மருத்துவ படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50% ஒதுக்கீடு கோரிய வழக்கில் 27ல் தீர்ப்பு - Minnal Kalvi Seithi

Breaking

Friday, July 17, 2020

மருத்துவ படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50% ஒதுக்கீடு கோரிய வழக்கில் 27ல் தீர்ப்பு

மருத்துவ படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50% ஒதுக்கீடு கோரிய வழக்கில் 27ல் தீர்ப்பு
மருத்துவ படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு கேட்டு தொடரப்பட்ட வழக்குகளில் உயர் நீதிமன்றம் வரும் 27ம் தேதி தீர்ப்பளிக்கிறது

. மருத்துவ படிப்புக்களில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50% இடஒதுக்கீடு வழங்கக் கோரி திமுக, அதிமுக, மதிமுக, பாமக, தி.க, கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பிலும், தமிழக அரசு சார்பிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. 


இந்த வழக்குகளுக்கு பதிலளித்த மத்திய அரசு, அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் 27% இடஒதுக்கீடு வழங்க தயாராக இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் பதிலளித்ததாக தெரிவித்தது

.அதேபோல மாநில அளவிலான இடஒதுக்கீட்டு முறையை பின்பற்ற தயாராக இருப்பதாகத் தெரிவித்த மத்திய அரசு, அந்த இடஒதுக்கீடு, பட்டியலின, பழங்குடியின மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான இடஒதுக்கீட்டை பாதிக்காத வகையிலும், மொத்த இடஒதுக்கீடு 50 சதவீதத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளதாகக் கூறியுள்ளது. 

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.  

அப்போது, திமுக சார்பில் மூத்த வக்கீல் பி. வில்சன் ஆஜராகி, இந்திய மருத்துவ கவுன்சில் விதிப்படி, இட ஒதுக்கீடு தொடர்பாக மாநில அரசு சட்டம் இயற்றாமல் இருந்தால் மட்டுமே மத்திய அரசு முடிவெடுக்க முடியும்.

மருத்துவ மேற்படிப்பில்  தமிழகத்தில் இருந்து கடந்த 4 ஆண்டுகளில் 3,580 இடங்கள் மத்திய அரசுக்கு வழங்கப்பட்டது. இதில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்காததால் 2700க்கும் மேற்பட்ட  தமிழக மாணவர்களின் உரிமை பறிக்கப்பட்டுள்ளது, என்றார். 

 தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், தமிழகத்தின் மக்கள் தொகை அடிப்படையில், 69 % இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. 30 சதவீதம் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும், 20 சதவீதம் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.  உச்ச நீதிமன்றம் பல தீர்ப்புகளில் மக்கள் தொகை அடிப்படையில் 50 சதவீதத்துக்கும் அதிகமாக இட ஒதுக்கீடு வழங்க அனுமதியளித்துள்ளது என்றார்.

 மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் சங்கரநாராயணன், மருத்துவ மேற் படிப்புகளில் இட ஒதுக்கீடு முறை பின்பற்ற கூடாது என  இந்திய மருத்துவ கவுன்சில் விதி உள்ளது. தகுதியின்  அடிப்படையில் மட்டுமே மாணவர்களுக்கு இடம் ஒதுக்கப்படும். 

 அதே நேரத்தில், உச்சநீதிமன்ற உத்தரவு படியே எஸ்சி, எஸ்.டி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுறது. மருத்துவ மேற்படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க அவசியமில்லை என்பதற்கான பல உயர் நீதிமன்ற மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்புகளில் கூறப்பட்டுள்ளது.

அகில இந்திய ஒதுக்கீடு இடங்கள் நிரம்பாவிட்டால், அந்த இடங்கள் தமிழக அரசுக்கே திருப்பி வழங்கப்படும் என்று வாதிட்டார். இதுதவிர, அதிமுக, மதிமுக, பாமக, கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பிலும் வழக்கறிஞர்கள் தங்கள் வாதங்களை முன்வைத்தனர். 

அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மாநில அரசுகளின் ஒதுக்கீடு முறையை பின்பற்ற வேண்டும் என்ற முந்தைய உச்சநீதிமன்ற உத்தரவுகளுக்கு ஏன் மத்திய அரசு கட்டுப்படவில்லை என கேள்வி எழுப்பி, வழக்கின் தீர்ப்பை ஜூலை 27ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்

No comments:

Post a Comment