வெளிமாவட்டங்களில் இருந்து இ-பாஸுடன் வருவோர் ஓட்டுனர் உரிமத்தை ஒப்படைத்தால் மட்டுமே இந்த மாவட்டத்திற்குள் அனுமதி
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வெளியூர்களில் இருந்து வாகனங்களில் வருவோர் முறையாக இ-பாஸ் வைத்திருந்தாலும், அவர்களின் ஓட்டுனர் உரிமத்தை ஒப்படைத்தால் மட்டுமே மாவட்டத்திற்குள் அனுமதித்து சோதனைச் சாவடியில் கெடுபிடி காட்டப்படுகிறது.
இதனால் வெளியூர் பயணிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
கன்னியாகுமரி மாட்டத்திற்கு வெளியூர்களில் இருந்து தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்களில் பயணிகள் பல்வேறு அவசரத் தேவைகளுக்காக வந்துவிட்டுச் செல்கின்றனர்.
ஏற்கெனவே பலமுறை விண்ணப்பித்து இ-பாஸுடன் பலர் வந்தனர். தற்போது இ-பாஸ் முறையில் தளர்வுகள் செய்யப்பட்டதால் கடந்த ஒரு வாரமாக வழக்கத்தைவிட இரு மடங்கு அதிகமான வாகனங்கள் வந்து செல்கின்றன.
இதனால் ஆரல்வாய்மொழி சோதனை சாவடியில் இருந்து திருநெல்வேலி, திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே ஆரல்வாய்மொழி கரோனா கண்காணிப்பு சிறப்பு சோதனைச் சாவடியில் வெளியூர்களில் இருந்து இ பாஸ் பெற்று வரும் வாகனங்களுக்கு காட்டப்பட்டுவரும் கெடுபிடிகளால் பயணிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர்.
அதாவது சென்னை உட்பட தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மருத்துவம், திருமணம், மற்றும் தவிர்க்கமுடியாத அவசர நிகழ்ச்சிகளுக்காக வாகனங்களில் வந்து விட்டு அன்றே மீண்டும் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்வதற்காக முறையாக இ பாஸ் பெற்று அதிகமானோர் வருகின்றனர்.
இது போன்று ஒரே நாளில் வந்து விட்டு திரும்புவோரின் இ பாஸ்களை பரிசோதனை செய்யும் சோதனை சாவடி அதிகாரிகள், அசல் ஓட்டுனர் உரிமத்தையும் ஒப்படைத்தால் மட்டுமே குமரி மாவட்டத்திற்குள் செல்வதற்குள் அனுமதிக்க முடியும். திரும்பி ஊருக்கு செல்லும்போது ஓட்டுனர் உரிமத்தை பெற்று செல்லலாம் என்ற நடைமுறையை வைத்துள்ளனர்.
நேற்று மாலையில் இருந்து ஆரல்வாய்மொழி சோதனைச் சாவடியில் இம்முறை கடைபிடிக்கப்படுகிறது. இதனால் வெளியூர்களில் இருந்து வரும் வாகன ஓட்டிகளுக்கும், சோதனை சாவடி அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது.
இ பாஸ் முறையாக இருந்தும், அசல் ஓட்டுனர் உரிமத்தை வழங்கும் நடைமுறைக்கு வெளியூர்களில் இருந்து வருவோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சோதனை சாவடியை தாண்டி கன்னியாகுமரி, மார்த்தாண்டம், நாகர்கோவில் என முக்கியப் பகுதிகளுக்கு வாகனத்தில் செல்லும்போது ஓட்டுனர் உரிமத்தை போலீஸார் பரிசோதனை செய்தால் அதை காண்பிக்க முடியாத நிலை உள்ளது.
அதுமட்டுமின்றி ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனத்தை ஓட்டுவது போன்ற குற்ற உணர்வு ஏற்படுகிறது. எனவே அசல் ஓட்டுனர் உரிமத்தை கட்டாயமாக சோதனைச் சாவடியில் ஒப்படைக்கும் முறையை ரத்து செய்யவேண்டும் எனத் தெரிவித்தனர்.
இது தொடர்பாக சோதனைச் சாவடி அதிகாரிகளிடம் கேட்டபோது; வெளியூர்களில் இருந்து ஒரே நாளில் வந்துவிட்டு செல்வதற்கு இ பாஸ் பெற்றவர்கள், பல நாட்கள் கன்னியாகுமரி மாவட்டத்திற்குள்ளே சுற்றி திரிவதும், இதனால் கரோனா பரவலுக்கு முக்கிய காரணமாவதும் தெரியவந்துள்ளது.
இதனால் தான் அன்றே திரும்புவோர்கள் சோதனை சாவடி வழியாகத்தான் செல்லப்போகிறார்கள். ஓட்டுனர் உரிமம் சோதனைச் சாவடியில்
இருப்பதால் விதிமுறையை முறையாகப் பின்பற்றி குறித்த நேரத்தில் திரும்பி செல்கின்றனர்.
அதிக காலதாமதமாகாமல் அவற்றை நாங்கள் திரும்பி வழங்கி வருகிறோம் என்றனர்.
No comments:
Post a Comment