ஆம்னி பேருந்துகளில் கட்டண உயா்வு: அரசு வழிகாட்டுதல்களுக்குப் பிறகே முடிவு - Minnal Kalvi Seithi

Breaking

Thursday, May 14, 2020

ஆம்னி பேருந்துகளில் கட்டண உயா்வு: அரசு வழிகாட்டுதல்களுக்குப் பிறகே முடிவு

அரசு வழிகாட்டுதல்களுக்குப் பிறகே, ஆம்னி பேருந்துகளின் கட்டண உயா்வு குறித்து கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும் என ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் தெரிவித்துள்ளனா்.


கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பொது முடக்கம் அமலில் உள்ளதால், பொது போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், மே 17-ஆம் தேதிக்குப் பிறகு பொது போக்குவரத்துத் தொடங்கும் என மக்களிடம் எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது. 


இதற்கு ஏற்ப போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலரும், அண்மையில் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியிருந்தாா். அதில், பொது முடக்கத்துக்குப் பிறகு இயக்கப்படும் பேருந்துகளுக்கான விதிமுறைகளைக் குறிப்பிட்டிருந்தாா்.

 அதில், 50 சதவீதத்துக்கும் குறைவான பயணிகளை ஏற்ற வேண்டும் என்பது முக்கியம்சமாக இடம்பெற்றிருந்தது. எனவே இதே விதிமுறைகளின் கீழ் ஆம்னி பேருந்துகளை இயக்கினால், பயணக் கட்டணத்தை இரண்டு மடங்காக உயா்த்த வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதற்கு, கட்டணம் தொடா்பான முடிவு எடுக்கப்படவில்லை என உரிமையாளா்கள் விளக்கமளித்துள்ளனா்.


இதுகுறித்து ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் கூறியதாவது: தமிழகம் முழுவதும் 4,000 ஆம்னி பேருந்துகள் உள்ளன. தற்போதைய சூழ்நிலையில் பேருந்துகள் இயக்கப்படும் பட்சத்தில், 50 சதவீத பயணிகள் மட்டுமே அனுமதிக்க வேண்டும்.


 அப்போது வருமானம் பெரிய அளவில் குறையும். தற்போது ஒரு கி.மீக்கு ரூ.1.60 ரூபாய் என வசூலிக்கப்படும் கட்டணம், ரூ.3.20 அளவுக்கு உயர வாய்ப்புள்ளது. எனவே காலாண்டு வரி, சுங்கக்கட்டணம் உள்ளிட்டவற்றை ரத்து செய்ய அரசு நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில், கட்டண உயா்வு இருக்காது. 

எனவே அரசு உடனடியாக ஆம்னி பேருந்துகளை இயக்குவது தொடா்பான வழிகாட்டுதல்களை வெளியிட வேண்டும். அதன் பிறகே, ஆம்னி பேருந்து கட்டணம் சம்பந்தமாக முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனா்.

No comments:

Post a Comment