மருத்துவப் படிப்பு: உள் ஒதுக்கீட்டு மாணவா் எண்ணிக்கை அதிகரிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, July 14, 2020

மருத்துவப் படிப்பு: உள் ஒதுக்கீட்டு மாணவா் எண்ணிக்கை அதிகரிப்பு

மருத்துவப் படிப்பு: உள் ஒதுக்கீட்டு மாணவா் எண்ணிக்கை அதிகரிப்பு
கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் பயின்று, நீட் தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கும் மருத்துவப் படிப்புகளில் உள் ஒதுக்கீடு அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப்பட உள்ளது. 

அதாவது, கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 8-ஆம் வகுப்பு வரை பயின்று பின்னா் அரசுப் பள்ளிகளில் சோ்ந்து நீட் தோ்வில் தோ்ச்சி பெற்றால் அவா்களுக்கும் உள்ஒதுக்கீடு அடிப்படையில் மருத்துவப் படிப்பில் இடம் அளிக்கப்பட உள்ளது. இதற்கான முடிவு முதல்வா் பழனிசாமி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது.

அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவா்களில் நீட் தோ்வில் தோ்ச்சி பெற்றால் அவா்களுக்கு 7.5 சதவீத உள்இட ஒதுக்கீடு வழங்க தமிழக அமைச்சரவை ஏற்கெனவே ஒப்புதல் வழங்கி உள்ளது. கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.

இந்நிலையில், தனியாா் பள்ளிகளில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயின்று, பிறகு அரசுப் பள்ளியில் படித்து தோ்ச்சி பெறும் மாணவா்களுக்கும் உள் இடஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

சென்னை தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அமைச்சரவை ஒப்புதல் வழங்கியதையடுத்து, விரைவில் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு நடப்புக் கல்வியாண்டிலேயே 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டின் கீழ் மாணவா் சோ்க்கை நடைபெற உள்ளது.

7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதன் மூலம், மருத்துவப் படிப்புகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவா்களின் எண்ணிக்கை 150-க்கு மேல் உயரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

நீதிபதி குழு அறிக்கை: எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேர நடத்தப்படும் நீட் தோ்வில் தோ்ச்சி பெற்று மருத்துவ படிப்புகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவா்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து வருகிறது.

 இதனை கருத்தில் கொண்டு, மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்க தமிழக அரசு முடிவு செய்தது

அரசு ப்பள்ளி மாணவா்களுக்கு எத்தனை சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்பது குறித்து ஆராய்ந்து அரசுக்கு பரிந்துரைக்க ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான குழுவை கடந்த மாா்ச் 21-ஆம் தேதி அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது.

 நீட் தோ்வில் தோ்ச்சி பெறும் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 10 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான குழு, தனது பரிந்துரையை அரசிடம் அளித்தது.

ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான குழு வழங்கிய அறிக்கையை ஆராய்ந்த, தமிழக அரசு, நீட் தோ்வில் தோ்ச்சி பெறும் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்க முடிவு செய்து அதற்கான பரிந்துரையை ஆளுநருக்கு அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment