பிரதமர் உதவியால் கேந்திரய வித்யாலயாவில் படித்து வரும் தமிழக மாணவி - Minnal Kalvi Seithi

Breaking

Sunday, August 30, 2020

பிரதமர் உதவியால் கேந்திரய வித்யாலயாவில் படித்து வரும் தமிழக மாணவி

 பிரதமர் உதவியால் கேந்திரய வித்யாலயாவில் படித்து வரும் தமிழக மாணவி


திருவாரூர் அருகே கேந்திரிய வித்யாலயா பள்ளியில் சேருவதற்கு ஏழை மாணவிக்கு உதவிபுரிந்து, பள்ளிக் கட்டணம் செலுத்துவதிலிருந்து இந்திய பிரதமர் மோடி  விலக்களித்து வருகிறார். அவர் மீது கொண்ட பற்றால் தம் பெயருடன் மோடி பெயரையும் மாணவி சேர்த்துக்கொண்டார்.

 

 திருவாரூர் அருகில் உள்ள பவித்திரமாணிக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் குணசேகரன். இவர் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கியில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர்.


இவரது மகள் ரக்ஷிதா பவித்திரமாணிக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆங்கிலப் பிரிவில் முதல் வகுப்பு பயின்று வந்தார். கேந்திரிய வித்யாலயா பள்ளியில் சேர்ந்து படிக்க வேண்டும் என்ற தணியாத ஆவல் இருந்து வந்தது. எனவே கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் இலவச கல்வி பயில்வதற்கு 2015-ஆம் ஆண்டு திருவாரூரிலுள்ள கேந்திர வித்யாலயா பள்ளிக்கு விண்ணப்பம் போட்டார்


துரதிருஷ்டவசமாக அவருக்கு இலவசக் கல்வி பயில்வதற்கான வாய்ப்புக் கிட்டவில்லை. இதனை அறிந்து சோர்வடைந்த ரக்ஷிதா மற்றும் அவரது பெற்றோர், இந்திய பிரதமர் மோடிக்கு தபால் மூலமும், மெயில் மூலமும் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் சேருவதற்கு உதவி புரிய வேண்டி கடிதம் எழுதியுள்ளனர்.


தொடர்ந்து இரண்டு மூன்று கடிதங்கள் எழுதிய பின்னர், பிரதமர் அலுவலகத்திலிருந்து பிரதமர் கோட்டாவில் பள்ளியில் சேருவதற்கான அனுமதி வழங்கி, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறைக்குத் தகவல் தெரிவித்து, ரஷிதாவுக்கும் தகவல் வந்துள்ளது.


இதனை எடுத்துக்கொண்டு கேந்திரிய வித்யாலயாப் பள்ளிக்குச் சென்ற போது, பள்ளி முதல்வர் ஹிந்தி தெரிந்தால்தான் பள்ளியில் சேர்க்க முடியும் என்ற நிபந்தனை விதித்தாகத் தெரிகிறது. இதன் காரணமாக இரண்டே நாட்களில் ஹிந்தி எழுத்துக்கள் எழுதுவதற்கும், படிப்பதற்கும் கற்றுக்கொண்ட ரக்ஷிதா பள்ளி முதல்வரிடம் எழுதிக் காண்பித்து 2016-ஆம் ஆண்டு பள்ளியில் இரண்டாம் வகுப்பில் சேர்ந்துள்ளார்.


இரண்டாவது சேரும்போது மட்டும் கல்விக் கட்டணம் செலுத்தி உள்ளார். குடும்பத்தின் ஏழ்மை நிலையைக் கருத்தில் கொண்டு, கல்விக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கவோ அல்லது உதவி புரியவோ வேண்டி மீண்டும் பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.


இதனைத் தொடர்ந்து சென்னையில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் மண்டல இயக்குனர் அலுவலகத்திற்கு, பிரதமர் அலுவலகத்திலிருந்து பள்ளிக் கட்டணம் விலக்களிப்பது குறித்த தகவல் அனுப்பப்படும். இந்தத் தகவல் திருவாரூர் கேந்திரியா வித்யாலயாப் பள்ளிக்கு அனுப்பப்பட்டு திருவாரூர் மாணவி ரஷிதா கல்வி கட்டணம் செலுத்தாமல் தொடர்ந்து பிரதமரின் உதவியின் மூலம் படித்து வருகிறார்.


இதுபோன்று ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. இந்த பிரதமரின் உத்தரவுக் கடிதம் வருவதற்கு, சில நாட்கள் தாமதமானால் பள்ளி முதல்வர், வகுப்புக்கு அனுமதிப்பதில்லை என ரக்ஷிதாவின் தந்தை வேதனையுடன் தெரிவித்தார்.


பிரதமரின் உதவியால் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் சேர்ந்து அவரது உதவியால் தொடர்ந்து படித்து வருகிற ரக்ஷிதா, பிரதமருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தனது பெயரை மோடி ரக்ஷிதா என மாற்றிக் கொண்டுள்ளார்.


இரண்டாம் வகுப்பில் சேர்ந்து பிரதமரின் உதவியால் தற்போது ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். தனது வாழ்க்கையில் விடிவெள்ளியாக, வெளிச்சம் காண்பித்த இந்தியப் பிரதமரை ஒரு முறை நேரில் சந்திக்க வேண்டும் என்ற ஆவல் உள்ளதாக ரஷிதா தெரிவித்தார்.


மேலும் கல்வியில் கவனம் செலுத்தி நல்ல முறையில் படித்து இந்திய நாட்டிற்கும், இந்தியாவில் உள்ள ஏழை எளிய மக்களுக்கும் சேவை ஆற்றுவது தனது ஆசை எனத் தெரிவித்தார்.

No comments:

Post a Comment