மாணவர் சேர்க்கைக்கு கட்டணம் வசூலிப்பதைக் கண்டித்து பெற்றோர் சாலை மறியல்
திருப்பூர் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு பள்ளி நிர்வாகம் கட்டணம் வசூலித்ததைக் கண்டித்து பெற்றோர் சாலைமறியலில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர்.
திருப்பூர், குமார் நகரில் செயல்பட்டு வரும் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் தற்போது பிளஸ் 1 மாணவியர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சங்கம் சார்பில் 5 ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு ஊதியம் கொடுப்பதற்காக பள்ளி நிர்வாகம் சார்பில் சேர்க்கைக்கு வரும் மாணவர்களின் பெற்றோர் ஒவ்வொருவரிடமும் ரூ.1,000 முதல் ரூ.3,000 வரையில் நன்கொடை கேட்டதாகத் தெரிகிறது. இதனால் அதிருப்பதியடைந்த மாணவர்களின் பெற்றோர் 50க்கும் மேற்பட்டோர் அவிநாசி சாலையில் குமார் நகர் பேருந்து நிறுத்தம் முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலுமாக தடைபட்டது.
இதுகுறித்த தகவலின்படி சம்பவ இடத்துக்கு விரைந்த திருப்பூர் வடக்கு காவல் துறையினர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நன்கொடை வசூலிக்கும் பள்ளி நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததன் பேரில் மறியிலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து திருப்பூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரமேஷிடம் கேட்டபோது, மாணவர்களின் பெற்றோரிடம் பள்ளி நிர்வாகிகள் நன்கொடை கேட்டது தவறாகும். இதுதொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், வெள்ளிக்கிழமை 50 மாணவர்கள் பிளஸ் 1 வகுப்பில் கட்டணமின்றி சேர்க்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment