மருத்துவ படிப்பில் இடஒதுக்கீடு கேட்கும் விவகாரம் உயர் நீதிமன்றம் விசாரிக்க தடையில்லை: உச்ச நீதிமன்றம் உத்தரவு - Minnal Kalvi Seithi

Breaking

Monday, July 13, 2020

மருத்துவ படிப்பில் இடஒதுக்கீடு கேட்கும் விவகாரம் உயர் நீதிமன்றம் விசாரிக்க தடையில்லை: உச்ச நீதிமன்றம் உத்தரவு

மருத்துவ படிப்பில் இடஒதுக்கீடு கேட்கும் விவகாரம் உயர் நீதிமன்றம் விசாரிக்க தடையில்லை: உச்ச நீதிமன்றம் உத்தரவு
மருத்துவப் படிப்பில் அகில இந்திய இடஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்டப் பிரிவு மாணவர்களுக்கான இடஒதுக்கீடு கேட்கும் விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் விசாரிக்க எந்தவித தடையும் இல்லை என உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், இதில் உத்தரபிரதேசத்தின் சலோனி குமார் தொடர்ந்த வழக்கும், தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுவும் வேறுபட்டது என நேற்று அறிவித்துள்ளது. 

மருத்துவ படிப்புகளில் 50 சதவீதம் இடஒதுக்கீடு கோரி திமுக உட்டபட தமிழகத்தின் பல்வேறு கட்சிகள் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இதுகுறித்து உயர் நீதிமன்றத்தை அணுகுமாறு உத்தரவிட்டது.
இதையடுத்து தொடரப்பட்ட வழக்கு உயர் நீதிமன்றத்தில் தற்போது நிலுவையில் உள்ளது. 

இந்நிலையில், தமிழக அரசு தரப்பில் கடந்த 2ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், “மருத்துவக் கல்லூரிக்கு இடஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் தமிழகத்திற்கு அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 50 சதவீதம் வழங்க வேண்டும். 

இதுபோன்று இடஒதுக்கீடு கேட்கும் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் உத்தரபிரதேசதத்தை சேர்ந்த சலோனி குமார் தொடர்ந்த வழக்கு என்பது வேறு ஆகும்.

அதனால் எங்களது மனுவை அதோடு ஒப்பிடாமல் தனியாக எடுத்து விரைந்து விசாரித்து ஒரு உத்தரவை பிறப்பிக்க வேண்டும். அதேபோல் உயர் நீதிமன்றத்திற்கும் இதுகுறித்து ஒரு உத்தரவை பிறப்பிக்க வேண்டும்’’ என குறிப்பிடப்பட்டது.

இதேபோன்ற கோரிக்கை கொண்ட மனுவை தமிழகத்தை சேர்ந்த மருத்துவர் டி.ஜி.பாபு என்பவரும் தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து மனுக்களை பரிசீலனை செய்த நீதிமன்றம், இந்த விவகாரத்தில் சலோனி குமார் வழக்கும், அதேபோல் தமிழக அரசு மற்றும் அரசியல் கட்சிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் சாராம்சமும் ஒன்றுபட்டதா என நீதிமன்றம் பரிசீலனை செய்து ஒரு உத்தரவை பிறப்பிக்கும் என கடந்த 9ம் தேதி அறிவித்திருந்தது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நாகேஸ்வரராவ், ஹேமந்த் குப்தா மற்றும் ரவீந்திர பட் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மருத்துவர் டி.ஜி.பாபு தரப்பில் ஆஜரான திமுகவின் மூத்த வழக்கறிஞர் வில்சன் வாதத்தில், “இடஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் திட்டவட்டமான முயற்சியை அனுமதிக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது.

 ஒருவேளை அதனை நிராகரிக்கும்பட்சத்தில் மத்திய அரசின் அணுகுமுறை என்பது நேர்மையாக இருக்காது என்பதுதான் உன்மையாகும். மேலும் இதுபோன்ற சட்டத்திற்கு புறம்பான செயலால்தான் ஓபிசி மாணவர்கள் தங்களுக்கான அங்கீகாரத்தை இழந்து வருகின்றனர்’’ என வாதிட்டார்.


இதையடுத்து தமிழக அரசு தரப்பு வாதத்தில், “சலோனி குமார் என்பவர் உத்தரபிரதேசத்தை சார்ந்தவர் என்பதால், அவரது மாநிலத்திற்கான இடஒதுக்கீட்டை கேட்டுதான் வழக்கு தொடர்ந்துள்ளார். அதனால் எங்களது மனுவிற்கும் அதற்கும் எந்த ஒற்றுமையும் கிடையாது’’ என வாதிடப்பட்டது.

 இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க உயர் நீதிமன்றத்திற்கு எந்த தடையும் கிடையாது. மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி விரைவில் ஒரு இறுதி உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.

மேலும் இடஒதுக்கீடு தொடர்பாக உத்தரபிரதேசத்தின் சலோனி குமார் வழக்கு என்பது வேறு. அதற்கும் தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவின் சாராம்சத்திற்கும் எந்த தொடர்பும் இல்லைஙங என உத்தரவிட்டனர். 

இதைதொடர்ந்து மருத்துவப் படிப்பில் 50 சதவீதம் இடஒதுக்கீடு கேட்கும் விவகாரத்தில் உயர் நீதிமன்றம் விரைவில் ஒரு இறுதி உத்தரவை பிறப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இடஒதுக்கீடு விவாகரம் குறித்து விசாரணை நடத்தி விரைவில் ஒரு இறுதி உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.

No comments:

Post a Comment