கேரள அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் - Minnal Kalvi Seithi

Breaking

Thursday, April 16, 2020

கேரள அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

கேரள மாநிலம் புனலூரில் 65 வயது தந்தையை மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு அழைத்துச் செல்லும்போது ஆட்டோவுக்கு போலீஸார் அனுமதி மறுத்தனர். இதனால் தனது தந்தையைத் தோளில் சுமந்துகொண்டு சாலையில் ஒரு கிலோ மீட்டர் தூரம் மகன் நடந்து சென்றார்.


லாக் டவுன் காலத்தில் மனிதநேயத்தை மதிக்காமல் கடும் கெடுபிடிகளுடன் நடந்துகொண்ட கேரள போலீஸாருக்கும் அரசுக்கும் மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த வீடியோ சமூக ஊடங்களில் பெரும் வைரலாகி வருகிறது.

கொல்லம் மாவட்டம், புனலூர் அருகே குன்னத்துப்புழா கிராமத்தைச் சேர்ந்த 65 வயது முதியவர் புனலூர் தாலுகா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவருக்கு சிகிச்சை முடிந்து நேற்று வீட்டுக்கு அனுப்பப்பட்டார். அப்போது முதியவர், நடக்க முடியவில்லை என்பதால், தனது தந்தையை அழைத்துச் செல்ல அங்கிருந்த ஒரு ஆட்டோவை அவரின் மகன் அழைத்து வந்தார்.

அந்த ஆட்டோவில் முதியவரான தனது தந்தை, தாயை அமரவைத்து அவர்களின் மகனும் ஆட்டோவில் சென்றார். புனலூர் நகர்பகுதிக்குள் வந்தபோது போலீஸார் ஆட்டோவை மறித்து லாக் டவுன் நடைமுறையில் இருப்பதால் ஆட்டோவை அனுமதிக்க முடியாது என்றனர்.


அப்போது அந்த முதியவரின் மகன், தனது தந்தையை சிகிச்சை முடிந்து அழைத்து வருகிறேன், இன்னும் ஒரு கி.மீ .தொலைவில் வீடு வந்துவிடும் ஆட்டோவை அனுமதியுங்கள் எனக்கூறி, மருத்துவமனை ஆதாரங்களை போலீஸாரிடம் காண்பித்தார்.

ஆனால் போலீஸார் அவரின் பேச்சைக் காதில் வாங்காமல் ஆட்டோவை அனுமதிக்க முடியாது எனத் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர். இதனால், வேறுவழியின்றி அந்த முதியவரின் மகன், தனது 65 வயது தந்தையை குழந்தையை தோளில் சமப்பது போன்று சுமந்துகொண்டு சாலையில் நடக்கத் தொடங்கினார்.

இந்தக் காட்சியை போலீஸார் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அப்போதுகூட இரக்கப்பட்டு ஆட்டோவை போலீஸார் அனுமதிப்பார்கள் என மக்கள் எதிர்பார்த்தபோது அனுமதிக்கவில்லை. இதனால் தனது தந்தையைத் தோளில் சுமந்து கொண்டு சாலையில் மகன் நடந்தார்.


இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி, கேரள மாநிலம் முழுவதும் பரவியது. இதைப் பார்த்த கேரள மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து போலீஸாருக்கும், அரசுக்கும் விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

No comments:

Post a Comment