ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ் நிரந்தரமாக செல்லும் என அறிவிக்க வேண்டும் - தமிழக அரசுக்கு கோரிக்கை - Minnal Kalvi Seithi

Breaking

Tuesday, August 25, 2020

ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ் நிரந்தரமாக செல்லும் என அறிவிக்க வேண்டும் - தமிழக அரசுக்கு கோரிக்கை

 ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ் நிரந்தரமாக செல்லும் என அறிவிக்க வேண்டும் - தமிழக அரசுக்கு கோரிக்கை

ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ் நிரந்தரமாக செல்லும் என அறிவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு பா.ம.க. இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-


தமிழ்நாட்டில் 2013-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்பட்ட தகுதிச் சான்றிதழ் காலாவதியாகவிருக்கும் நிலையில், அவர்கள் பணி பெறுவதற்கு வசதியாக கடந்த 6 ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியர் நியமனங்களே நடத்தப்படாதது மிகவும் ஏமாற்றமளிக்கிறது. 

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களின் பணி கனவு, கைக்கெட்டியும் வாய்க்கு எட்டவில்லை என்பதற்கு உதாரணமாகிவிடாமல் தமிழக அரசு பார்த்துக் கொள்ளவேண்டும்.


ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ் அடுத்த 7 ஆண்டுகளுக்கு மட்டும்தான் செல்லுபடியாகும். அதனால், 2013-ம் ஆண்டு தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்பட்ட சான்றிதழ்கள் அடுத்த சில வாரங்களில் காலாவதியாகிவிடும். 

அதன்பின் அவர்கள் ஆசிரியர் பணிக்கு தகுதிபெற வேண்டும் என்றால் மீண்டும் தகுதித்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றாக வேண்டும். மீண்டும் எப்போது தகுதித் தேர்வு நடத்தப்படும் என்பதே தெரியாத நிலையில், அவர்கள் அடுத்த தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு முன்பாக ஆசிரியர் நியமனம் மேற்கொள்ளப்பட்டுவிட்டால், அவர்கள் தேர்ச்சி பெற்றது மீண்டும் அர்த்தமற்றதாகிவிடும். 

ஆகவே, 2013-ம் ஆண்டு தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்பட்ட சான்றிதழ்கள் நிரந்தரமாக செல்லுபடியாகும் என்று தமிழக அரசு அறிவிப்பது தான் அனைவருக்கும் நியாயமான தீர்வாக அமையும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

No comments:

Post a Comment