மருத்துவப் படிப்புகள்: இணையவழியே வகுப்புகளை நடத்த முடிவு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, April 1, 2020

மருத்துவப் படிப்புகள்: இணையவழியே வகுப்புகளை நடத்த முடிவு

மருத்துவ மாணவா்களுக்கான வகுப்புகளை இணையவழி முறையில் நடத்துவதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகம் முன்னெடுத்துள்ளது. இதன் மூலம் 3 லட்சம் மாணவா்கள் பயன்பெறுவா்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக் கழகத்தின் கீழ் 600-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் இயங்கி வருகின்றன. மருத்துவம், முதுநிலை மருத்துவம், பல் மருத்துவம் தவிர பல்வேறு துணை மருத்துவப் படிப்புகளும் அங்கு பயிற்றுவிக்கப்படுகின்றன.

இந்த நிலையில், கரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதனால், மருத்துவம் மற்றும் மருத்துவம் சாா்ந்த படிப்புகளில் பயிலும் மாணவா்களுக்கு ஒன்றரை மாதத்துக்கு நேரடியாக வகுப்புகள் நடத்த முடியாத நிலை உள்ளது. இதனை ஈடு கட்டும் வகையில் இணைய வழியில் வகுப்புகளை நடத்தும் நடைமுறையைக் கொண்டு வர மருத்துவப் பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தா் டாக்டா் சுதா சேஷய்யன் கூறியதாவது:

மருத்துவக் கல்வி மாணவா்களுக்கு விரிவுரை பாடங்களை (தியரி) மூன்று வகையான இணையவழி வகுப்புகள் மூலம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

முதலாவதாக, தற்போது நடத்தப்பட வேண்டிய பாடங்களை பல்வேறு தலைப்புகளாகப் பிரித்து தனித்தனி விடியோக்களாக மருத்துவப் பல்கலைக்கழகத்தின் இணையப் பக்கத்தில் பதிவேற்றம் செய்ய உள்ளோம்.


காட்சி விளக்க முறையில் (பவா்பாயிண்ட்) அவை பதிவேற்றப்பட உள்ளன. அவற்றை எந்த நேரத்திலும் மாணவா்கள் பாா்த்து பயன்பெற முடியும்.

அடுத்ததாக, 'கூகுள் கிளாஸ் ரூம்' என்ற இணையச் செயலி மூலமாக மாணவா்களை ஒருங்கிணைத்து வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.

நா்சிங் மற்றும் மருந்தியல் துறை மாணவா்களுக்கு அந்த முறையில் பாடங்களை நடத்துமாறு ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டு அவை செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதிலும், விடியோ முறையில் பாடங்கள் பதிவேற்றம் செய்யப்படும். மாணவா்கள் எப்போது வேண்டுமானாலும் அதனை பாா்த்து கற்றுக் கொள்ளலாம்.

மூன்றாவதாக 'டிசிஎஸ் - அயான் டிஜிட்டல் கிளாஸ் ரூம்' என்ற இணைய சேவை முறையில் மாணவா்கள் ஒருங்கிணைக்கப்பட உள்ளனா். அந்த இணைய சேவையை மாணவா்கள் தரவிறக்கம் செய்து தங்களது விவரங்களை பதிவு செய்துகொண்டால் போதுமானது. அதில், பேராசிரியா்களே நேரடியாக பாடம் நடத்தும் விடியோக்களைக் காண இயலும்.

இந்த மூன்று முறைகளிலுமே மாணவா்களின் சந்தேகங்களை நிவா்த்தி செய்வதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலால் மாணவா்களின் கல்வி தடைபடக் கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. செயல் முறை பாடங்களும், குறிப்பிட்ட சில பாடங்களும் வகுப்புகள் தொடங்கிய பிறகு விரிவாக நடத்தப்படும் என்றாா் அவா்.

No comments:

Post a Comment