நீட் ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர்களின் சான்றிதழ்கள் எங்கே? - Minnal Kalvi Seithi

Breaking

Tuesday, August 25, 2020

நீட் ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர்களின் சான்றிதழ்கள் எங்கே?

 நீட் ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர்களின் சான்றிதழ்கள் எங்கே?

நீட் தேர்வு ஆள்மாறாட் வழக்கில் கைதான மாணவர்கள் இருவரின் உண்மையான கல்வி சான்றிதழ்கள் எங்கு உள்ளது? என்பதை அரசு வழக்கறிஞர் தெரிவிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


சென்னையை சேர்ந்தவர் உதித்சூர்யா. இவர் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் உள்ளார்.


இவர் போலீஸார் தன்னை கைது செய்த போது பறிமுதல் செய்த உண்மை சான்றிதழ்களை திரும்ப வழங்கக்கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.


அதில், ஆள்மாறாட்ட வழக்கில் விசாரணை முடிந்துவிட்டது. விசாரணையின் போது எனது 10, 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், பள்ளி மாற்றுச்சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.


இந்த ஆவணங்கள் அனைத்தும் நீதித்துறை நடுவர் மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன.


தற்போது கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர முடிவு செய்துள்ளேன். இதற்கு கல்வி சான்றிதழ்களை கேட்கின்றனர்.


எனவே தேனி நீதித்துறை நடுவர் மன்றத்தில் உள்ள எனது கல்விச் சான்றிதழ்களை என்னிடம் வழங்க உத்தரவிட வேண்டும்.


இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.


இவரைப்போல் மற்றொரு மாணவரும் கல்விச் சான்றிதழ்களை கேட்டு மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுக்கள் நீதிபதி பொங்கியப்பன் முன்பு விசாரணைக்கு வந்தது.


மனுதாரர்கள் தரப்பில், மாணவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட சான்றிதழ்கள் எங்கிருக்கிறது எனத் தெரியவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.


இதையடுத்து, மாணவர்கள் இருவரின் உண்மையான கல்விச் சான்றிதழ்கள் எங்கு உள்ளன? அந்த சான்றிதழ்கள் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களுடன் உள்ளதா? இல்லையா? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.


இது தொடர்பாக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஆக. 28-க்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

No comments:

Post a Comment