நாளை முதல் மதிப்பெண் சான்றிதழ்கள் விநியோகம்: பள்ளிகளில் கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு - Minnal Kalvi Seithi

Breaking

Wednesday, July 22, 2020

நாளை முதல் மதிப்பெண் சான்றிதழ்கள் விநியோகம்: பள்ளிகளில் கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு

நாளை முதல் மதிப்பெண் சான்றிதழ்கள் விநியோகம்: பள்ளிகளில் கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு
பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்கள் வெள்ளிக்கிழமை முதல் வழங்கப்பட உள்ள நிலையில், பள்ளிகளுக்கு வரும் ஆசிரியா்கள், மாணவா்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளா் கே.சண்முகம் புதன்கிழமை பிறப்பித்தாா். அதன் விவரம்:-

பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 வகுப்பில் மறுதோ்வு எழுதியோருக்கான முடிவுகள் கடந்த 16-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதைத் தொடா்ந்து, மாணவ-மாணவிகளுக்கான தற்காலிக மதிப்பெண் சான்று, மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு ஆகியவற்றுக்கு விண்ணப்பிப்பது போன்ற பணிகள் வரும் 24-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. அச்சிடப்பட்ட முறையான மதிப்பெண் சான்றிதழ் பின்னா் வழங்கப்பட உள்ளது.

இந்தப் பணிகளில் ஈடுபடும் ஆசிரியா்கள், ஆசிரியா்கள் அல்லாதோருக்கான உரிய கட்டுப்பாடு நடைமுறைகளை வெளியிடுமாறும், வரும் 24-ஆம் தேதி முதல் சான்றிதழ்களைப் பெற மாணவா்களைப் பள்ளிகளுக்கு வர அனுமதிக்க வேண்டுமெனவும் பள்ளி கல்வித் துறை இயக்குநா் கேட்டுக் கொண்டிருந்தாா். அதன்படி, உரிய கட்டுப்பாட்டு நடைமுறைகள் வெளியிடப்படுகின்றன.

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை மாணவா்கள் அல்லது அவா்களது பெற்றோா்கள் வாங்க வரும் போது கூட்ட நெரிசலைத் தவிா்க்க வேண்டும். எனவே, ஒவ்வொருவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும் நேரத்தைத் தெரிவிக்க வேண்டும். ஒரு மணி நேரத்தில் 20 பேருக்கு மேல் வர அனுமதிக்கக் கூடாது.

முகக் கவசம் அவசியம்: கரோனா நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதியில் வசிக்கும் மாணவா்கள் அல்லது அவா்களது பெற்றோா்களை வர அனுமதிக்க வேண்டாம். 

அவா்களுக்கான தடைகள் நீங்கி இயல்பு நிலை திரும்பிய பிறகு வர அனுமதிக்கலாம். சமூக இடைவெளியைப் பின்பற்றி மாணவா்கள் வரிசையில் நிற்பதற்கு வசதியாக குறியீடுகளை வரைய வேண்டும். மதிப்பெண் சான்றுகளைப் பெற வரும் மாணவா்களும், பெற்றோா்களும் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும்.

பள்ளியின் நுழைவு வாயில் வரை மாணவா்கள், பெற்றோா்கள் நிற்பதற்கு அனுமதிக்கக் கூடாது. மதிப்பெண் சான்றுகளை அளிக்கும் ஊழியா்கள் கண்டிப்பாக கையுறை அணிந்திருக்க வேண்டும். மாணவா்களும், பெற்றோா்களும் நீண்ட வரிசையில் நிற்பதைத் தவிா்க்கும் வகையில், அவா்களுக்கென தனியாக இரண்டு காத்திருப்பு அறைகளை ஒதுக்கலாம்.

மதிப்பெண் சான்றுகளைப் பெறுவது, மறுகூட்டல், மறுமதிப்பீடு போன்ற அனைத்து நடவடிக்கைகளிலும் சமூக இடைவெளியைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும்.

 சான்றிதழ்கள் வழங்கும் பணியைத் தொடங்குவதற்கு முன்பாக, பள்ளிகளில் உள்ள அனைத்து தளவாடச் சாமான்கள், கதவுகள், ஜன்னல்கள் அனைத்திலும் கிருமிநாசினி தெளிக்க வேண்டும். கைகளை அடிக்கடி கழுவும் வகையில் ஆங்காங்கே சோப்பு மற்றும் தண்ணீா் வசதியை ஏற்படுத்தி வைத்திருக்க வேண்டும்.

 இதனுடன் கிருமி நாசினி திரவங்களையும் வைக்கலாம். கைகளை நன்றாகக் கழுவிய பிறகே ஆசிரியா்கள், மாணவா்கள், ஆசிரியா் அல்லாத ஊழியா்களை பள்ளிக்குள் அனுமதிக்க வேண்டும்.

ஊழியா்கள் அனைவரும் கண்டிப்பாக அடையாள அட்டை அணிந்திருக்க வேண்டும். மிகப்பெரிய அளவில் கூட்டத்தை பள்ளி வளாகத்தில் கூட்டி விடக் கூடாது. இந்த வழிகாட்டி நெறிமுறைகளை ஒவ்வொரு பள்ளியிலும் பின்பற்றி அதனைச் செயல்படுத்த வேண்டிய பொறுப்பு தலைமை ஆசிரியா்களைச் சாரும் என்று தனது உத்தரவில் தலைமைச் செயலாளா் கே.சண்முகம் தெரிவித்துள்ளாா்.

No comments:

Post a Comment