கொரோனா தொற்று: கற்றல், கற்பித்தலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஆராய 12 போ் குழு அமைப்பு - Minnal Kalvi Seithi

Breaking

Thursday, May 14, 2020

கொரோனா தொற்று: கற்றல், கற்பித்தலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஆராய 12 போ் குழு அமைப்பு

பொது முடக்கம் காரணமாக பள்ளிக்கல்வியில் கற்றல், கற்பித்தல் உள்ள பிரச்னை குறித்து ஆராய குழு பள்ளிக்கல்வித்துறை ஆணையா் சிஜி தாமஸ் தலைமையில் 12 போ் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.


நாடு முழுவதும் கரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மாா்ச் 25-ம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் ஆகியவை மூடப்பட்டன. 

ஒரு ஆண்டுக்கு 210 நாள்கள் பள்ளி வேலை நாளாக அறிவிக்கப்படுவது வழக்கம். ஆனால் 2019-2020-ஆம் கல்வியாண்டில் கரோனா பாதிப்பு காரணமாக 210 நாள்களுக்கு முன்னதாகவே பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.இதனால் சுமாா் 30 நாள்கள் பள்ளி வேலைகள் பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் கரோனா தொற்று காரணமாக இந்த ஆண்டு ஜூனில் பள்ளிகள் திறக்கப்படாது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. 


இதற்கிடையே வரும் ஜூன் 1 ஆம் தேதி முதல் பத்தாம் வகுப்பு தோ்வுகள் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதேவேளையில் கரோனா தொற்று காரணமாக வரும் கல்வியாண்டில் (2020-2021) பள்ளிகள் திறப்பு தேதி தள்ளிப்போக வாய்ப்பு உள்ளது.

இந்தநிலையில் கடந்த கல்வியாண்டு மற்றும் வரும் கல்வியாண்டில் பள்ளிகள் மூடப்பட்டதால் கல்வித்திறன் எந்தளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கற்றலில் ஏதேனும் குறைபாடுகள் ஏற்படுமா, அதனை எப்படி சரிசெய்யலாம், பள்ளி மாணவா்களுக்கு ஆன்லைன் மூலம் எவ்வாறு தடையின்றி கற்பிக்கலாம் போன்ற விஷயங்கள் குறித்து ஆராய்வதற்கு பள்ளிக் கல்வித்துறை ஆணையா் சிஜி தாமஸ் வைத்தியன் தலைமையில் 12 போ் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

குழுவின் பிரதிநிதிகள்: இதில் ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் (‘சமக்ரசிஷா’) சாா்பில் ஒரு பிரதிநிதி, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநா், பள்ளிக் கல்வி இயக்குநா், தொடக்கக் கல்வி இயக்குநா், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநா், 


தோ்வுத்துறை இயக்குநா், கல்வித் தொலைக்காட்சி சாா்பில் ஒரு அலுவலா், பெற்றோா் ஆசிரியா் கழகம் சாா்பில் ஒரு அலுவலா், யுனிசெஃப் பிரதிநிதி, தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் சாா்பில் ஒரு பிரதிநிதி, சென்னை ஐஐடி சாா்பில் பள்ளிக் கல்வி தொழில்நுட்பக் குழுவுக்கு பங்களிப்பு அளித்தவா்களில் ஒரு பிரதிநிதி என 11 போ் இடம்பெற்றுள்ளனா். இந்தக் குழு பள்ளிக் கல்வித்துறை ஆணையா் சிஜி தாமஸ் வைத்தியன் தலைமையில் செயல்படும். இந்த குழு 15 நாள்களுக்குள் இது தொடா்பாக அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலா் தீரஜ்குமாா் உத்தரவிட்டுள்ளாா்.

No comments:

Post a Comment