தேர்வை ரத்து செய்வதற்கான அதிகாரத்தை  மாநிலங்கள் எடுத்துக்கொள்ள முடியாது:UGC - Minnal Kalvi Seithi

Breaking

Monday, August 10, 2020

தேர்வை ரத்து செய்வதற்கான அதிகாரத்தை  மாநிலங்கள் எடுத்துக்கொள்ள முடியாது:UGC

 தேர்வை ரத்து செய்வதற்கான அதிகாரத்தை  மாநிலங்கள் எடுத்துக்கொள்ள முடியாது:UGC

பல்கலைக்கழகத் தேர்வை ரத்து செய்வதற்கான அதிகாரத்தை யுஜிசியிடமிருந்து மாநிலங்கள் எடுத்துக்கொள்ள முடியாது. தேர்வு இல்லாவிட்டால் சான்றிதழ் இல்லை என உச்ச நீதிமன்றத்தில் யுஜிசி தரப்பு தெரிவித்துள்ளது.


பல்கலைக்கழக இறுதியாண்டு, செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்யக் கோரி நாடு முழுவதும் 31 மாணவர்கள் மனுத்தாக்கல் செய்தனர். இதன் மீதான விசாரணையில், பல்கலைக்கழக இறுதியாண்டு, செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்யக் கோரி இடைக்கால உத்தரவைப் பிறப்பிக்க உச்ச நீதிமன்றம் மறுத்திருந்தது.


இது தொடர்பான மனுக்கள் உச்ச நீதிமன்ற நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு முன் ஜூலை 31-ல் விசாரணைக்கு வந்தன.


யுஜிசி சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வைத்த வாதத்தில், ''செப்டம்பர் மாதம் இறுதிக்குள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள பல்கலைக்கழக இறுதியாண்டு, செமஸ்டர் தேர்வுகளை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துவிட்டதென்ற எண்ணத்துக்கு ஆட்படக்கூடாது. மாணவர்கள் தொடர்ந்து தேர்வுக்குத் தயார் செய்ய வேண்டும்'' என வலியுறுத்தியிருந்தார்.


இந்த விவகாரம் தொடர்பாக, மாநில பேரிடர் மேலாண்மைக் குழுவின் அறிக்கையைத் தாக்கல் செய்ய மகாராஷ்டிர அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.


இந்நிலையில் இதன் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் வந்தது.


அப்போது பதிலளித்த யுஜிசி தரப்பு, ''தேர்வுகள் கட்டாயம் நடத்தப்படவேண்டும். தேர்வுகள் எழுதாத மாணவர்களுக்குச் சான்றிதழ் வழங்கப்பட மாட்டாது. இதுதான் சட்டமாகவும் இருக்கிறது. எனவே பல்கலைக்கழகங்களின் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு கட்டாயம் நடத்தப்பட வேண்டும்.


மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட அரசுகள் யுஜிசியின் அறிவிப்பை மீறும் வகையில் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் தானாகத் தேர்வுகளை ஒத்திவைத்துள்ளது. இது அப்பட்டமான விதிமீறல். கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்குப் பட்டங்களை அளிக்கும் ஒரே அதிகாரபூர்வ அமைப்பு யுஜிசி ஆகும்.


அப்படி இருக்கையில், தேர்வுகளை ரத்து செய்துவிட்டு பட்டங்களை வழங்கவேண்டுமென மாநிலங்கள் எப்படி எதிர்பார்க்க முடியும்? கோர முடியும்? தேர்வு ரத்து செய்வது தொடர்பாக யுஜிசி மட்டுமே முடிவெடுக்க முடியும். மாநில அரசு அல்ல. எனவே, இந்த விவகாரம் தொடர்பாக விரிவான பதில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும்'' எனத் தெரிவித்தது.


அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், பேரிடர் மேலாண்மைச் சட்டம், யுஜிசி வழிகாட்டுதல்களைக் கட்டுப்படுத்த முடியுமா? எனக் கேள்வி எழுப்பினர். இது தொடர்பாக மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 14-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்

No comments:

Post a Comment