பள்ளிகள் மூடப்பட்ட நிலையிலும் பிளஸ் 2 பயிலும் கிராமப்புற மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கும் ஆசிரியை - Minnal Kalvi Seithi

Breaking

Sunday, August 9, 2020

பள்ளிகள் மூடப்பட்ட நிலையிலும் பிளஸ் 2 பயிலும் கிராமப்புற மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கும் ஆசிரியை

 பள்ளிகள் மூடப்பட்ட நிலையிலும் பிளஸ் 2 பயிலும் கிராமப்புற மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கும் ஆசிரியை

பொது முடக்கத்தால் பள்ளிகள் மூடப்பட்ட சூழலில் பிளஸ் 2 வகுப்புக்குத் தேர்ச்சி பெற்றுள்ள கிராமப்புற மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களைத் தேர்வுக்குத் தயார்படுத்தும் பணியை மேற்கொண்டு வருகிறார் குதிரைச்சந்தல் அரசு மேல்நிலைப் பள்ளியின் தமிழாசிரியை மணிமேகலை.

கள்ளக்குறிச்சி மாவட்டம் குதிரைச்சந்தலில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் சுமார் 800 முதல் 1,000 மாணவர்கள் வரை பயில்கின்றனர். கரோனா தொற்றின் தாக்கம் குறையாத நிலையில் பள்ளிகளும் தொடர்ந்து மூடப்பட்ட சூழலில், அடுத்த வகுப்புக்குத் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் எப்போது பள்ளி திறக்கும் எனக் காத்திருக்கின்றனர். இதனிடையே அரசும் கல்வித் தொலைக்காட்சி வாயிலாக பாடங்கள் நடத்தப்படும் என அறிவித்துள்ளது

இந்நிலையில், பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்கள் வீட்டிலிருந்தே படிக்கும் வகையில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனால் மாணவர்கள் வீட்டிலிருந்தே படிக்கும் சூழல் உருவாகியிருப்பதோடு, கல்வித் தொலைக்காட்சி வாயிலாகவும் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.


இந்த நிலையில், குதிரைச்சந்தல் அரசு மேல்நிலைப் பள்ளியின் தமிழாசிரியை மணிமேகலை என்பவர், மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று, பள்ளி மூடப்பட்டிருக்கும் சூழலில் வீட்டில் அவர்கள் எவ்வாறு பயிலுகின்றனர் என்பதைப் பெற்றோர்களிடம் கேட்டறிவதோடு, தான் உருவாக்கியிருக்கும் வாட்ஸ் அப் குழுக்களின் தகவல் குறித்தும், யூடியூப் சேனல் வழியாக வாரம் ஒருமுறை நடத்தும் இணையவழிக் கல்வி குறித்தும் கேட்டறிகிறார்.

அதோடு மட்டுமின்றி ஸ்மார்ட்போன் இல்லாத மாணவர்களை அவர்களின் வீடுகளில் ஒருங்கிணைத்து தனிமனித இடைவெளியுடன் வகுப்பும் நடத்துகிறார். இதுதவிர, பெற்றோர்களிடம் பொதுத் தேர்வை எதிர்கொள்ளத் துணையாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்துகிறார்.

இந்தத் தகவலறிந்து, ஆசிரியை மணிமேகலையிடம் பேசினோம்.

அப்போது அவர் கூறுகையில், "எங்கள் பள்ளியில் பெரும்பாலானோர் கிராமப்புற மாணவர்கள். அவர்களின் குடும்பச் சூழலை நன்கு அறிவேன். தற்போது மாணவர்கள் பிளஸ் 2 வகுப்புக்குத் தேர்ச்சி பெற்றிருந்த போதிலும், அவர்கள் வீடுகளில் படிக்கும் சூழலைப் பெற்றோர்கள் உருவாக்கவும் இல்லை, அதற்கான கட்டமைப்பு வசதியும் அவர்களிடம் இல்லை.

எனவேதான், என் பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கம் நோக்கத்துடன், பொதுமுடக்கக் காலத்திலும் அவர்களைத் தயார் செய்ய முடிவெடுத்து, முதலில் வாட்ஸ் அப் குழு ஏற்படுத்தி தகவல் பறிமாற்றம் செய்தேன்.

தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு நடத்தப்படுகிறது என்பதை அறிந்த என் மாணவர்களுக்கு அந்தக் குறை ஏற்படக் கூடாது என்பதற்காக ஸ்மார்ட்போன் இருக்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு நடத்துகிறேன்.

ஸ்மார்ட்போன் இல்லாத மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று, அருகருகே இருக்கும் மாணவர்களை ஒருங்கிணைத்து, ஒரு மணி நேரம் தனிமனித இடைவெளியில் வகுப்பு நடத்துவதோடு, வாட்ஸ் அப் மூலம் அவ்வப்போது வழங்கப்படும் பாடக் குறிப்புகளை அவர்கள் சரிவரப் பின்பற்றுகின்றரா என்பதை நேரில் செல்லும்போது அறிந்து கொள்கிறேன்.

கல்வியில் பின்தங்கிய மாவட்டமாக இருப்பதால் நடப்பாண்டு தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்திலும், குடும்பச் சூழலால் மாணவர்களின் இடைநிற்றலைத் தவிர்க்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் இத்தகையை பணியை மேற்கொண்டு வருகிறேன்" என்றார்.

கிராமப்புறங்களில் இயங்கி வரும் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், குறிப்பாக தமிழாசிரியர்கள் மாணவர்களின் நலன் கருதி மேற்கொண்டு வரும் பணிகள் பெற்றோர்களிடத்திலும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அண்மையில், கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளித் தமிழாசிரியை மகாலட்சுமி இதுபோன்று மேற்கொண்டு வந்ததது அனைவரின் பாராட்டையும் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment