தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவிக்க தடை: தமிழக அரசு - Minnal Kalvi Seithi

Breaking

Sunday, April 12, 2020

தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவிக்க தடை: தமிழக அரசு

ஊரடங்கு அமலில் இருப்பதால் தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவிக்க தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு விடுத்துள்ள அறிக்கையில், ஒவ்வொரு ஆண்டும் அரசின் சார்பில், ஏப்ரல் 14ஆம் நாள் டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாளும், ஏப்ரல் 17ஆம் நாள் சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்த நாளும் சென்னையில் அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.சென்னை துறைமுகத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் திருவுருவச்சிலைக்கும் மற்றும் சென்னை, கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை திருவுருவச்சிலைக்கும் அரசின் சார்பில் மாலைகள் அணிவித்தும், திருவுருவப்படங்களுக்கு மலர் தூவியும் மரியாதை செய்யப்படுகிறது.

மத்திய உள்துறை அமைச்சர் 11.4.2020 அன்று காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டபோது, பொதுமக்களின் நலன் கருதியும், கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் நோக்கத்திலும், ஊரடங்கு உத்தரவை கடுமையாக கடைபிடிக்க வேண்டும் என்றும், பொதுமக்கள் கூடும் அனைத்து நிகழ்ச்சிகளும், விழாக்களும் இரத்து செய்யப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்கள்.


எனவே, வருகின்ற ஏப்ரல் 14 அன்று டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாள் மற்றும் ஏப்ரல் 17 அன்று சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்த நாள் நிகழ்ச்சிகளில், அன்னார்களின் திருவுருவச்சிலைகளுக்கு, தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் மட்டும் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள்.


 144 தடை உத்தரவு காரணமாக இந்நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் கலந்துகொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், நினைவிடங்களுக்கு செல்வதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும், இந்த ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் வரை, மாவட்டங்களிலும் இதுபோன்ற நிகழ்வுகளுக்கு பொதுமக்கள் கூடாமல் அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மட்டுமே மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள்.


இதனை அயதயத மாவட்ட ஆட்சித் தலைவர்கள் உறுதிசெய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். எனவே, பொதுமக்கள் இதற்கு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment