்

ஏப்.13 & ஆக.27

கம்பம், ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், பரமக்குடி

ஏப்.14 & ஆக.26

தேனி, ஆண்டிபட்டி, திருமங்கலம், மதுரை, சிவகங்கை, காரைக்குடி

ஏப்.15 & ஆக.25

வால்பாறை, கொடைக்கானல், திண்டுக்கல், புதுக்கோட்டை, பட்டுக்கோட்டை, வேதாரண்யம்

ஏப்.16 & ஆக.24

பாலக்காடு, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், உடுமலைப்பேட்டை, பழனி, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம்

ஏப்.17 & ஆக.23

கோயம்புத்தூர், கூடலூர், பல்லடம், திருப்பூர், காங்கேயம், கரூர், கும்பகோணம், மயிலாடுதுறை, காரைக்கால், பூம்புகார்

ஏப்.18 & ஆக.22

ஊட்டி, கோத்தகிரி, அவிநாசி, ஈரோடு, திருச்செங்கோடு, நாமக்கல், சீர்காழி, சிதம்பரம்

ஏப்.19 & ஆக.21

முதுமலை, பவானி, மேட்டூர், சேலம், கள்ளக்குறிச்சி, நெய்வேலி, பண்ருட்டி, கடலூர்

ஏப்.20 & ஆக.20

தருமபுரி, சங்கராபுரம், விழுப்புரம், பாண்டிச்சேரி

ஏப்.21 & ஆக.19

செங்கம், திருவண்ணாமலை, திண்டிவனம்

ஏப்.22 & ஆக.18

ஓசூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வாணியம்பாடி, காவலுர், ஆம்பூர், ஆரணி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மகாபலிபுரம், கேளம்பாக்கம்

ஏப்.23 & ஆக.17

குடியாத்தம், வேலூர், ஆற்காடு, அரக்கோணம், ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர், ஆவடி, சென்னை

ஏப்.24 & ஆக.16

திருவொற்றியூர், எண்ணூர், கும்மிடிப்பூண்டி, திருத்தணி

No comments:

Post a Comment