ஊரடங்கு: இணையவழியில் நடத்தப்படும் வகுப்புகள் - Minnal Kalvi Seithi

Breaking

Monday, April 13, 2020

ஊரடங்கு: இணையவழியில் நடத்தப்படும் வகுப்புகள்

கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு நடைமுறையில் இருப்பதால், இப்போது இணையவழியில் பாடம் நடத்தும் முறை அதிகரித்து வருகிறது.


நாடு முழுவதும் மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால், மக்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். இப்போது, பெரும்பாலான மக்களுக்குப் பொழுதுபோக்குவதற்குத் தொலைக்காட்சியே மிக முக்கியமான சாதனமாக இருக்கிறது. சிலர் கணினி, செல்லிடப்பேசி மூலம் பொழுதைக் கழிக்கின்றனர். வாசிப்பு பழக்கம் உள்ளவர்கள் புத்தகமும், இணையவழி மூலமும் படிக்கின்றனர்.

இந்நிலையில், சிலர் ஊரடங்கு காலத்தையும் பயனுள்ளதாக மாற்றியுள்ளனர். இந்த வரிசையில் இணையவழியில் இலக்கியக் கூட்டம், ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு வருவதைப்போல, இணையவழி நேரலையில் இலக்கியப் பாடங்களும் நடத்தி வருகின்றனர்.

 கோவை ஏ.கே.ஜே. கலை, அறிவியல் கல்லூரியின் மொழியியல் துறை திரிவேணி சங்கம் சார்பில் இணையவழி நேரலை உரையாடல் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில், தமிழ் மருத்துவம் என்ற தலைப்பில் தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலக தமிழ்ப் பண்டிதர் மணி. மாறன் பேசினார். இந்த உரையாடலில் இணையவழி மூலம் கிட்டத்தட்ட 250 பேர் பங்கேற்றனர்.


இந்தக் காணொலிக் காட்சியில் உரையைக் கேட்டது மட்டுமல்லாமல், உரையின் முடிவில் சந்தேகங்களையும் கேட்டுத் தெளிவு பெற்றனர்.

இதுகுறித்து மணி. மாறன் தெரிவித்தது:

இந்த நேரலை இலக்கிய உரையாடலில் கோவை ஏ.கே.ஜே. கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் மட்டுமல்லாமல், பிற கல்லூரிகளைச் சேர்ந்த முதல்வர்கள், பேராசிரியர்கள், மாணவர்களும் இணைந்துள்ளனர். அனைவரும் ஹேங்அவுட்ஸ் மீட் (Google Hangouts Meet) என்ற செயலியைப் பதிவிறக்கம் செய்துள்ளனர். இந்தச் செயலி இலவசமானது என்பதால், எல்லோரும் பதிவிறக்கம் செய்யலாம்.

இந்தச் செயலி வழியாகக் காணொலி மூலம் சனிக்கிழமை பகல் 11 மணிக்கு முதல் பிற்பகல் 12.30 மணி வரை உரையாடல் தொடர்ந்தது. இதில், தமிழ் மருத்துவத்தின் தொன்மை, தமிழ் மருத்துவம் என்ற பெயர் 200 - 300 ஆண்டுகளுக்கு முன்பு சித்த மருத்துவம் என மாறியது குறித்துப் பேசினேன்.

இந்த உரையின் முடிவில் காணொலி வழியாகவே சுமார் 10 பேர் வினாக்களும், ஐயங்களும் எழுப்பினர். இதற்கு விடையளித்து உரையை நிறைவு செய்தேன்.

 இதுபோல, வாரந்தோறும் ஒரு தலைப்பில் இணையவழியில் தமிழ் இலக்கியம் தொடர்பான தலைப்பில் உரையாடவுள்ளேன். இந்த நேரலை மூலம், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் வெளிநாட்டு அறிஞர்களும், ஆர்வலர்களும் பயனடைகின்றனர் என்றார் மாறன்.

இதுபோன்று இந்த ஊரடங்கு காலத்தைப் பயனுள்ளதாகவும் அறிவை விரிவுபடுத்துவதற்காகவும் ஆர்வலர்கள், அறிஞர்கள் பலர் முன் வந்துள்ளனர்.


தஞ்சாவூர் பாரத் அறிவியல், நிர்வாகவியல் கல்லூரி பேராசிரியர் வி.எஸ்.ஆர். செம்பியன் கட்செவி மூலம் ஆங்கில இலக்கண வகுப்பு நடத்தி வருகிறார். ஆங்கில இலக்கணம் குறித்து ஒரு தாளில் எழுதி, அதைச் செல்லிடப்பேசியில் புகைப்படம் எடுத்து, கட்செவியில் கிட்டத்தட்ட 500 பேருக்கு அனுப்பி வைக்கிறார்.


எளிய முறையில் விளக்கம் அளிக்கும் அவர் கட்செவி மூலம் வீட்டுப் பாட வேலையும் கொடுக்கிறார்.

 இந்த வீட்டுப் பாடத்தையும் சிலர் எழுதி அதேபோல கட்செவியில் அனுப்புவதாகவும், படிப்படியாக இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாகவும் செம்பியன் தெரிவித்தார்.

 இந்த வகுப்பு தொடர்ந்து நாள்தோறும் நடத்தி, இரு மாதங்களுக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்றார் அவர்.

ஊரடங்கால் 10, 11 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வும் தள்ளிப் போனது. இவர்களுக்கும் பள்ளிகளிலிருந்து கட்செவி, விடியோ கால் மூலமாகப் பாடங்களில் உள்ள சந்தேகங்களைத் தெளிவுபடுத்தும் பணியில் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த ஊரடங்கு காலத்தில் பெரும்பாலானவர்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வந்தாலும், சிலர் ஆக்கப்பூர்வமான விஷயங்களில் கவனத்தைச் செலுத்தி தங்களை மேம்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment