மாவட்ட கல்வி அலுவலகங்களில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் வருகை பதிவேடு :இன்று மாலைக்குள் ஒப்படைக்க வேண்டும் கல்வித்துறை அதிரடி உத்தரவு
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கொரோனோ பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவதற்கான முறை குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
காலாண்டு அரையாண்டு தேர்வு மதிப்பெண்களுடன் மாணவர்கள் வருகை பதிவு அடிப்படையில் 20 சதவிகித மதிப்பெண்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
.இது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் அனைத்து முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள உத்தரவில் அனைத்து உயர்நிலை மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று பொதுத்தேர்வு எழுத இருந்த அனைத்து மாணவர்களின் 2019 -2020 ஆம் கல்வி ஆண்டிற்கான வருகை பதிவேடுகளை 16.03.2020 வரை முழுமையாக இருக்கிறதா என்பதை சரிபார்த்தபின் பிரிவு வாரியாக அடுக்கி கட்டி இன்று (12ஆம் தேதி )மாலை 5 மணிக்குள் சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
அதுபோல் அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களும் தங்கள் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு பயின்று வேதியியல் கணக்குப் பதிவியல் மற்றும் புவியியல் பாட தேர்வு எழுதி இருந்த அனைத்து மாணவர்களின் 2019_ 2020 ஆம் கல்வி ஆண்டிற்கான வருகை பதிவேடுகள் முழுமையாக இருக்கிறதா என்பதை சரிபார்த்து பின்பு வருகை பதிவேடுகள் பிரிவு வாரியாக அடுக்கி கட்டி இன்று மாலை 5 மணிக்குள் சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் மாவட்டக் கல்வி அலுவலர்களும் தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு ,அரசு உதவிபெறும் பள்ளிகள் சுயநிதி பள்ளிகள், துறை சார்ந்த பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் (சிபிஎஸ்இ பள்ளிகள் தவிர) பத்தாம் வகுப்பு ,11ஆம் வகுப்பு மாணவர்களின் வருகை பதிவேட்டை இன்று மாவட்ட கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
வருகை பதிவேட்டில் கடைசி பக்கத்தில் தலைமை ஆசிரியர் ,முதல்வர் கையொப்பமிட்டு மாவட்ட கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். மாவட்ட கல்வி அலுவலகத்தில் நடவடிக்கைகள் மேற்கொள்ளும் போது சமூக இடைவெளி பின்பற்றவேண்டும்.
கிருமிநாசினி கொண்டு அவ்வப்போது கைகளை சுத்தம் செய்ய வேண்டும். ஒவ்வொரு பள்ளிக்கும் தனித்தனியாக நேரம் ஒதுக்கீடு செய்து அவர்களுக்கான நேரத்தை அந்தப் பள்ளிக்கு தெரிவிக்கவேண்டும்.
ஒப்படைக்கப்பட்ட வருகை பதிவேட்டை வழியாக முத்திரையிடப்பட்ட உரையில் தனி அலமாரியில் மாவட்ட கல்வி அலுவலர் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் .
அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தங்கள் மாவட்டத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை இன்று மாலை 5 மணிக்குள் பள்ளிக்கல்வி இயக்குனருக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment