அமைச்சர் செங்கோட்டையனுடன் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு.. 10-ம்வகுப்பு தேர்வை ஜூலையில் நடத்தக் கோரிக்கை - Minnal Kalvi Seithi

Breaking

Wednesday, May 20, 2020

அமைச்சர் செங்கோட்டையனுடன் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு.. 10-ம்வகுப்பு தேர்வை ஜூலையில் நடத்தக் கோரிக்கை

பத்தாம் வகுப்பு தேர்வை ஜூலையில் நடத்தக் கோரி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனை நேரில் சந்தித்து திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை மனு அளித்தார்.

இந்தச் சந்திப்பின் போது உதயநிதி ஸ்டாலின் முன்வைத்த கோரிக்கைகளை கவனமாக கேட்டுக்கொண்ட அமைச்சர் செங்கோட்டையன் அரசு தரப்பு விளக்கத்தை அளித்துள்ளார்.


பள்ளிக்கல்வித்துறை அமைச்சரை மட்டுமல்லாமல் அந்த துறையின் செயலாளரையும் சந்தித்து 10-ம் வகுப்பு தேர்வு குறித்து பேசியுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.

தள்ளிவைக்க கோரிக்கை

மார்ச் 27ம் தேதி தொடங்கி ஏப்ரல் 13ம் தேதி வரை நடைபெறுவதாக இருந்த 10 ஆம் வகுப்புத் தேர்வை கொரோனா பரவல் அச்சம் காரணமாக ஜூன் 1ம் தேதி தொடங்கி 12ம் வரை நடத்துவது என அரசு முடிவு செய்தது.

பெற்றோர், ஆசிரியர் சங்கங்கள், தனியார் பள்ளி உரிமையாளர்கள் என பல்வேறு தரப்புகளிடமிருந்து வந்த கோரிக்கைகளின் அடிப்படையில் 10 ஆம் வகுப்புத் தேர்வை மேலும் தள்ளி வைக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி வந்தார்.


மேலும்,தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பரவியுள்ள சூழலில் தேர்வெழுதும் மனநிலையில் மாணவர்கள் இல்லை. மனதளவில் அவர்களைத் தயார்ப்படுத்திய பிறகே தேர்வை நடத்தவேண்டும். பள்ளி திறக்கப்பட்டு இரு வாரம் சென்றபிறகு தேர்வை நடத்துவதே சரியான நடைமுறையாக இருக்கும் என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தார்.

இந்தநிலையில் 10 ஆம் வகுப்புத் தேர்வு குறித்து திமுக இளைஞரணி-மாணவரணியின் மாவட்ட-மாநகர அமைப்பாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ள இச்சூழலில் 10 ஆம் வகுப்புத் தேர்வை நடத்துவதால் ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்தும், அதைத் தள்ளிவைக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் இரு அணிகளின் அமைப்பாளர்களும் விவாதித்தனர்

இந்தநிலையில் 10ஆம் வகுப்புத் தேர்வை 15 நாட்கள் தள்ளி, ஜூன் 15 தொடங்கி 25ம் தேதிவரை நடத்தப்போவதாக அரசு அறிவித்து புதிய தேர்வு அட்டவணையையும் நேற்று வெளியிட்டது.


இது தொடர்பாக அமைச்சர் செங்கோட்டையனிடம் உதயநிதி ஸ்டாலின் அளித்துள்ள கோரிக்கை மனுவில், 15 நாட்கள் தேர்வைத் தள்ளி வைக்கும் அரசின் முடிவை திமுக வரவேற்பதாகவும், அதேவேளை, தேர்வை ஜூலையில் நடத்தினால் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் உதவியாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment