வெற்றி பெறுமா புதிய கல்விக்கொள்கை? - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, August 8, 2020

வெற்றி பெறுமா புதிய கல்விக்கொள்கை?

 வெற்றி பெறுமா புதிய கல்விக்கொள்கை?

விடுதலைக்கு பின், நாட்டில் பல கல்விக் கொள்கைகள் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளன. அவற்றின் வெற்றியின் அடையாளம் தான், இன்று இந்தியா உலக அரங்கில் தலைநிமிர்ந்து நிற்கும் காட்சி. 

இந்தக் கல்விக் கொள்கைகள்,~ குறிப்பிட்ட கால அளவுகளில் முழுமையுமாக செயல்படுத்த முடியாமல் போனவை என்பதனாலேயே, 'பெருங்குறையுடவை' என்று சொல்லிவிட முடியாது.மாற்றுக்கட்சி அரசுகள், இக்கொள்கைகளில், அவ்வப்போது சிறு சிறு மாற்றங்கள் செய்து நடைமுறைப்படுத்தி வந்துள்ளன. 

இது, எல்லா நாடுகளிலும் நடைபெறும் செயல் தான். கல்விக் கொள்கைகளை, எந்த நாடும், குறுகிய காலங்களில் மாற்றிக்கொள்ளாது. அவ்வாறு செய்வது, முன்னேற்றத்துக்கு உறுதுணையாயிருக்காது.இந்தப் பார்வையில், புதிய கல்விக் கொள்கையை, படிநிலை வளர்ச்சி என்றே கொள்ள வேண்டும்.

 ஆனாலும், இந்த படிநிலை வளர்ச்சி, இயல்பான ஒன்றாக இல்லாமல் இருப்பது தான் பலரின் கவலைக்கு காரணம்.தலையாய நிகழ்வுஇந்தக் கொள்கை நிறைவேற்ற முடியாத பல திட்டங்களை கொண்டுள்ளதைப் கணிக்க முடிகிறது. 


இக்கல்விக் கொள்கை முதற்கட்ட ஏற்பைப் பெற்று விட்டது. இனி, அது சட்டமாகி நடைமுறைக்கு வர வேண்டும்.இப்போது பெரும்பாலான கருத்துப் பரிமாற்றங்கள், பள்ளிகளின் மும்மொழி கொள்கையையும், மூன்று, ஐந்து, எட்டாம் வகுப்பு தேர்வுகள் பற்றியும் மட்டுமே ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன.இவையும் மிக முக்கியமானவை தான். 

ஆனாலும், உயர் கல்வியமைப்பு மாற்றங்களிலும் மொழி நிலையும், குறிப்பாக, ஆங்கிலத்தின் இடமும் முன்னுரிமை பெற வேண்டியுள்ளது. அதுபற்றிய கருத்துப் பரிமாற்றங்கள் விரைவில் தொடரலாம்.இங்கு நாம் கருத்தில் கொள்ளப்போவது, இன்னொரு தலையாய பொருளாகும்.அது தான், அனைத்து வகை உயர் கல்வி நிறுவனங்களையும் பல்துறை பல்கலைக் கழகங்களாகவும், தன்னாட்சி பல்துறைக் கல்லுாரிகளாகவும் மாற்றங்கள் செய்யும் செயலாகும்.இச்செயல், நடைபயணத்தில் இமய உச்சியைத் தொடும் முயற்சியாகவே தென்படுகிறது. 

எடுத்துக்காட்டுக்கு, உயர்கல்வித் துறையின், ஒரு தலையாய நிகழ்வைத் தொட்டுக் காட்டுவோம்.'நாட்டின் அனைத்து வகை உயர் கல்வி நிறுவனங்களின் தகுதிகள் கண்டறியப்பட்டு, அவை மேலும் தரம் பெற ஊக்குவிக்க வேண்டும்' என்ற உயரிய குறிக்கோளுடன் ஓர் அமைப்பு, 'தேசிய மதிப்பீடு மற்றும் பதிவு செய்யும் மன்றம் ~ நாக்' என்ற பெயரில், இப்போது செயல்பட்டு வருவதை நாமறிவோம்.

இந்த அமைப்பிடம், நாட்டின், 'உயர்கல்வி நிறுவனங்கள் அனைத்தும் தம்மை அடையாளம் காட்டி, மதிப்பீடும் பதிவும் செய்து கொள்ளவேண்டியது கட்டாயம்' என்று, 1994ல், முந்தைய கல்விக்கொள்கை அறிவிப்பு செய்தது. அந்த அறிவிப்பு ~ இன்று, 26 ஆண்டுகள் கழித்து, மாற்றுக்கட்சி நடுவண் அரசுகள் மாறி மாறிப் பதவியில் இருந்தும், எந்த நிலையில் உள்ளது...

அந்த அமைப்பின் குறிப்புகள், 'மார்ச், 2020 வரை, 304 பல்கலைக்கழகங்களும், 4,090 கல்லுாரிகளும் மட்டுமே எம்மிடம் மதிப்பீடும் பதிவும் பெற்றுள்ளன; 600~க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களும், 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லுாரிகளும் எம்மை அணுகவில்லை' என்று தெரிவிக்கிறது.சரியான கட்டமைப்பில்லைகடிய கட்டாயம் இருந்தும்,

 'நாக்'கின் அறிவுறுத்தலை, 63 சதவீதத்திற்கும் மேலான பல்கலைக்கழகங்களும், 88 சதவீதத்திற்கும் மேலான கல்லுாரிகளும் ஏன் பல்லாண்டுகளுக்கு புறம்தள்ளி இயங்குகின்றன?

காரணம் இது தான்... 'நாக்'கிடம் போனால், தம் பரிதாப நிலை அம்பலமாகிவிடும் என்ற அச்சம் தான்!'நாக்' கேட்கும் எந்தக் கேள்விக்கும் அவற்றிடம் பதில் இல்லை என்ற உண்மை தான்.சரியான கட்டமைப்பில்லை; தரம்மிக்க ஆசிரியர்கள் இல்லை; குறிப்பிடத்தக்க ஆய்வு முயற்சிகள் இல்லை; சமூகத்தோடு தொடர்பில்லை; இல்லை இல்லை இல்லை என்றால், தலைகாட்ட யாருக்கு விருப்பம் வரும்?'நாக்' குறிப்பிடும் வெளிப்படை உண்மை என்னவென்றால், 'இந்தப் பல்கலைக்கழகங்களும், கல்லுாரிகளும், பெரும்பாலும் மாநில அரசுப் பல்கலைக்கழகங்களும், சிறிய நகர்ப்புறம் ~ கிராமப்புறங்களில் இருக்கும் நிறுவனங்களுமே ஆகும்'

 என்பது தான்.மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவிகள் போதிய அளவுக்குக் கிடைக்காததால் அவை சோம்பிக் கிடக்கின்றன.கிராமப்புறப் பகுதிகளில் வாழும், மாணவ~ ~ மாணவியர் பெருநகர்ப் புறங்களில் செழிப்பாயிருக்கும் நிறுவனங்களுக்கு போக முடியாத பொருளாதார சூழ்நிலையில், தகுதி மிக்க உயர் கல்வி பெற முடியாமல் ~இருக்கின்றனர்.

தரம் குறைந்த மாநிலப் பல்கலைக்கழகங்கள், கிராமப்புறக் கல்லுாரிகளின் பெரும் எண்ணிக்கைகள், அங்கெல்லாம் உயர்கல்வி பயிலும், மாணவ~ ~ மாணவியரின் எண்ணிக்கைகளைப் பறைசாற்றும்.இந்த இருள் படிந்த பின்புலத்தில் நாம் நிற்பதால் தான், முன்வைக்கப் பட்டுள்ள புதிய கல்விக்கொள்கை, கிராமப்புறம் நோக்கிப் பரப்பப் போகும் ஒளி பற்றிய பெரும் சந்தேகம் எழுகிறது.

சோம்பிக் கிடக்கும் இந்த மாநில அரசு, கிராமப்புற உயர்கல்விக் கூடங்களைத் தரம் மிக்க, 'நாக்'கின் அல்லது அதன் மறு உருவாக வரப்போகும் தரக்கட்டுப்பாடு பேணும் ஓர் அமைப்பின் மதிப்பீடும், பதிவும் பெறும் உயரிய வகை, பல் துறைப் பல்கலைக்கழகங்களாகவும், தன்னாட்சிப் பல்துறைக் கல்லுாரிகளாகவும் மாற்றும் புதிய கல்விக் கொள்கையின் முயற்சி, எந்த அளவுக்கு வெற்றி பெறும்...'இந்த நிறுவனங்களின் மேம்பாட்டுக்கென தனித்த அமைப்பு, சிறப்பு நிதியுதவிகள் உண்டு' என்ற குறிப்பை, புதிய கொள்கை தெரிவிக்கவில்லை.'மாவட்டம் ஒவ்வொன்றிலும் குறைந்தது, ஒரு பல்துறை பல்கலைக்கழகமாவது இருக்கும்; தேவைப்பட்டால் புதிதாகவும் அவை உருவாக்கப்படும்' என்று கல்விக்கொள்கை குறிப்பிடுவது நற்செய்தி தான்.

'அப்படி உருவாகும் புதிய பல்கலைக்கழகங்கள் வேண்டிய எண்ணிக்கையில் சிறுநகர் ~ கிராமப்புறப் பகுதிகளில் உருவாக்கப்படுமா' என்பதும், அவை மெலிந்த கல்லுாரிகள் அனைத்தையும், தம்மோடு இணைத்து, அவற்றை மேம்படுத்தி, 2030, 2040ம் ஆண்டுகளில் உயர்கல்வியின் கோபுரங்களாக ஒளிர வைக்குமா' என்பதும் தான் நம் கவலை.

வசிக்குமிடத்தாலும், பொருளாதாரத்தாலும் விரட்டப்பட்டு, தரம் மிக்க, வேலைவாய்ப்புக்கான உயர்கல்விக்கு ஏங்கி நிற்கும், 70~க்கும் மேற்பட்ட விழுக்காடு இளைய சமுதாயத்தை, இப்போதைய நிலையிலேயே புதிய கொள்கையும் கைவிட்டு விடுமா; உரிய பதில் வேண்டும்.'கல்விக்கான நிதி ஒதுக்கீடு, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 6 சதவீதம் அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது' என்ற குறிப்பு, கடந்த கல்வித்திட்டங்களின் காலங்களில் நடைபெற்றது போலவே அறிவிப்போடு நின்று விடுமா, இல்லை, உரிய காலங்களில் நிதி விடுவிக்கப்பட்டு சிறுநகர்ப்புற ~ கிராமப்புறக் கல்வி நிறுவனங்களுக்கும் உரிய பங்கு கிடைக்குமா; யாரிடம் உறுதி கேட்பது?

உரத்த குரல் கொடுப்போம்

தாய்மொழியில் பள்ளி~ உயர்கல்வி, பாரம்பரியக் கலை~ பண்பாடு~ பாதுகாத்து வளர்த்தல், அதன் பயன்களை, தக் ஷசீலா, நாலந்தா, விக்ரம்சீலா, வல்லபி பல்கலைக்கழகங்களிடமிருந்து நம் மூதாதையர் பெற்றது போன்ற மாட்சியை மீட்டுருப்படுத்தல் ~என்னும் பழம் பெருமைக் கனவுக் காட்சிகள் நம் மனத்திரையில் ஓடிக் கொண்டிருக்கட்டும்!கல்விக்கொள்கை ~ 2020ன் இரண்டாம் முயற்சியான சட்டமாதல், மூன்றாம் முயற்சியான, நடைமுறைப் படுத்துதலுக்கு காத்து இருப்போம். 

காத்திருக்க விருப்பமில்லை என்றால், கிராமப் புறங்கள் பற்றிய காந்தியக் கனவு மாற்றங்களுக்கு இப்போதே உரத்த குரல் கொடுப்போம்!பேராசிரியர் ப.க.பொன்னுசாமிமுன்னாள் துணைவேந்தர்சென்னை பல்கலைக்கழகம்மதுரை காமராசர் பல்கலைக்கழகம்தொடர்புக்கு:95002 89552இ ~ மெயில்: ponnu.pk@gmail.com


No comments:

Post a Comment