10ம் வகுப்பு தேர்வில் 100% பாஸ்; மாணவியரை விட மாணவர்கள் அதிக தேர்ச்சி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, August 10, 2020

10ம் வகுப்பு தேர்வில் 100% பாஸ்; மாணவியரை விட மாணவர்கள் அதிக தேர்ச்சி

 10ம் வகுப்பு தேர்வில் 100% பாஸ்; மாணவியரை விட மாணவர்கள் அதிக தேர்ச்சி

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள், நேற்று வெளியாகின. காலாண்டு, அரையாண்டு தேர்வில் பங்கேற்காத மாணவர்கள், 'பெயில்' ஆக்கப்பட்டனர். முதல் முறையாக, மாணவியரை விட, மாணவர்கள் அதிக தேர்ச்சி பெற்று உள்ளனர்.


தமிழகத்தில், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, மார்ச், 27ல், பொதுத் தேர்வு நடப்பதாக இருந்தது. ஆனால், கொரோனா பிரச்னை காரணமாக, தேர்வு தள்ளி வைக்கப்பட்டது. தொடர்ந்து நிலைமை சீராகாததால், பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது.


அறிவிப்பு

தமிழக அரசின் அறிவிப்பின்படி, 10ம் வகுப்பு தேர்வுக்கு விண்ணப்பித்த, அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெறுவதாக அறிவிக்கப்பட்டது. காலாண்டு, அரையாண்டு தேர்வு அடிப்படையில், தேர்ச்சி மதிப்பெண்கள் வழங்கப்படும் என, தெரிவிக்கப்பட்டது. இதன்படி, பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில், காலாண்டு, அரையாண்டு தேர்வு எழுதாத மாணவர்களை தவிர்த்து, மற்றவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.


5,248 பேர் 'பெயில்'

அதாவது, 9.45 லட்சம் மாணவர்களின் விபரம், தேர்வுக்காக பதிவு செய்யப்பட்டிருந்தது. அவர்களில் தேர்வு தேதிக்கு முன், பல்வேறு காரணங்களுக்காக, 231 மாணவர்கள் மரணமடைந்து விட்டனர். 658 மாணவர்கள், கடந்த கல்வி ஆண்டில், படிப்பை பாதியில் கைவிட்டு விட்டனர். மேலும், 4,359 மாணவர்கள், காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் முழுமையாக பங்கேற்க வில்லை.

இதன்படி, மொத்தம், 5,248 மாணவர்கள், தேர்ச்சி பட்டியலில் இடம் பெறவில்லை. இதை தொடர்ந்து, தேர்வு எழுத தகுதி பெற்ற, அனைத்து மாணவ - மாணவியரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம், 9.40 லட்சம் பேர், அதாவது, 100 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.www.minnalkalviseithi.com

மாணவர்கள் அதிக தேர்ச்சி

தேர்ச்சி பெற்றவர்களில், 4.68 லட்சம் பேர் மாணவியர். 15 ஆண்டுகளில் இல்லாத வகையில், முதல் முறையாக, மாணவியரை விட, மாணவர்கள் அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது, மாணவியரை விட, 30 ஆயிரம் அதிகமாக, 4.71 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு, 7,368 மேல்நிலைப் பள்ளிகள், 5,322 உயர்நிலைப் பள்ளிகள் என, 12 ஆயிரத்து, 690 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ - மாணவியர் பதிவு செய்திருந்தனர்.

அனைத்து பள்ளிகளும் முதல் முறையாக, 100 சதவீத தேர்ச்சியை எட்டியுள்ளன. மாற்றுத் திறனாளிகளில், 6,235 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

காஞ்சிபுரம் அதிக தேர்ச்சி!


மாவட்ட அளவிலான தேர்ச்சி பட்டியலில், அதிகபட்சமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில், 26 ஆயிரத்து, 40 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்னை மாவட்டம், 25 ஆயிரத்து, 297 பேருடன், இரண்டாம் இடமும்; வேலுார் மாவட்டம், 25 ஆயிரத்து, 225 பேருடன், மூன்றாம் இடமும் பிடித்து உள்ளன.

மதிப்பெண் சான்றிதழ் 17 முதல் வினியோகம்


பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ், வரும், 17ம் தேதி முதல் வழங்கப்படும். ஊரடங்கால் ரத்து செய்யப்பட்ட, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், அனைத்து மாணவர்களும் தேர்ச்சி செய்யப்பட்டனர். காலாண்டு, அரையாண்டு தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில், பொதுத் தேர்வு மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டு உள்ளன.

தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, 17 முதல், 21ம் தேதி வரையிலான நாட்களில், மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன. சான்றிதழ்களை, பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம் என, அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது. பொதுத் தேர்வு நடத்தப்படாமல், ஏற்கனவே நடந்த பள்ளி தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளதால், மறுகூட்டல் முறை ரத்து செய்யப்பட்டு உள்ளது.

அதற்கு பதில், மதிப்பெண் சார்ந்த குறைகளை, பள்ளி தலைமை ஆசிரியர்கள் வழியாக மாணவர்கள் தெரிவிக்கலாம். மதிப்பெண் குறைவாக இருப்பதாக கருதும் மாணவர்கள், 17 முதல், 25ம் தேதி வரை, பள்ளி தலைமை ஆசிரியர்களிடம், குறை தீர்க்கும் படிவத்தை பூர்த்தி செய்து தர வேண்டும். அதற்கான முடிவுகள், தலைமை ஆசிரியர்கள் வழியே பின்னர் தெரிவிக்கப்படும் என, அரசு தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment