அரசு பள்ளி மாணவிகளுக்கு இலவச ஸ்மார்ட்போன் - Minnal Kalvi Seithi

Breaking

Tuesday, July 28, 2020

அரசு பள்ளி மாணவிகளுக்கு இலவச ஸ்மார்ட்போன்

அரசு பள்ளி மாணவிகளுக்கு இலவச ஸ்மார்ட்போன்

கொரோனா வைரஸ் தொற்றால் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், ஆன்-லைன் மூலம் பாடங்களை கற்றுக்கொள்ள பஞ்சாப் அரசு மாணவிகளுக்கு ஸ்மார்ட்போன்கள் வழங்க இருக்கிறது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பள்ளிகளை திறக்க முடியாத சூழ்நிலை உள்ளது.

 இதனால் மாணவர்களின் கல்வியும் எதிர்காலமும் முற்றிலும் கேள்விக் குறியாகியுள்ள நிலையில் பல்வேறு மாநிலங்களில் அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுத்து வருகின்றன.

ஆனால் பள்ளிகளில் தங்களது குழந்தைகளை படிக்க வைக்கும் ஏழை பெற்றோர்களுக்கு ஸ்மார்ட்போன் அல்லது மடிக்கணினி என்பது மிகவும் சவலான ஒன்றாக உள்ளது.

ஸ்மார்ட்போன்கள் இல்லாத மாணவ- மாணவிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனை கருத்தில் கொண்டு பஞ்சாப் அரசு அதிரடி நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளது. அதாவது,  11 மற்றும் 12-ம் வகுப்பு அரசு பள்ளி மாணவிகளுக்கு 50 ஆயிரம் ஸ்மார்ட்போன்கள் வழங்க பஞ்சாப் அரசு முடிவு செய்துள்ளது.

 இதுகுறித்து பஞ்சாப் மாநில முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ‘‘50 ஆயிரம் ஸ்மார்ட்போன்கள் 11-ம் மற்றும் 12-ம் வகுப்பு மாணவிகளுக்கு வழங்குவதற்காக தயார் நிலையில் உள்ளன.

 கொரோனா காலத்தில் மாணவிகள் ஆன்-லைன் மூலம் கல்வி கற்க முன்னுரிமை அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதுமட்டுமல்லாது, பஞ்சாபில், உள்ள அரசு பள்ளிகளில், இந்த ஆண்டிற்கான, சேர்க்கை, மறு சேர்க்கை, கல்வி கட்டணம் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளன.

2020-21 கல்வி ஆண்டிற்கான சேர்க்கை, மறு சேர்க்கை மற்றும் பிற கல்விக் கட்டணங்களை மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளிகள், எந்தவொரு மாணவரிடமிருந்தும் வசூலிக்கக் கூடாது என்று பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment